இந்தப் பூவுலகில் வாழும் ஒவ்வோர் உயிருக்கும் தொடக்கம். முடிவு ஆகிய இரு செயற்பாடுகளும் உண்டு. அந்தவகையில் மனிதன் என்ற உயிரியும் அதற்கு விதிவிலக்கல்ல. கருவறையில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம் கல்லறை வரைக்கும் தொடர் கதையாகத் தொடர்கின்றது. கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் பலவகையான கற்றல்கள் ஊடாக இன்பம், துன்பம் இரண்டையும் ப(ா)ல் வேறுபட்ட விகிதாசார அளவுகளில் அனுபவிக்கின்றான்.
மனிதனது வாழ்க்கையானது பல படிநிலைகளைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பல வகையான வளர்ச்சிப் படிகளைக் கொண்டுள்ளான். இந்த வகையில் முதுமை என்பதும் மனிதனின் படிநிலைகளில் ஒன்றுதான் என்பதை நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
இன்றைய உலகின் உன்னத வளர்ச்சியின் பெருமைக்குரிய வர்கள் இந்த முதியவர்கள். இவர்களின் கடந்த கால அனுபவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் எடுத்தல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். அத்துடன், முதியவர்கள் தங்கள் கடந்த கால அனுபவ உண்மைகளைத் தற்கால உலகின் யதார்த்தத்துடன் ஒப்பிட்டு அதற்கேற்ப அனுபவப் பகிர்வினை வழங்கி வழிகாட்டல் செய்தல் நன்று. இதன்மூலம் சந்ததி இடைவெளி அல்லது தலைமுறை இடைவெளி என்ற ஒன்றினால் ஏற்படும் மன உளைச்சல்கள்
தவிர்க்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் இயந்திரத்துடன் இயந்திரமாகப் பயணித்த இன்றைய முதியோர், இன்று இயந்திரத் தன்மையற்று மனிதத்தன்மையுடைய மனிதனாகப் போதியளவு ஒய்வும் நித்திரையும் அமைதியும் உள்ள ஒரு பொற்காலத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். “அவசரக்காரனுக்குப் புத்தி மத்திமம்” என்ற முதுமொழிக்கமைவாகக் கடந்தகால வாழ்வில், சில இடங்களில், சில தவறுகள் இடம் பெற்றிருப்பின் அவற்றைத் தற்கால சந்ததியினரும் விடாமல் இருப்பதற்கு நல்ல முறையில் அனுபவப் பகிர்வை வழங்குதல் மூலம் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்குவதினுடாக முதியோர் தமக்குள்ளே உள்ள சுமைகளை இறக்கி வைப்பதற்கும் ஒர் ஊடகமாக இதனைப் பயன்படுத்த வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவ்வாறு முதியோர் திருத்தங்கள் பற்றிய சிந்தனையில் ஈடுபடல் அவர்களின் வாழ்வில் மன நிறைவுக்கும், திருப்திக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய முதியவர்கள் ஆவர். எனவே, அவர்கள் தங்கள் பிற்கால வாழ்வில் நன்நிலை வாழ்வு வாழவும், இக்கால முதியோர் வழியமைத்த பெருமைக்குரியவர்கள் ஆவர். இவ்வாறான நேற்றைய இளைஞனின் ஆலோசனைகளை, இன்றைய இளைஞன் அனுசரித்தால், இன்றைய இளைஞன் மட்டுமல்ல, நாளைய இளைஞனும் அதனைச் செவிசாய்ப்பான் என்பது
திண்ணம்.
க.சதாநந்தன்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ். போதனா வைத்தியசாலை.