கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன
- இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும்.தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்.
- தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது.
- தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகரிக்கின்றது.
- குழந்தையின் உடல் வெப்பநிலையானது பேணப்படுகின்றது. குறிப்பாக குளிர் அல்லது மழைக்காலங்களில்
- தோலுக்கு தோலான தொடுகை மூலம் குழந்தைக்கு தாயின் சூழிலுள்ள கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்கதி அதிகரிக்கின்றது
- குழந்தை பால் அருந்த தயாராகவுள்ள அறிகுறிகளை வேளைக்கே அறிந்து தாய் பாலுட்ட வேண்டும். பசியினால் குழந்தை அழத்தொடங்கியவுடன் அதனை சாந்தப்படுத்தி பாலுட்டலை ஆரம்பிப்பதில் சிரமம் எற்படலாம் எனவே பின்வரும் அறிகுறிகளை அவதானிக்க வேண்டும்.
- குழந்தை தனது வாயால் தேடத் தொடங்கும். மார்பிற்கு அருகில் இருப்பின் முலைக்காம்பை நோக்கி வாயை கொண்டு வரும்.
- கைவிரலை சூப்பத் தொடங்கும்.
- வாயைச் சப்புக்கொட்டலாம்
- இறுதியாகத் தான் பிள்ளை அழத்தொடங்கும்.
- தாய்ப்பாலைத் தவிர வேறு பானங்களையோ, நீரையோ பருகக் கொடுத்தலாகாது (மருத்துவ பிரச்சினைகள் இல்லாதவிடத்தில்)
- போதிய அளவிற்கு குழந்தை பால் அருந்துமாயின் குழந்தை பிறந்து இரு நாள்களின் பின்னர் ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும். இதனை விட குறைவாயின் மருத்துவ ஆலோசனை பெறுவது நன்று.
- குழந்தை பிறந்து முதல் 24 மணித்தியாலங்களுக்குள் மலம் கழிக்கும். சாதாரணமாக இது பின்னர் வேறுபடலாம். ஒன்று தொடக்கம் எட்டு பத்து தடவை மலம் கழிக்கலாம். முதல் சில நாள்களில் மலம் கழிப்பதில் குழந்தைக்கு சிக்கலிருப்பின் வைத்திய ஆலோசனை பெறப்படல் வேண்டும்.
- சில வேளைகளில் சாதரணமாக பால் அருந்தியவுடன் தோளில் போட்டு தட்டி ஏப்பம் விடச் செய்கையில் பால் வாயால் சிறிதளவு வெளியேறலாம். ஆனால் குழந்தை சக்தி எடுக்குமானால் (குறிப்பாக பித்தம் கலந்த பச்சை அல்லது மஞ்சல் நிறத்தில்) உடனடியாக மருத்துவசாலைக்குச் சென்று ஆலோசனை பெறவேண்டும்.
- அதே போல் மலச்சிக்கலும், சக்தியும், வயிறு வீக்கமும் காணப்படுமாயின், உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.
- சாதாரண குழந்தை ஒன்றை24 மணித்தியாலங்களின் பின்னர் ஒவ்வொரு நாளுமே குளிப்பாட்ட முடியும் அப்போது தான் தோல் சம்பந்தமான கிருமித் தொற்றுக்களிலிருந்து குழந்தையை பாதுகாக்க முடியும்.
- எப்போதும் தொப்புள் கொடி பகுதியானது அது உலரும் வரை திறந்தே வைத்திருத்தல் நன்று. அந்தப் பகுதியில் மலமோ, சிறுநீரோ பட்டிருப்பின் உடனடியாக சவக்கார நீர் கொண்டு கழுவி தூய்மையான உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். தேவையின்றி வேறு பதார்த்தங்கள் அதன் மேல் பூச வேண்டாம்.
- அதே போல் கண், கமக்கட்டு, கழுத்து இடுப்புப் பகுதி போன்ற பகுதிகளை அழுக்கின்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டியதுடன் அந்த பகுதிகள் சிவந்து ஈரலிப்பாக உள்ளனவா என அடிக்கடி அவதானிக்க வேண்டும். அப்படியாயின் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும்.
- குழந்தையின் தோலில் சீழ் பிடித்த பருக்கள், கொப்பளங்கள், ஏற்படுவது, கிருமித் தொற்றுக்களால் தான் எனவே அவை குழந்தையில் காணப்படுமாயின் இறுதி நேரம் வரை காத்திராது உடனடிச் சிகிச்சை பெற வேண்டும்.
- புதிதாய் பிறந்த குழந்தையில் ஆபத்தான நோய்கள் இருக்குமாயின் அது பின்வருவகவற்றை வெளிக்காட்டலாம்
- பால் அருந்துவதில் ஆர்வம் இருக்காது
- உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கலாம்
- பிள்ளையின் சாதாரண துடிப்பாட்டம், அழுகை என்பன குறைவடைந்து சோர்வடையலாம்.
- மூச்சு விடுவதில் சிரமம் அல்லது முணங்கல் சத்தம் என்பன காணப்படலாம்.
- சில சமயங்களில் வலிப்பும் எற்படலாம்
- இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடிச் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- சாதாரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகளில் சிறிதளவு மஞ்சள் நிறம் காணப்படலாமம். எனினும் பிள்ளையின் உடலில் மஞ்சள் நிறம் ( மஞ்சள் காமாலை) அதிகமாயின் அதற்கான சிகிச்சை தேவைப்படும்.
- தொப்புள் கொடிப் பகுதியின் கிருமித் தொற்றும், ஆபத்தானதே. அதனை தடுப்பதற்கு அந்தப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதுடன். அந்தப் பகுதி சிவந்தோ, சீழ் வடிந்தோ, துர்நாற்றமாகவோ காணப்பட்டால் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- ஒரு குழந்தையானது தனது பிறந்த நிறையில் சிறிதளவை (10%) முதல் 5 நாள்களில் இழந்து அதன் பத்தாம் நாள் வயதில் பிறப்பு நிறையை அடையும். அவ்வாறில்லாமல் அதிகளவு நிறை இழப்பு அல்லது 10 நாள்களில் பின்வரும் நிறை அதிகரிப்பு இல்லையெனில் அது குழந்தைக்கான போதிய போசனை கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்
எனவே மேற்கூறப்பட்ட முக்கியமாக கவனிப்புக்களையும், நோய்களுக்கான அறிகுறிகளையும் அறிந்திருந்தால் நமது பச்சிளம் பாலகர்களை நாம் சிறந்த முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மருத்துவர் ந. ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை