கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும், உடல் அங்கங்களின் இழப்புக்களும் அதிகரித்த நிலையிற் காணப்படுகின்றன.
இந்த விபத்துக்களுக்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளபோதிலும் பொதுவீதிகளைப் பயன்படுத்துபவர்கள் விழிப்பாக நடந்து கொள்ளாமையே விபத்துகள் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக அமைகின்றது. பொது வீதிகளில் வாகனங்களைச்செலுத்துபவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்களாவன:
வானங்களை அதிகரித்த வேகத்தில் செலுத்துவதைத் தவிர்த்தல்
சன நெரிசல் மிக்க இடங்களில் அதிகரித்தவேகத்தில் செலுத்தும் போது சடுதியாக நிறுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் சாரதியின் கட்டுப்பாட்டையும் மீறி விபத்து ஏற்படுகின்றது.
மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவதைத் தவிர்த்தல்
வீதியில் ஒழுங்குமுறையாகப் பயணிப்பவர்கள் கூட மதுபோதை யில் வாகனங்கள் செலுத்துபவர்களால் விபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
வீதி ஒழுங்குமுறைகளுக்கமையவாகனங்களைச் செலுத்துதல்
ஒழுங்கு விதிகளை உதாசீனம் செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக வாகனஒலி எழுப்பத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் (வைத்தியசாலைகள், நீதிமன்றம்) கூட ஒலி எழுப்புதல், வானங்களைத் திருப்புவதற்குரிய சமிக்கைகளைக் காட்டாது திடீரெனத் திருப்புதல், இரவில் வீதியில் வானங்களை நிறுத்தும்போது நிறுத்தல் வெளிச்சத்தைப் (porklight) பாவிக்காமை போன்றன.
நல்லநிலையில் வாகனங்களை வீதியால் செலுத்துதல்
வானங்களைத் தெருக்களில் செலுத்துவதற்கு முன்னர் அவை நல்ல நிலையில் செயற்படுகின்றனவா? என்பதை உறுதிசெய்து கொள்ளல்
சாரதிகளின் நடத்தை
வீதியால் வாகனங்களைச் செலுத்தும்போது மிகவும் உன்னிப்பாகவும் கவனமாகவும் இருத்தல்வேண்டும் சாரதிகளின் கவனக்குறைவு வாகனத்தில் பயணிப்பவர்களையும் வீதியால் பயணிப்பவர்களையும் விபத்துக்குள்ளாக்குகின்றது. பயணிகளை ஏற்றிச் செல்லும் வானங்கள் தடம்புரழும்போது அதிகமானோர் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளா கின்றனர்.
மற்றும் சாரதிகளுக்குப் பார்வை, கேட்டல் குறைபாடு ஏற்படும் சந்தர்பத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனைபெற வேண்டும். அத்துடன் தலைக்கவசம், ஆசனப் பட்டி என்பனவற்றைப் பயன்படுத்து வதன்மூலம் சாரதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பாதசாரிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப்பாவனையாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
- பாதசாரிகள் நடந்து செல்லும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சமாந்தரமாக நடந்துசெல்வதைத் தவிர்த்தல்.
- வீதிகளைக் குறுக்கிடும்போது அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதி யினைப் பாவித்தல்.
- மதுபோதையில் வீதியில் நடப்பதைத் தவிர்த்தல்.
டாக்டர் ஆர். பரமேஸ்வரன்,
வைத்திய அதிகாரி,
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை