இன்றைய நவீன யுகத்தில் விஞ்ஞானம், மருத்துவத்துறையில் எவ்வளவு சாதனைகளை எட்டிய நிலையில் மனிதன் விணே விபத்துக்களில் சிக்கித் தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.
ஒரு சில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை. எனினும் பெரும்பாலான விபத்துக்கள் மனிதனின் அவசரத்தாலும், போட்டியாலுந்தான் ஏற்படுகின்றன.
இந்த விபத்துக்களால் அங்கவீனம் அடைவதுடன் சிலர் மரணத்தையும் தழுவுகின்றனர். பெரும்பாலான வீதி விபத்துக்கள் அதிகூடிய வேகத்தில் வாகனம் செலுத்துவதாலும், மது போதையில் வாகனம் செலுத்து வதாலும் ஏற்படுகின்றன என்பது வைத்தியசாலைப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
எனவே மனிதர்கள் ஒவ்வொருவரும் இதை உணர வேண்டும். இதனைச் சட்டத்தால் திருத்தமுடியாது. எவ்வளவு சட்டம் போட்டாலும் ஒவ்வொருவரும் உணர்ந்து திருந்தும் வரை இதனைத் தடுக்க முடியாது.
எனவே ஒவ்வொருவரும் எமது வாழ்வு பெறுமதியானது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். உங்களது ஒரு நிமிட அவசரம் எத்தனை உயிர்களைப் பலிகொள்ளவும், காயமாக்கவும் காரணமாகிறது.
அதேநேரம் அதே ஒரு நிமிட நிதானம் எத்தனை பேர்களைக் காப்பாற்றவும் உதவுகிறது. எந்த ஒரு மனிதனும் தனது தவறுகளை ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால் உண்மை உங்கள் மனச்சாட்சிக்கே தெரியும். எனவே வாகனம் செலுத்தும்போது நிதானமாகவும், பொறுமையாகவும் செலுத்துவோம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக வீதி ஒழுங்குகளைப் பலர் கடைப்பிடிப்பதில்லை. அவற்றை காவல்த்துறையினர் நின்றுதான் ஒழுங்குபடுத்தவேண்டும் என எண்ணாமல் நாம் ஒவ்வொருவரும் நிதானமாகவும், அவதானமாகவும் ஒழுங்கு முறைப்படியும் வாகனம் செலுத்துவோமாயின் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது உண்மையாகும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் போட்டி அவசரம், மதுபோதை என்பவற்றைத் தவிர்த்து நிதானமாகவும், பொறுமையாகவும், ஒழுங்குமுறையாகவும் வாகனம் செலுத்தி எம்மையும், மற்றவர்களையும் காப்பாற்றுவோமாக.
செ.தவச்செல்வம்
தாதிய உத்தியோகத்தர்,
யாழ்.போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.