ஒருவருடைய வாழ்க்கையில், அவரது குடும்பம் மிகவும் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றது. மது அடிமை நிலையில் இருந்து விடுபட்டதன் பின்பு ஆரம்பிக்கும் புதிய வாழ்க்கையிலும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.
மது பாவனையினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள்
- ஒருவரின் மது அடிமை நிலையானது அவரது குடும்பம் என்ற அமைப்பினுடைய அத்திபாரத்தையே ஆட்டம் காண வைக்கும்.
- தந்தை ஒருவரின் மதுபாவனையால் பிள்ளைகளிடத்தே அன்பு, பாசம், மகிழ்ச்சி,சந்தோஷம், எதிர்கால நம்பிக்கை என்பன இல்லாமல் போய்விடும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளிடம் இருக்க வேண்டிய பரஸ்பர அன்பும், ஆதரவும், அரவணைப்பும் நலிவடைந்து காணப்படும்.
- குடி ஆட்சி செய்யும் வீடுகளில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாகவிருந்து, கருத்துகளைப் பரிமாறி, நியாயங்களைப் புரிந்து கொண்டு, சரி பிழைகளை ஆராய்ந்து ஒரு மித்த முடிவெடுக்க முடியாத சூழல் காணப் படும்.
- குடிக்கின்றவர்களின் வீடுகள் பல வற்றில் வீட்டு வன்முறைகள் அதிகரித்துக் காணப்படும். இவ்வீடுகளில் குடிப்பவர்கள் தமது கோபத்தையும், ஆற்றாமைகளையும் வன்முறை நடத்தைகள் மூலம் வெளிக்காட்டு வார்கள். இந்த வன்முறையாளர்கள் தங்கள் மனைவியையும், பிள்ளைகளையும் அடித்துக் காயப்படுத்துவார்கள். தமது வீட்டு உடைமைகளையே உடைத்துச் சேதமாக்குவார்கள்.
- மதுவின் ஆதிக்கத்துள் இருக்கும் குடும்பங்களில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வரும் சண்டை சச்சரவுகள் தீவிரமடைந்து இறுதியில் அவர்கள் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறான பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் பல தடவைகள பிரிந்தும் பின்பு சேர்ந்தும் வாழ்வதனைக் காணலாம். ஆயினும் சில குடும்பங்கள் நிரந்தரமாகவே பிரிந்து போவதும் உண்டு.
- மதுவுக்கு அடிமையாகிப் போயிருக்கும் ஒருவருடைய குடியினால் அவரது மனைவியும், பிள்ளைகளும், பெற்றோரும் தொடர்ச்சியான துன்பத்தையும் வேதனையையும் அனு பவிப்பதனால், அவை அவர்களது உள்ளத்தில் ஆறாத காயங்களையும், வடுக்களையும் உண்டாக்கிவிடுகின்றன.
- மதுவுக்கு அடிமையான சிலர் தமது மனைவியின் பாலியல் நடத்தையில் சந்தேகப் பட ஆரம்பிப்பர்.
சந்தேகக் கோடு
- திருமணம் என்கின்ற உறவில் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றி ஒருவரும் பெரிதாகக் கதைப்பதுமில்லை. விசேடமாக உறுதி வழங்குவதுமில்லை. ஆனால் அது அவ்வாறே இருக்கின்றது. நடைபெறுகின்றது.
- ஆயினும் குடிப்பவர்களில் சிலர் நாளடைவில் தமது மனைவியின் பாலியல் நடத்தையின் மேல் சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பர்.
- தமது மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்திருப்பதாகக் கருதி அது பற்றிக் கேட்பதுவும், அதனை ஒத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துவதும், வாய்மொழிகளாலும் உட லாலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும், கரவு கொள்வதும், உளவு பார்ப்பதுவும் இவர்களது வாடிக்கையாகிவிடும்.
- சிலரில் இவ்வாறான சந்தேகமானது ஒரு மெல்லிய இழை போல, ஒரு கோடு போல ஏற்படும். ஆனாலும் சிலரில் இது மிகவும் தீவிரமாகி அவருக்கும், அவரது மனைவிக்கும், ஏனைய குடும்பத்தவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- வாழ்க்கைத் துணைவரது பாலியல் நடத்தையில் சந்தேகம் ஏற்படும் இயல்பு சில மன நோய்களிலும், உடல் நோய்களிலும் அவ தானிக்கப்படுவதனால், இவ்வாறு சந்தேகப்படுபவர்கள் முறையான வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுதல் முக்கியமானது.
இவ்வாறான பிரச்சினைகளை மதுவுக்கு அடிமையான ஒருவரின் குடும்பம் போதும் போதும் என்ற அளவிற்கு அனுபவித்திருப் பார்கள். ஆயினும் தற்பொழுது அவர் மதுவை விட்டிருக்கின்ற நேரத்தில் குடும்பத்தவர்கள் அவரோடு அன்போடும், ஆதரவோடும் நடப்ப தோடு, அவர் மதுவில்லாமல் தனது வாழ்வைத் தொடர்ந்து கொண்டு செல்வதனை ஊக்குவிக்க வேண்டும்.
இதற்காக குடும்பத்தவர்கள் பின்வருவன வற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
- அவர் தற்பொழுது மதுவில்லாமல் இருக்கும் நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அவரது பழைய நடத்தைகளை சந்தோஷமற்ற நினைவுகளைக் குத்திக் காட்டக் கூடாது.
- அவரது புதிய வாழ்க் கையை உற்சாகத்தோடு வரவேற்று, அவருக்கு விருப்பான முறைகளில் வெகுமதியளித்துக் கொண்டாடுவ தன் மூலம் அவருக்கு புத்துக்கம் அளிக்கலாம்.
- இவ்வளவு காலமும் இருந்தது போல், பயம் காரணமாகவோ அல்லது வெறுப்புக் காரணமாகவோ அவரை விலத்தி வைக்காமல், அவரிடமிருந்து ஒதுங்கி நில்லாமல் குடும்பத்தினுடைய எல்லாவிதமான இன்பதுன்பங்க ளில் அவரையும் இணைத்துக் கொண்டு அவரின் தன்மதிப்பையும், பெறுமதியையும் கூட்டலாம்.
- அவர் குடித்த வேளைகளில் நடை பெற்ற பல விடயங்களில் அவரது மனம் செல்லாதிருந்திருக்கும். எனவே அவருக்கு தனது குடும்பம் பற்றிய நிறைய விடயங்கள் புதியதாக இருக்கலாம். அவைபற்றியெல்லாம் அவருடன் பொறுமையாக, விளக்கமாகக் கதைத்தல் வேண்டும்.
- பிள்ளைகளின் படிப்புப் பற்றியும், திருமணம் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் அவருடன் சேர்ந்து கதைக்கலாம். அவரது தற்போதைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.
- ஒன்றாக உணவருந்துதல், ஒன்றாகப் படம் பார்த்தல், ஒன்றாகச் சேர்ந்து போதல் போன்ற எல்லா விடயங்களிலும் அவரையும் இணைத்துக் கொண்டு அவருக்கும் குடும்பத் துக்குமான உறவையும், பிணைப்பையும் மீளப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவை சில உதாரணங்கள் மட்டுமே. ஒவ் வொரு குடும்பமும் தத்தமக்குப் பொருத்தமான, சாத்தியப்படக்கூடிய வழிமுறைகளைத் தேர்ந் தெடுத்து, மது அடிமையிலிருந்து வெளிவந்த வருக்கும் அவரது குடும்பத்தினர்க்குமான உறவைப் பலப்படுத்த வேண்டும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014