அன்றைக்கு நாம் வாழ்ந்த நலமான வாழ்விழந்தோம்
இன்றைக்கு நாட்டிலே எங்கு திரும்பிடினும்
புற்றுநோய்!, எங்கிருந்து புதிதாக முளைத்ததிது?
மற்றுச் சில உணவுகளில் மரணத்தைத் தேடுகிறோம்.
தகரத்தில் அடைத்ததுவும் பிளாஸ்ரிக்கில் நிரப்பியதும்
நிகரற்ற பொருள் என்று நீட்டி முழக்குகிறோம்!
நகரத்து வாழ்க்கைக்கு நாளாந்தம் பழகியதால்
நுகரும் பொருளிலெல்லாம் நோய் சேர்த்தே வாங்குகிறோம்.
உரம் தெளித்துப் பளபளப்பாய் மினுங்கும் மரக்கறிகள்
மரத்தோடு சேர்த்து வைத்து மருந்தடித்த மாங்கனிகள்
நிறத்தால் நமைக் கவரும் வாழைப்பழக் குலைகள்
திறமென்று வாங்குகிறோம் தீயதெல்லாம் தேடுகிறோம்.
செயற்கை நிறமூட்டிச் சுவையூட்டி மணமூட்டி
இயற்கை விதிகளுக்கு முரணாக முளைத்த பல
மயக்கும் பொருள்களின்று மலிவாகச் சந்தையிலே
தயக்கம் எதுவுமின்றித் தாராளம் காட்டுகிறோம்
மரபணுவை மாற்றி வைத்து மாசாக்கி பல சேர்த்து
உரம் போட்டு நஞ்சு உடலெல்லாம் ஊறவிட்டுத்
தரமற்ற தென்று அவர் தம் நாட்டில் ஒதுக்கியதை
வரமென்று வாங்கியுண்டு வலி சுமந்து வாடுகிறோம்.
ஊர்க்கோழி அடித்து உச்சுக் கொட்டிச் சாப்பிட்டு
போர்க்கோலம் பூண்டு புடைத்து திரிந்தவர்கள்
ஏர்க்கால் பிடித்துழுது ஏற்றமுடன் வாழ்ந்தவர்கள்
சேர்க்காத தீனையெல்லாம் தின்று நிதம் சாகின்றோம்.
Dr.கதிரேசபிள்ளை தர்ஸனன்
மாவட்ட பொது வைத்தியசாலை
சிலாபம்.