தோற்றா நோய்களின் தாக்கத்திலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளவேண்டுமாயின் உடற் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். இதன் முக்கியத்துவம் இன்று எல்லாத்தரப்பினராலும் உணரப்பட்டுவருகிறது.
நாம் உடற்பயிற்சிசெய்ய ஆர்வத்துடன் இருப்பினும் அதற்கான நேரத்தைக்கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. இயந்திரத்தன்மையான இலத்திரனியல் வாழ்வியல் நடைமுறையில் உடற்பயிற்சிக்கான நேரம் காணாமலேயே போய்விட்டது. அவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கான நேரம்கிடைக்காதோரும், நேரத்தைக்கண்டுபிடிக்க முடியாதோரும் வழக்கப்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புக்கள் இங்கே முன்னிலை பெறுகிறது. வாழ்வில் இயலுமாயின் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்துப்பார்க்கலாமே.
வேலைத்தளங்களில்
- மாடிகளில் ஏறுவதற்கு மின் உயர்த்திகளையோ, தானியங்கிப்படிகளையோ பாவிக்காது மாடிப்படிகளில் நடந்து சென்றடைவோம்.
- சென்றடைய வேண்டிய இடங்களுக்குச்சற்றுத்தூரவாகவே வாகனங்களை நிறுத்தி இறங்கிக்கொள்வோம்.
- மதிய உணவின் பின்பு நிமிடங்கள் வரை மேலதிகமாக இருப்பின் படிகளில் ஏறிநடந்திடுவோம்.
- தேநீர் இடைவேளைகளில் இயலுமான வரை நடக்க முற்படுவோம்.
- வேலையில் ஈடுபட்டிருக்கும் போது நீர்அருந்த விரும்பும் போதெல்லாம் எழுந்து சிறிது துரம் நடந்திடுவோம்.
- சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒரே இடத்தில் இருப்பதற்குப்பதிலாக ஏழுந்து நடந்திடலாம்.
- சக உத்தியோகத்தரை அழைப்பதற்குப் பதிலாகவோ அல்லது மின்னஞ்சல் செய்வதற்குப்பதிலாகவோ அவரது மேசை வரை நடந்திடலாம்.
- சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வேகநடை செய்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
- கைபேசியில் உரையாடும்போது எழுந்து நின்று உரையாடலாம்.
- புத்தகம் படிக்கும்போது ஒவ்வொரு ஆறுபக்கங்களுக்கும் ஒரு தடவையெனனழுந்து சிறுதூரம் நடந்திடலாம்.
- கைபேசிகளில் உரையாடும் சந்தர்ப்பங்களில் எழுந்து நின்றோ அல்லது நடந்து கொண்டோ உரையாடமுயற்க்கலாம்.
- ஒய்வு அறைக்குச்செல்லும் சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் நடக்க வேண்டிய பாதையைத் தெரிவுசெய்யலாம்.
வீட்டில்
- தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வர்த்தக இடைவேளையின் போதும் எழுந்து நடந்திடலாம்.
- மனதுக்கு விருப்பமான பாடல்களுக்கு நடனம்ஆடலாம்.
- ஒவ்வொரு நாளும் 15 தொடக்கம் 3O நிமிடங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடலாம்.
- விறாந்தையில் வேகநடைசெய்யலாம்.
- அருகிலுள்ள கோயில்களுக்கு நடந்து சென்று வரலாம்.
- அருகிலுள்ள கடையில் பொருள்களை வாங்க நடந்து சென்றுவரலாம்.
ஆக்கசக்தியுள்ள உடற்பயிற்சி மனச்சந்தோசத்தைத்தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதை சிந்தனைபூர்வமாக ஞாபகம்கொள்வோம்.
வேகநடையின்போது
- பார்வையை 10 தொடக்கம் 20 அடிவரை முன்னோக்கியதாக வைத்திருத்தல்.
- கைவிரல்களைத் தளர்வாக மடித்த நிலையில் பேணுதல்.
- விரல்களையும், தோள்மூட்டுக்களையும் இறுக்கம் இல்லாது தளர்வாகப்பேணுதல்.
- முழங்கையை 90பாகை வரையில் மடித்துப்புயங்களை முன்னோக்கியும் பின்னோக்கியும் தோள் மூட்டில் அசைத்தல்.
- சீராக, செளகரியமாக நடத்தல்.பாதத்தைக் குதியிலிருந்து விரல் நுனிவரை சீராக உருட்டுவது போல அசைத்தல்.
- முதுகை நேராகவும் தோள்மூட்டுக்களை ஒரேமட்டத்திலும் பேணுதல்.
- வயிற்றை உள்நோக்கியதாகத்தட்டையாகப்பேணுதல்.
- சின்னச்சின்னஅடிகள் வைத்து விரைவாக நடத்தல்
- முதுகெலும்பை வளைக்காது நேராகச் சமனிலைத்தன்மையோடு பேணுதல்.
- எப்பொழுதுமே உடல்நிலையைச் சரியான நிலையில்பேணுதல்.
- அதிகாலையிலோ, இரவிலோ நடக்கும் போது வாகனத்தில் செல்பவர்களுக்கு இலகுவில் தெரியக் கூடிய மெல்லிய நிறத்திலான தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுதல்.
மருத்துவர். பொ.ஜெசிதரன்