ஆரோக்கியம் சார்ந்தபிரச்சினைகளை நோக்கும்போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்சினைகளே ஏற்படுகின்றபோதிலும் அவை பெண்களை வித்தியாசமான முறையில் பாதிக்கின்றன. சில நோய் நிலைமைகள் உதாரணமாக மூட்டுவாதம், அதிகரித்த உடற்பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றன பெண்களை அதிகளவில் பாதிக்கின்ற போதிலும் சிலநோய்நிலைமைகள் பெண்களுக்கே தனித்துவமானவை.
பெண்கள் எப்பொழுதும்தங்களைச் சார்ந்தவர்களுடைய நலனில் செலுத்தும் கவனத்தைச் சிறிதளவேனும் தமக்காகவும் செலுத்தவேண்டும். பெண்களுடைய நலன் பற்றிக்கருதும்போது அவர்களுடைய உடல்நலம்பற்றிமட்டும் சிந்திக்காது உளமனநல ஆரோக்கியம்பற்றியும் சிந்தித்தல் அவசியமானதாகும்.
பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு வாழ்க்கைப்படிநிலைகளிலும் அவர்கள் எதிர்நோக்கும் சுகாதரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் வேறுபடுகின்றன. உதாரணமாக குழந்தைப் பருவத்தை எடுத்துக் கொண்டால் போசாக்குக் குறைபாடு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றைக் குறிப்பிடலாம். அடுத்து பதின்மவயதுப் பருவத்தை எடுத்துக் கொண்டால் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், அதிகரித்த உடற்பருமன், போசாக்குக் குறைபாடு, குருதிச்சோகை, இளவயதுக் கர்ப்பம் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்வற்றைக் குறிப்பிடலாம்.
அடுத்து 20-44 வயதுப்பிரிவினை எடுத்துக் கொண்டால் கர்ப்பகாலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிள்ளைப்பேறின்மை ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சினைகளில் முன்னணிவகிப்பவை நீரிழிவுநோய், உயர் குருதி அமுக்கம் மற்றும் குருதிச் சோகை என்பனவாகும். எனினும் தகுந்த மருத்துவ வசதிகளை வழங்குவதன் மூலம் இந்த நோய் நிலமைகள் வெற்றி கொள்ளப்படுகின்றன.
தற்காலத்தில் பிள்ளைப்பேறின்மை(Subfertility) ஆனது பெண்களை வாட்டிவரும் நிலமையாக உள்ளது. இதற்கு ஆண்,பெண் என இருபாலாரும் காரணமெனினும் பெண்களில் ஏற்படும் சில நோய்களான தைரொயிட்சுரப்பி தொடர் பானநோய்கள் சூலகத்தில் ஏற்படும்கட்டிகள் (polycystic Ovarian Syndrome) மற்றும் சில நீண்டகால நோய்நிலைகள் முக்கிய பங்குவகிக்கின்றன.
நாற்பத்தைந்து வயதிலும் கூடிய பெண்களைக் கருத்தில் கொள்ளும் போது எல்லாப் பெண்களிலும் நிகழும் உடற்தொழிலியல் சார்ந்த நிகழ்வாக மாத விடாய்நிறுத்தம் (Menopause)ஐக் குறிப்பிடலாம். இதன் ஆரம்கட்ட அறிகுறிகளாக இரவு நேரங்களில் அதிகளவில் வியர்த்தல், அடிக்கடி மனநிலைமாற்றமடைதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேலும் இந்த வயதுப் பிரிவினரிடையே பெண்நோயியல் சம்பந்தமான புற்றுநோய் உதாரணமாக சூல கப்புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் மற்றும் கருப்பைக் கழுத்துப்புற்றுநோய் என்பன அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்துடன் இருதயநோய்கள், உயர்குருதி அமுக்கம், நீரிழிவு என்பு தேய்வு மற்றும் மூட்டுவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பெண்கள் வாழ்நாள் முழுவதிலும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாக ஆண் பெண் சமத்துவமின்மை, சமூகவியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனவே பெண்கள் மேற்குறிப்பிட்ட நோய்நிலமைகளைத் தீர்ப்பதற்கு மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை நாடுவது அவசியம்.
எனினும் பெண்களின் தன்னம்பிக்கைகுறைவு குறைந்த வருமானம்,போதிய கல்வியறிவின்மை மற்றும் குடும்பபொறுப்புக்கள் ஆகியன தடைக்கற்களாக அமைகின்றன.
தற்கால சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களாக தேவையற்ற கர்ப்பம், குழந்தைப்பேறின்மை, புற்றுநோய், பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
எனவே வயது வேறுபாடின்றி அனைத்துப் பெண்களும் தமக்கு ஏற்படும் சவால்களை முறியடிப்பதற்கு தகுந்த வழியில் செயற்படுவது அவசியமாகும்.
இந்த வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல் முக்கிய இடம்பெறுகிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பேணுதல், கிரமமாக உடற்பயிற்சி செய்தல்,சீரானநித்திரை மனஉளைச்சலைச் சரியான முறையில் கையாளுதல் போன்றன ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி கோலுகின்றன.
வயது வந்த அனைத்துப்பெண்களும் தமது ஊரிலுள்ள சுக வனிதையர் சிகிச்சைநிலையத்துக்குச் சென்று சில நோய் நிலமைகளான நீரிழிவு உயர்குருதியமுக்கம்,கொலஸ்ரோல் நோய்போன்றவற்றைக்கண்டுபிடிப்பதற்கான ஆரம்பகட்ட பரிசோதனைகளைச் செய்தல் அவசியமானதாகும்.
எனவே பெண்களும் தமக்கு ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளைச் சரியான வகையில்கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான எதிர் காலவாழ்வு நிர்ணயிக்கப்படும்.
மருத்துவர் நிரூஷிகா சோதிநாதன்
நீரிழிவுசிகிச்சைநிலையம்,
யாழ் போதனா வைத்தியசாலை