நீரிழிவு நோய் குறித்த வகைப்படுத்தலை மருத்துவர்கள் இருவாறாகப் பெயர்குறிப்பிடுகின்றனர் அவை வகை1, வைகை2, என அமையும். வகை ஒன்றில் 5 தொடக்கம்10 வீதமும் வகை இரண்டில் 80 தொடக்கம் 90 வீதமும் காணப்படுகின்றன.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
01. உணவுக் கட்டுப்பாடு
02. குருதிப் பரிசோதனை
03. உடற்பயிற்சி
04. மருந்து (குளிசை) ஊசிமருந்து
நோயின் குணங்குறிகள்
உடல்மெலிவு அதிகரித்த தண்ணிர்த்தாகம், அதிகமான பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேறல் உடற் சோர்வு மங்கலானபார்வை, காயங்கள் எளிதில் மாறாமை, கால்களில் எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீரிழிவுநோயின் அடிப்படை குணங்குறிகளாகக் குறிப்பிட முடியும்.
பக்கவிளைவுகள்
நரம்புத்தளர்ச்சி.கண்பார்வை இழப்பு இதயம் பாதிப்படைதல்.மாரடைப்பு ஏற்படல்.சிறுநீரகப் பாதிப்பு, மூளையில் குருதிக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுதல் போன்ற பக்க விளைவுகள் நீரிழிவுநோயின் காரணமாக ஏற்படும்.
உணவுக் கட்டுப்பாடு
குருதியில் குளுக்கோஸின் அளவை குறைப்பதில் உணவுக்கட்டுப்பாடு பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக சரியான நேரத்தில் என்ன உணவைச் சாப்பிட வேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற விடயங்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம் ஒருவரின் வாழ்வை ஆரோக்கியமான முறையில் கட்டமைத்துக்கொள்ளமுடியும். ஒருவர் உண்ணும் உணவில் பல்வேறு மூலக்கூறுகள், சத்துக்கள் காணப்படுகின்றன. அவை மாப்பொருள். கொழுப்பு, விற்ற மீன்கள், தாதுப்பொருள்கள். புரதம் போன்ற சத்துக்களாகவும் நீர் மூலக் கூறுகளாகவும் அமைந்திருக்கும்.
இவற்றுள் மாப்பொருள் சக்தியையும், புரதம் உடலுக்கு வளர்ச்சியையும், கொழுப்பு உடலுக்குச் சக்தியையும் வழங்குகின்றது. மேலும் ஒருவர் மாப்பொருள் உள்ள உணவை உண்ணும் போது அவை குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. மேற்படி குளுக்கோஸானது இன்சுலினின் உதவியுடன் உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களுக்கும் சென்று சக்தியை வழங்குகின்றது. எனினும் மாப்பொருள் ஆனது பல்வேறு வகைகளில் காணப்படுகின்றது. அவை ஒரு சக்கரைட்டு இரு சக்க ரைட்டு, பல்சக்கரைட்டு என அமைந்திருக்கும்.இவற்றின் தன்மைக்கேற்ப சில உணவுகள் வேகமாக உடைந்து குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. சில உணவுகள் உடைந்து குளுக்கோஸாக மாறவதற்கு நீண்டநேரம் ஆகின்றன. இதனால் குருதியில் குளுக்கோஸின் அளவு மெதுவாக உயர்கின்றது.
உணவுகளின் கிளைசிமிக் குறிகள் (Glycaemic index)
கிளைசிமிக்குறியீட்டை பொறுத்தே உணவுகள் வகைப் படுகின்றன. அதிககிளைசிமிக்குறியீடுஉள்ள உணவுகள் எளிதில் சமிபாடைந்து விரைவாகக் குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றது. உதாரணமாக சீனி, தேன்,வெல்லம்,இனிப்புகள்,குளிர்பானம்,கேக் போன்ற வற்றைக்குறிப்பிடமுடியும் குறைந்த கிளைசிமிக்குறியீடு உள்ள உணவுகள் மெதுவாக சமிபாடைந்து மெதுவாகக் குருதியில் குளுக்கோஸின் அளவை உயர்த்துகின்றன. உதாரணமாக தானியங்கள்,காய்கறிகள்,கீரைகள் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். நீரிழிவுநோயாளிகள் குறைந்த கிளை சிமிக் கொண்டுள்ள உணவுகளை உள்ளெடுப்பதே சிறப்பானது.
அதிக மாச்சத்துள்ள உணவுகள்
நாம் உண்ணும் உணவில் மாப்பொருள் பெரும்பகுதியாக உள்ளது.உதாரணமாக சோறு, பிட்டு இட்லி பரோட்டா, அப்பம்,உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவை எளிதில் சமிபாடு அடைந்து குருதியில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கின்றன.இவை அதிக கிளைசிமிக்கை கொண்டிருக்கும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் அளவுடன் உண்ணுதல் நன்று.
மிதமான மாச்சத்துள்ள உணவுகள்
குறைந்த கிளைசிமிக் கொண்ட உணவு வகைகள் மிதமான மாச்சத்துள்ள உணவுகளாகக்குறிப்பிடப்படுகின்றன. காய்கறிகள், கீரைவகைகள், தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புவகைகள், கடலை போன்ற உணவு வகைகளை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் குருதியில் குளுக்கோஸின் அளவைக்கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். இவை கொண்டுள்ள அதிக நார்ச்சத்துக் காரணமாகவே இது நிகழ்கிறது.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து என்பது உணவால் சமிபாடு அடைய முடியாத ஒருவகையான மாச்சத்து. மனிதக் கழிவின்மூலம் இவை வெளியேற்றப்படுகின்றன. முதலில் இவை உடலுக்குச் சக்தியைத் தராதவை என்றே கருதப்பட்டது. ஆனாலும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் இவை எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. அவை வருமாறு
1.குருதியில் கொழுப்பின் அளவைக்குறைக்கும்.
2.குருதியில் குளுக்கோஸின் அளவு திடீர் என அதிகரிப்பதைக் தடுக்கும்.
3.வயிறு நிறைவுத்தன்மையை அளிக்கிறது.
4. மிக இலகுவான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது.
5. உடல்நிறையைக் குறைப்பதற்கு உதவுகிறது.
முழுத்தானியங்கள் கொண்டு (தீட்டப்படாத அரிசியல்) செய்யப்பட்ட உணவுகள்தவிடு நீக்கப்படாத கோதுமை, அரிசிமாவில் செய்யப்பட்ட உணவுகள்(ஆட்டாமா) நவதானிய உணவுகள், பயறுகடலை, கெளப்பி, உழுந்து நார்ச் சத்து அதிகமுள்ள பழங்களான கொய்யா, திராட்சை நெல்லி, நாவல், பச்சைக்காய்கறிகள் போன்றன நார்ச்சத்து உணவு வகையினுள் உள்ளடங்குகின்றன. இந்த நார்ச் சத்தானது எமது குடலில் இருந்து மெதுமெதுவாக குளுக்கோஸை குருதியில் கலப்பதற்கு உதவுகின்றது. இதனால் சடுதியாக குருதியில் குளுக்கோஸின் அளவு உயர்வதைத் தடுக்கிறது. எனவேநாம் உண்ணும் உணவில் ஒருபகுதி நார்ச்சத்து உள்ள உணவாக இருக்க வேண்டும். மூன்று வேளையும் குறைந்தது 100 கிராம் அளவுள்ள நார்ச்சத்து உணவினை உண்பது சிறப்பானது.
உள்ளெடுக்க வேண்டிய மாப்பொருள் அளவு
மாப்பொருள் உண்ணும் அளவு ஒருவருடைய ஊட்டச்சத்துத் தகுதியைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக குறைந்த நிறை, சராசரி நிறை அதிக நிறை,பருமனான நிறை, ஒருவரது வயது வேலையின் அளவு பாலினம் மற்றும் உள்ளெடுக்கும் மருந்துகள் போன்றவற்றில் தங்கியுள்ளன. அத்துடன் ஒருவருக்குத்தேவையான கலோரி உணவில் 60 தொடக்கம் 65 வீதம் வரை மாப்பொருள் இருக்க வேண்டும்.
தடையின்றி எடுக்கக்கூடிய உணவுகள்
குருதியில் குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தாத உணவுகளை எடுக்கவேண்டும்.சீனி இல்லா தேநீர் எலுமிச்சம்பழச்சாறு, தெளிந்த சூப் வகைகள், பச்சைக்காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் குறைந்த மாச்சத்தும் குறைந்த கலோரியும் உள்ள உணவுகள் போன்றவற்றை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவுநோயாளிகள் ஆரோக்கி யமான நிலையில் வாழலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு எடுக்கும் முறை
நீரிழிவு நோயாளிகள் நேரம் தவறாமல் உணவு எடுத்தல் அவசியம் மூன்று வேளை உணவு அத்துடன் இரண்டு வேளைக்கு இடையில் சிறிய சத்தான தீன் பண்டங்களை எடுக்க வேண்டும். இன்சுலின் எடுப்பவராக இருப்பின் உணவும் ஊசிமருந்தும் சரியான நேரங்களில் எடுக்கப்பட வேண்டும். நீண்ட நேர உணவு இடைவேளைகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுடைய காலை உணவை தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்குப் பின்பும் படுக்கைக்கு போக முன்பும் சிறிய சத்தான தீன்பண்டங்களை எடுக்க வேண்டும். இதன்மூலம் குளுக்கோஸின் அளவு குறைவதைக் தவிர்க்கலாம்.
குருதியில் குளுக்கோளமின் அளவு குறைதல்
கைபோ கிளைசீமியா (Hypo Glycoemic) நிலைக் குருதியில் குளுக்கோஸின் அளவு 70 மில்லி கிராமுக்கு குறையும்போது இந்தநிலை ஏற்படும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக உங்கள் உணவை தாமதமாக எடுத்தால் சில நேரங்களில் அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது இன்சுலின் எடுத்துக்கொண்டு தாமதமாக உணவு எடுத்துக் கொண்டாலோ,உடலில் தொற்றுக்கள் ஏற்பட்டாலோ இந்தநிலை ஏற்படலாம். இந்தச் சந்தர்ப்பத்திலே நோயாளிக்கு வியர்த்தல், தலைசுற்றுதல் சுயஉணர்வு இல்லாமை நடுக்கம் போன்றன ஏற்படலாம் இதன்போது குருதியில் குளுக்கோஸானது 70 மில்லிகிரா முக்குக் கீழ் குறைந்தால் (15mg – 3 teaspor) 3 தேக்கரண்டி குளுக்கோஸ் எடுத்துக்கொள்ளவும், 10 நிமிடம் கழித்து மீண்டும் குருதியில் குளுக்கோஸின் அளவை சரிபார்க்கவும். தொடர்ந்து குறைவாக இருப்பின் உங்கள் வழக்கமான உணவு அல்லது சிறிய சத்தான தீன்பண்டங்களை 30 நிமிடங்களுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும். எங்கு பயணித்தாலும் நீங்கள் உங்களுடன் (குளுக்கோஸ் அல்லது இனிப்பு) ஏதாவது இனிப்பு வகைகளை எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சைநிலையம்,
யாழ்.போதனா மருத்துவமனை.