பன்னாட்டு ரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடு களிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்புநகரப் பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையால் (prediabetes) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது மக்களிடையே சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையானது அதிகமாக இருப்பது இதற்கான காரணமாகும். இதேபோல அதிகரித்து வரும் மேற்குலத்தின் துரித (Fast food) உணவுகளின் பயன்பாடும் இதற்கு முக்கிய காரணமாகும். உடற்பயிற்சியற்ற (sedentary) வாழ்க்கைமுறையும் கூட இதற்கு ஏதுவாக அமைகின்றது.
இவ்வாறான தவறான உணவுப்பழக்கங்களால்நீரிழிவு ஏற்படும்போது பல்வேறுபட்டநீண்டகாலப் பிரச்சினைகள் (Complications) ஏற்படலாம். கண் குருடாதல் சிறுநீரகச் செயலிழப்பு நரம்புகளில் ஏற்படும் தாக்கம் மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
எமதுமக்களிடையேதாகம் ஏற்படும்போது அருந்தும்பானமாக சோடா எனப்படுகின்ற மென்பானங்கள் அமைந்திருப்பது மிகவும் துர்ப்பாக்கியமான விடயமாகும் தேநீர் மற்றும் பழச்சாறு என்பவற்றுக்கு நேரடியான முறையிலும்பல்வேறுபட்டமறைமுகமான வழிகளிலும் நாம் சீனியைப் பயன்படுத்திவருகின்றோம்.
மென்பானங்கள், ஐஸ்கிறீம் கேக் மற்றும் இனிப்பூட்டிய பிஸ்கற் சொக்லேட் என்பவற்றில் மிகவும் அதிகமான அளவில் சீனிச்சத்து இருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி ஒரு வருடத்தில் இலங்கைய ரொருவர் உள்ளெடுக்கும் சீனியின் அளவு ஏறக்குறைய 30 கிலோகிராம் ஆகும். எமது விழாக்கள்மற்றும் சடங்குகளில் கூடசினி மற்றும் மாச்சத்துள்ள உணவுப்பண்டங்களின் அளவு மிக அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதிகரித்து வரும் ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பான நிலையங்களும் இவ்வாறான சீனிப்பாவனை அதிகரித்துச்செல்வதற்குக் காரணமாகும் சுகாதார அமைச்சானது மிக அண்மையில் குளிர்பானங்களுக்கு வர்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பச்சை (மிகக் குறைந்த சீனியளவு மஞ்சள் (இடைப்பட்ட அளவு) சிவப்பு (மிகஅதிகளவு) ஆகியநிறக்குறியீடுகளை பானங்களில் பார்க்க முடிகிறது.
தீர்வுகள்
- சிறுவர்களுக்கு ஆரம்பகாலத்திலிருந்தே அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல் அவசியமாகும். இவ்வாறான பாவனையில் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.
- பொதுமக்கள் மத்தியில் அதிகரித்த சினி மற்றும் மாச்சத்துப்பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறுவது இன்றிமையாததாகும். இதற்குப் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- பாடசாலை உணவகங்களில் அதிகரித்த சினி மற்றும் மாச்சத்துள்ள உணவுகளையும் துரித உணவுகளையும் தடைசெய்து ஆரோக்கிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
- தாகம் ஏற்படும்போது சோடா போன்ற மென்பானங்களை அருந்துவதைத் தவிர்த்து சீனி சேர்க்கப்படாத இயற்கையான பழச்சாறு செவ்விளநீர் அல்லது தூய நீரை அருந்தப் பழகவேண்டும்
- குளிர்பான மற்றும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிலையங்களில் சீனிப்பாவனை அளவினைக் கண்காணித்து தேவையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல், சீனிப் பயன்பாட்டைக் குறைத்தல் அவசியமாகும்.
- நாம் உறவினர் மற்றும் நண்பர்களின் வீட்டுக்குச்செல்லும்போது சொக்லட் பிஸ்கற் மற்றும் ஐஸ்கிறீம் போன்றவற்றைக் கொண்டு செல்லாது பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்களை அவர்களுக்குக் கொடுக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். எமது உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ சீனி மற்றும் மாச்சத்து அதிகமான தின்பண்டங்களை வழங்குவதன் மூலம் அவர்களை நாம் ஆரோக்கியமற்ற நோயாளராக மாற்றாது இருத்தல் அவசியமாகும்.
- எந்தவொரு அலுவலகக்கூட்டமாக இருந்தாலும், விழாக்களாக இருந்தாலும் சீனியை வேறாக வைத்திருத்தல் அவசியமாகும். இவ்வாறு வைத்திருக்கும் போது தேவைப்பட்டவர் தமக்குத்தேவையான அளவில் அதனைச் சேர்த்துக் கொள்ள முடியும்
- இறுதியாக நாம் அனைவரும் அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையால் நீண்டகால அடிப்படையில் ஏற்படுகின்ற பாரதூர பின்விளைவுகளையும் தொற்றா நோய்களையும் கருத்திற் கொண்டு அவை பற்றிப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். நற்சிந்தனையோடு ஆரோக்கியம் பற்றிச் சிந்திக்கவேண்டும். இதுவே காலத்தின் கட்டளையாகும். நாளைய மாற்றத்திற்காக இன்றே செயற்படுவோம்
மருத்துவர்.M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை