தரம் 8 வகுப்பறை. காலை 8.00 மணி. ஏனைய மாணவர்கள் எல்லோரும் உடற்பயிற்சிக்காக மைதானம் சென்று விட்டார்கள். றொசானும், சுரேசும் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். றொசான் தான் அந்த வகுப்பில் மிகவும் குண்டான பையன். தசைகள் தொங்கும்படியும் கழுத்து, கை மடிப்புக்களில் தோல்தடித்து கறுத்தும் எப்பொழுதும் மனச்சோர்வுடனும் காணப்படுவான். வகுப்பறையில் கடைசி மூலை தான் அவனது இடம்.
மற்றவர்களால் “குண்டா“ எனஅழைக்கப்படும் அவனை, முன்வரிசையில் இருந்தால் கரும்பலகை மறைக்கிறது என சக மாணவர்கள் சண்டைக்கு இழுப்பார்கள். இதை விட எல்லாப் பாடவேளைகளிலும் இடைவிடாது நித்திரை கொள்ள அவனுக்கு அதுதான் சரியான இடமும்கூட சுரேஸ் பார்ப்பதற்கு மெலிந்து நலிந்த உருவம் உள்ளவன், குள்ளமானவன் எதற்கும் உடனே களைத்து விடுவான். தவணைப் பரீட்சையில் இறுதி மாணவனாக வருவது சுரேஸ் அல்லது றொசானின் வழக்கமாகிவிட்டது.
அதீத உடற்பருமன் (Obesity) அண்மைக்காலங்களில் பள்ளிச்சிறார்களையிடையே அதிகரித்து வருகிறது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு பெற்றோர்களுடையே குறைவாக உள்ளது. இதுபற்றி சில கேள்விகள் உங்களிடையே தோன்றக்கூடும்.
ஒரு குழந்தை தனது உடற்பருமனை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்
உடற்பருமனானது ஒருகுழந்தையின் வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. குழந்தையின் உயரத்திற்கும் வயதிற்கும் பொருத்தமான நிறையை தீர்மானிப்பதற்கு 18 வயது வரையான பிள்ளைகள் தங்களது பிள்ளைவளர்ச்சிக்குறிப்பேட்டில் உள்ள (அம்மாகாட்) “நிறை-வயது” வரைபை பயன்படுத்த வேண்டும். அந்த வரைபில் குறிப்பிட்டுள்ளவாறு ஊதா, சிவப்பு நிறங்களில் வருபவர்கள் ஆரோக்கியம் மற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அதாவது மேலே குறிப்பிட்ட றொசான், சுரேஸ் போன்றவர்கள். 18 வயதிற்கு குறைந்தவர்கள் உடற்திணிவு சுட்டெண்ணை மட்டும் பயன்படுத்தி தமக்குரிய நிறையை தீர்மானிப்பது பொருத்த மற்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது உடற்திணிவுச்சுட் டெண்ணை ( (BMI) 18.5-23 இற்குள் பேணவேண்டும்.
அண்மைக்காலங்களில் பள்ளிச்சிறார்களிடையே உடற்பருமன் அதிகரித்து வருவதன் காரணம் சிறுவயதில் இருந்தே அதிகரிக்கும் படிப்புச்சுமையால் பிள்ளைகள் ஓடி ஓடி விளையாடாமை, தொடர்ச்சியாக கணிணி விளையாட்டுக்கள் (COMPUTER GAME), கையடக்கத்தொலைபேசி விளையாட்டுக்களில் (PHONE GAME) ஈடுபடுதல், முறையற்ற உணவுப்பழக்கங்கள், சீரற்ற ஓமோன் தொழிற்பாடு, பரம்பரைக் காரணங்கள் மற்றும் சில மருத்துவப் பாவனைகள் எனப்பல காரணங்கள் அண்மைக்காலங்களில் பள்ளிச்சிறார்களிடையே உடற்பருமன் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைகிறது.
தற்காலங்களில் பாடசாலைச் சிறுவர்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ பாடசாலை மற்றும் தனியார் வகுப் பிற்கு செல்வது குறைந்து விட்டது. இன்றைய சிறுவர்கள் மத்தியில் உடலில் வியர்வை சிந்தி விளையாடும் கிளித்தட்டு, கிட்டிப்புள், கெந்திப்பெட்டி, ஓடிப்பிடித்து விளையாட்டு போன்ற கிராமிய விளையாட்டுக்கள் அருகிவிட்டன. தற்காலங்களில் சொக்லட், பிஸ்கட்,. சோடா போன்ற இனிப்புவகைகளையும் நூடில்ஸ், பணிஸ் வகை, கேக் போன்ற துரித உணவுகளையும் நுகரும் கலாசாரம் சிறார்களியிடையே அதிகரித்து வருகின்றது. அரிசிமாப் பிட்டு, இடியப்பம், குத்தரிசிச்சோறு, மரக்கறியாலான கறி, சூப்போன்ற ஆரோக்கிய உணவுகளுக்குப்பதிலான ஆரோக்கியமற்ற உணவுகளை இன்றைய சிறுவர்கள் முதன்மை உணவாக உட்கொள்கிறார்கள். மேற்கூறிய காரணிகள் சிறார்களின் அதிகரித்த உடற்பருமனுக்கு வழிவகுக்கின்றன.
அதிகரித்துவரும் உடற்பருமனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்
நீங்கள் மேலே வாசித்தவாறு றொசான் தனது பாடசாலையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளே ஒரு உடற்பருமனான சிறுவன் அல்லது சிறுமி எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளாகும். ஒரு குழந்தை மனரீதியாக தனது உடற்பருமனை எண்ணி கவலைப்படுவது பிள்ளையின் ஆரோக்கியத்தை மட்டு மல்ல கல்வியையும் பாதிக்கின்றது. இவ்வாறான பிள்ளைகள் உளரீதியாக தாழ்வு மனப்பாங்கிற்கு உட்படுத்தல், மன அழுத்தத்தை வளர்த்தல் மற்றும் தனிமையாக இருத்தல் போன்ற காரணங்களால் கல்வியில் பின்னடைவை எதிர்கொள்கின்றனர். உடல் ரீதியாக சலரோகம், உயர்குருதி அமுக்கம், ஈரலில் கொழுப்புப் படிதல், பித்தப்பையில் கற்கள் உருவாதல் போன்ற நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகரிக்கின்றது. தொடர்ச்சியாக அலைபேசி, கணனி (Computer), தொலைக்காட்சி பார்க்கும் பிள்ளைகளுக்கு உடற்பருமன் மட்டுமல்ல கண்பார்வை தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகமாகும். அதிக உடற்பருமன் உடைய பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் சீரற்ற மாதவிடாய்ச்சக்கரம், கர்ப்பம் தங்குவதில் தாமதம் மற்றும் பிள்ளைப் பேறின்மைபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுகிறது.
இவ்வாறான ஆபத்துக்களை எவ்வாறு தடுக்கலாம்
ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உடற்பருமனைக் குறைத்து மேற்கூறிய ஆபத்துக்களைத் தவிர்க்க உதவுகின்றது. அதிக உடற்பருமன் உடையவர்கள் உங்களது உணவுப்பழக்கங்கள் பற்றி சிந்தித்துப்பாருங்கள். எமது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை உண்பதைத் தவிருங்கள். காலைநேர உணவை உட்கொள்ளாதிருப்பதை தவிர்க்கவேண்டும். கண்ட கண்ட நேரத்தில் உணவருந்துவதை தவிர்த்து உரிய நேரத்தில் மட்டும் உணவருந்துங்கள்.
சரியான அளவுள்ள உணவைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். உதாரணமாக மதியம் ஒரு கோப்பை சோற்றிற்குப்பதில் கால்பங்கு சோறு, கால் பங்கு புரதம் நிறைந்த உணவு, ஏனையவை மரக்கறி என மாற்றுவது சிறந்ததாகும். எண்ணெய், நெய் என்பவற்றில் பொரிக்கப்பட்ட இடை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பசி அதிகம் என வருத்தப்படுபவர்கள் சிறிதளவு நீரைக்குடித்து விட்டு உணவருந்திப்பாருங்கள். எனினும் சிறுவர்கள் வளரும் வயதில் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான கனியுப்புக்கள், விற்றமின்கள், புரதச்சாப்பாடுகளை சாப்பிட அனுமதியுங்கள் தொலைக்காட்சி, கணனி, கையடக் கத்தொலைபேசி என்பவற்றுடன்கழிக்கும் நேரத்தை உடற்பயிற்சிக்கென ஒதுக்குங்கள். மாலைநேரம் குழு விளையாட்டுக்களில் சிறுவர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் கணனி, தொலைக்காட்சி, கைப்பேசி என்பவற்றுடன் செலவிடும் நேரத்தை குறைக்க முடியும்.
ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்வது போதுமானது. இவ்வாறு ஒரு வாரத்திற்கு 5தடவைகள் செய்யவேண்டும். நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வார இறுதி நாட்களில் கூடிய நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டுக்களிலோ ஈடுபடுங்கள். இவற்றை விட பிள்ளைகள் ஓமோன் குறைபாட்டையும் கொண்டிருக்கலாம். கழுத்தில் வீக்கம், வளர்ச்சி குன்றல், மலச்சிக்கல், குளிர்தாங்குவதில் சிரமம், சோம்பற்தன்மை, அதிகளவு முடி கொட்டுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் உடற்பருமனை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இளஞ்சமுதாய மொன்றினை உருவாக்க நாம் எல்லோரும் ஒன்றிணைவோம்.
மருத்துவர் ஜெ.அபர்ணா