உலக நீரிழிவு தினமானது (world Diabetes Day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி
கொண்டாடப்பட்டுவருகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத விதத்தில் இன்று அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. எமது நாட்டில் மிக அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்பு நகரில் ஏறக்குறைய 23 சதவீதமானோர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையால் (Pre dia betes) பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நீரிழிவின் தாக்கம் சிறிதுசிறிதாக அதிகரித்துச் செல்வதற்கு எமது தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் தேக அப்பியாசமற்ற (Seden tary) வாழ்க்கைமுறையுமே காரணங்களாகும்.
நீரிழிவு நோயானது வளர்ந்தவர்களில் காணப்படுகின்ற ஒரு நோயாக இருந்த காலம் மாறி இன்று எத்தனையோ இளவயதினர்கள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதைகாணக் கூடிய தாக உள்ளது. உலகமயமாதலால் (Globa lization) மேலைத்தேய துரித (Fast food) உணவுப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போய்விட்டதும் இதற்கு ஒரு பிரதான காரணமாகும்.
எமது மக்களிடையே காணப்படுகின்ற அதிகரித்த சீனி மற்றும் மாச்சத்துள்ள உணவுகளின் பயன்பாடும் இதற்கான மிக முக்கியமான காரணமாகும். இலங்கையரொருவர் 2014ஆம் ஆண்டில் உள்ளெடுத்த சீனியின் அளவு ஏறக்குறைய 30கிலோ கிராம் ஆகும். எமது மக்களிடையே தேநீருக்கு சேர்க்கின்ற சீனி தவிர பல்வேறுபட்ட மறைமுகமான வழிகளிலும் சீனிப்பாவனை அதிகமாகக் காணப்படுகின்றது. இனிப்பூட்டிய குளிர்பானங்கள் கேக் ஐஸ்கிறீம் மற்றும் சிற்றுண்டிகள் போன்றன இதற்கு உதாரணங்களாகும்.
தெற்காசிய மக்களிடையே நீரிழிவானது ஒப்பீட்டளவில் குறைந்த வயதில் ஏற்படுவதால் ஒருவர் தனக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதா இல்லையா என்பதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நீரிழிவு நோய் ஏற்படும்போது ஒருவருக்கு அடிக்கடி சிறுநீர் கழிதல், அதிகதாகம், பசி ஏற்படுதல், உடல்நிறைகுறைவடைதல் போன்றன இருக்கும். எனினும் இவ்வாறான அறிகுறிகள் இல்லாமலும் நீரிழிவு நோயானது ஏற்பட வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயானது எமது உடலிலுள்ள அனைத்து அங்கங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதொரு கொடிய நோயாகும். உலகளாவிய ரீதியில் கண்குருடாதல், சிறுநீரக செயலிழப்பு (Kidiney Failure) மற்றும் அவயவ இழப்பு (Amputation) என்பன ஏற்படுவதற்கான பிரதானமான காரணம் நீரிழிவேயாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை உணவுப் பழக்க வழக்கங்களையும் முறைகளையும் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்து வருவதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படாமல் இயன்றளவு தடுக்க முடியும்.
நீரிழிவு நோயாளர்கள் சிறந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தும் மருந்து வகைகளை கிரமமாக உள்ளெடுத்தும் வருவதன் மூலம் தமது நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.
இவ்வாறு நீரிழிவு நோயை கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தால் பலவிதமான பாரதூரமான பின்விளைவுகள் (Complications) ஏற்படுவதிலிருந்து விடுபட முடியும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து நீரிழிவு நோயின் கொடிய தாக்கத்திலிருந்து எம்மைக்காத்துக் கொள்ள இந்த நீரிழிவு தினத்தில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோமாக
”நாளைய மாற்றத்துக்காக இன்றே செயற்படுவோம்”
மருத்துவர்.M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி, சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.