ஒருகாலத்தில் நம் நாட்டில் தொற்றுநோயால் இறக்கும் மக்களின் தொகை அதிகமாக காணப்பட்டது. வகை, தொகை இன்றிய இவ் இறப்புகள் அந்நேரத்தில் எம்மக்களின் அடிவயிற்றில் புளியை கரைத்தன. நிர்ப்பீடனஊசி (Vaccination) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்நிலை, இன்றில்லை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தோம். ஆனால் இன்று மீண்டும் அவ்வாறான அபாயநிலை – அவலநிலை ஒன்று தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதனை பல மருத்துவர்களும் சமூகவியலாளர்களும் சுட்டிக்காட்டுவதுடன் எம்மாலும் உணரக்கூடியதாக உள்ளது. ஆம் எம் சமூகத்தின் மீது இருள் மேகங்கள் கவிழத் தொடங்கியுள்ளன. ஆவை எம் சமூகத்தின் இருப்பையே இல்லாதொழித்திடும் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளன.
எம் வாழ்வை இருளில் ஆழ்த்தி , அழகிய எம் வாழ்வை சின்னாபின்னமாக்கி கசக்கி வீதியில் வீசிடும் பாலியல் நோய் – எயிட்ஸ் நோயே. இன்று எம்மவர்களை எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாது அழிக்க ஆழ ஊடுருவி வருகின்றது.
இன்று எம்மத்தியில் டெங்குநோயால் பாதிக்கப்படுவோர் நாளும் அதிகரித்துவரும் நிலையில், ஏன் நாம் எயிட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். டெங்கு நோய் ஒருவருக்குதொற்றிவிட்டால் 5-7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் வெளிக்காட்டப்படும். நோயாளி நிச்சயமாக வைத்திய சிகிச்சைக்கு உட்பட்டேயாக வேண்டும். ஆகவே அதனை குணப்படுத்துவது இலகு. ஆனால் AIDS அவ்வாறு அல்ல. நோய்த்தொற்றுக்கு ஆளானவர் , உடனடியாக நோய் அறிகுறிகளை காண்பிக்கமாட்டார். நோய் அறிகுறிகளை காண்பிப்பதற்கு 8-10 வருடங்கள் வரை ஆகலாம். அதுவரை அவர் சாதாரண மனிதர் போலவே காணப்படுவார். ஆனாலும் அவர் AIDS நோயை பரப்பக்கூடிய ஒருவராகவே இருப்பார்.
அவர் அபாயகரமான பாலியல் நடவடிக்கைகள் உள்ள ஒருவராக அமைந்துவிட்டால், அதாவது இக்காலப்பகுதியில் பல முறையற்ற பாலியல் தொடர்புகளை அவர் மேற்கொள்வாராயின் அவரிடமிருந்து AIDS நோய் மற்றையவர்களுக்கு தொற்றும் வாய்ப்புக்கள் பலமடங்கு அதிகமாகும். இந்நிலையில் தொற்றுக்குள்ளாகியவருக்கு தனக்கு நோய் இருப்பது தெரியவரவே 8-10 வருடங்கள் வரை ஆகும்.
அந்நிலையில் புதிதாகதொற்றுக்குள்ளாகியவரும் பலருக்கு இந்நோயை பரிமாற்றிவிடுவார். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் அதிகரித்த பயன்பாடு காரணமாகவும் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மட்டத்தில் இது கூடுதலாக அவதானிக்கப்படுகிறது. இப்போது விளங்குகிறதா? இந்நோயின் அபாயத்தன்மை. எனவேதான் இந்நோயை பற்றி நாம் கதைக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஆனாலும் தொற்றுதலடைந்து 2 – 3 மாதங்களின் பின் குருதியை சோதித்தால் நோய்க்கான சோதனையில் கிருமி இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
வெள்ளம் வருமுன்தான் அணை கட்டிட வேண்டும். வருமுன் காப்பு நடவடிக்கைகளை இளையோர் மனத்தில் பதித்திடவேண்டும். எனவே எயிட்ஸ் நோய் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வோம். பொறுப்புடன் நடந்திடுவோம். விழிப்புடன் செயற்படுவோம்.
நம்நாட்டில் அண்மைக்காலமாக இளவயது எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நம்நாட்டில் இன்றுவரை 2241 AIDS நோயாளிகள் இனங்காணப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட ஐயாயிரம் (5000) HIV தொற்றிற்குள்ளானவர்கள் நம்நாட்டில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இன்றுவரை HIV தொற்றுக்குள்ளானவர்கள் எண்பத்தொன்பது (89) பேர் இனங்காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வருடத்தில் இன்றுவரை ஒரேஒரு எயிட்ஸ் நோயாளியே புதிதாக வடபகுதியில் இனங்கானப்பட்டுள்ளார். மொத்தமாக 17 நோயாளிகள் வடபகுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வெண்ணிக்கைகள் நீரினுள் மிதக்கும் பனிக்கட்டிப்பாறையின் பருமன் போன்றதே. பனிக்கட்டிப்பாறை நீரினுள் மிதக்கும் போது நீரின் மேல் சிறியபகுதியே வெளித்தெரியும். மிகுதி–பெரும்பகுதியும் நீரினுள் மறைந்து காணப்படும். அதுபோலவே, இங்கு பதியப்பட்ட எண்ணிக்கைகளிலும் பார்க்க ,பலமடங்கு எண்ணிக்கைகள் சமூகத்தில் மறைந்திருக்கும். முன்பு சொன்னது போல் பலருக்கு,தாம் HIV தொற்றுக்குள்ளானது தெரியாமலே இருப்பார்கள். வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைக்கு வந்து , பரிசோதிக்கப்படும் போது விபத்தாகவே AIDS நோயாளிகள் இனம் காணப்படுகின்றனர். மாறாக, தனக்கு AIDS நோய் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகித்து, பரிசோதனை செய்து கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே.
இனிவரும் பந்திகளில் எயிட்ஸ் நோய் பற்றி சாதாரணமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை பற்றிப் பார்ப்போம்.
இந்நோய்,HIV (Human lmmuno deficiency Virus) என்கிற வைரசினால் ஏற்படுகிறது. இவ் வைரஸ் தன் மேற்பரப்பிலுள்ள , புரதத்துணிக்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதன் காரணமாகவே, இதற்கு எதிரான மருந்தினை கண்டறிவதற்கு விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமெடுத்து. தற்போது இதன் கலத்தினுள் உள்ள நிறமூர்த்த அலகான RNAக்கு எதிராக மருந்தினை கண்டறிந்துள்ளனர்.
AIDS என்றால் பெறப்பட்ட நீர்ப்பீடனக் குறைபாட்டின் காரணமாக வருகின்ற நோய்களின் அறிகுறிகளின் கூட்டாகும். (Acquired Immuno deficiency syndrome – AIDS) இது ஒரு தனி நோயல்ல. இது பல நோய்த்தாக்கங்களின் குணங்குறிகளின் அல்லது அறிகுறிகளின் கூட்டே ஆகும்.
வைரஸ் உடலினுள் தொற்றியவுடன் எவ்விதமான அறிகுறிகளையும் வெளியில் காண்பிக்கமாட்டாது. அதன் அறிகுறிகள் வெளியில் தோன்ற 8 – 10 வருடங்கள் வரை செல்லும். ஆனால் இவ் நோய்க்கான வைரஸ்,குருதியினுள் சும்மா இருக்காது. வெண் குருதிச் சிறுதுணிக்கைகளில் தொற்றி அவற்றினுள் பெருக்கமடைந்து அவற்றின் எண்ணிக்கையை குறைவடையச் செய்யும். சாதாரண காய்ச்சலைக் கூட எதிர் கொள்ளமுடியாது தொற்றுக்குள்ளான நோயாளி மிகுந்த சிரமமடைவார். சிலசமயம் சாதாரண காச்சலுக்கே மரணம் அடையும் பரிதாபநிலை கூட ஏற்படலாம்.
இவ் வைரசுக்கள் குருதி, சுக்கிலப்பாயம் ,யோனிச்சுரப்பி போன்றவற்றில் விரும்பி உறையும். இதன் காரணமாகவே பாதுகாப்பற்ற – அபாயகரமான பாலியல் நடத்தை உள்ளவர்கள் இதன் தாக்கத்திற்கு இலகுவில் ஆளாகின்றனர். ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் வாணிபத்தில் ஈடுபடுவோர் மிக மோசமாக இந்நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும் தொற்றுள்ளானவரின் குருதியை மற்றவருக்கு வழங்குதல், தொற்றுள்ள தாயிலிருந்து குழந்தைக்கும், சுத்திகரிக்கப்படாத ஊசி மூலம் போதைபொருள் ஏற்றிக்கொள்ளும் குழுவினருக்கும், சுத்திகரிக்கப்படாத, போதிய பாதுகாப்பற்ற ஊசிமூலம் பச்சை (Tatoo) குத்திக்கொள்ளும் போதும், தொற்றுக்குள்ளானவரின் இழையத்தை இன்னொருவருக்கு மாற்றீடுசெய்யும் போதும் இந்நோய் பரவும் சாத்தியங்கள் அதிகம் .கைகுலுக்குதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், எயிட்ஸ் நோயாளி பாவித்த பாத்திரங்களை பாவித்தல், நுளம்புக்கடி, போன்றவற்றால் எயிட்ஸ் நோய் பரவுவதில்லை. எனவே நாம் இவை பற்றி பயம் கொள்ளதேவையில்லை.
நோய்த்தொற்று தனக்கு இருக்கலாம் எனக் கருதுபவர் / சந்தேகிப்பவர் குருதிவழங்குவதை தவிர்க்கலாம். அதேபோல் ,தனக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் தாய், கருத்தரிப்பதை தவிர்க்கலாம். பாதுகாப்பான நம்பிக்கையானவருடன் மட்டுமே அதாவது பாலியல் துணையுடன் மட்டுமே உடலுறவை மேற்கொள்ளலாம். முடியுமானவரை போதைப் பொருள் பாவனை, பச்சைகுத்துதல் போன்றவற்றை தவிர்க்கலாம். இவற்றின் மூலமே இந்நோய் பரம்பலை தடுக்கலாம். எமது சமூதாய இருப்பையும் உறுதிப்படுத்தலாம். உங்கள் தவறான வாழ்க்கைமுறை பழக்கத்தினால் உங்களுக்கு விசுவாசமான – நம்பிக்கையான வாழ்க்கை துணைக்கு எயிட்ஸ் நோயை வழங்கிவிடாதீர்கள்.
சடுதியான நிறைகுறைவு, இரவு நேரக்காய்ச்சல் ,நிணநீர் முடிச்சுகளின் வீக்கம், நாக்கின் மேற்பரப்பில் தடித்த வெண்ணிறபடலம்,கடுமையான வயிற்றோட்டம், தோலில் ஏற்படும் கட்டிகள் (Kaposis sarcoma) என்பன இந்நோயினால் ஏற்படும் குணம் குறிகளாகும். உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறைவடைவதால், கசநோய் தொற்றும் இவர்களுக்கு ஏற்படும் சாத்தியம் அதிகம். எனவே அதன் குணம் குறிகளும் இந்நோயாளிக்கு ஏற்படலாம்.
AIDS பரவுவதை தடுக்கும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நாங்கள் அறிவோமா?
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு ஏற்பட்டிருந்தால் அல்லது தனக்கு பாலியல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என சந்தேகித்தால் யாழ் போதனாவைத்தியசாலையில் அமைந்துள்ள அறை இலக்கம் 33 க்கு சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன் சிகிச்சையினையும், இரத்தப்பரிசோதனைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இரகசியத்தன்மையும் இங்கு பேணப்படும்.
இந்நோயை எவ்வாறு தடுத்திடலாம் என இனிப்பார்ப்போம். பாதுகாப்பற்றஉடல் உறவை தவிர்த்தல், குருதி ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது நம்பிக்கையான நெருங்கிய உறவினர்களிடம் மட்டுமே குருதியை பெற்றுக்கொள்ளல், தொற்றுள்ள தாயொருவர் கருத்தரிப்பை தவிர்த்தல் ,போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாவதை குறிப்பாக ஊசிமூலம் ஏற்றும் பழக்கத்திற்கு உள்ளாவதை தவிர்த்தல், முடியுமானவரை பச்சைகுத்துவதை தவிர்த்தல், சவரம் செய்யும் போது, புதிய பிளேட்டை (Blade) பாவித்தல் போன்ற முறைகள் மூலம் நோய் பரம்புவதை தடுத்திடலாம்.
மேலும் குடும்பத்தினர் குறிப்பாக மூத்த அங்கத்தவர்கள் இளம் சகோதரர்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களை சரியான முறையில் நெறிப்படுத்தி வழிப்படுத்திட வேண்டும். அவர்களின் ஓய்வு நேரத்தை உற்சாகமாக கழித்திட உதவிட வேண்டும். உடல் அப்பியாசம், கிரிக்கட், கரப்பந்து, கிளித்தட்டு போன்ற வெளிக்கள விளையாட்டுக்களில் ஈடுபட உற்சாகப்படுத்திட வேண்டும். அவர்களின் நட்புவட்டத்தினையும் கண்காணித்து அறிவுரை கூறிடவேண்டும். பதின்மவயதில் (teenage) நட்புவட்டத்தினரின் தூண்டலினால் பலபரீச்சார்த்த முயற்சிகளில் ஈடுபடதுடிப்பர். இவ்வாறான நிலையிலேயே, புகைத்தல், மதுபானம், பாபுல்பாக்கு போன்ற தீயபழக்கங்களை பழகும் வாய்ப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இவை, பின்பு முறை தவறிய–ஆபத்தான பாலியல் நடத்தைகளுக்கும் அவர்களை இட்டுச்செல்லும். எனவே எம், இளம் சமூதாயத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான முறையில், அவர்களின் பதின்ம வயதுப்பருவத்தை கடந்திட உதவிட வேண்டும்.
போரின் பின்னரான பொருளாதார நிலையில் மிகவும் நவிவடைந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள் பல இன்று இங்குண்டு. இவர்களை இந்நோய் விழுங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள், அவர்களின் பொருளாதரத்தை மேம்படுத்திட உதவ வேண்டும்
பாதிக்கப்படக்கூடிய அபாயகரமான பாலியல் நடத்தை உள்ளவர்களையும், பொருளாதரத்தில் நலிவடைந்த குடும்பத்லைவனை இழந்த குடும்பங்களின் மீது சமூகஅக்கறை உள்ளவர்களும் சமூகஅமைப்புகளும் அதிக கரிசனை செலுத்திடவேண்டும் அவர்களின் வாழ்க்கை பிறழ்வடைவதை தடுத்து சாதாரண வாழ்வியலில் இணைத்திட உதவிடவேண்டும்
நோய் தொற்றுக்கு ஆளாகியோர் சமூகத்திலிருந்து ஒதுங்குவதும் அல்லது சமூககத்தால் ஒதுக்கப்படுவதும் நல்லதல்ல. அவர்களையும் சாதாரண மனிதர்கள் போல் நடாத்தி வாழவழி செய்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் வெட்கம். கவலை. வாழ்க்கையில் வெறுப்பு, இறப்பு. பற்றிய பயம் என்று இன்னொரன்ன எண்ண உளைச்சல்களுக்கு ஆளாகி எஞ்சிய வாழ் நாட்களை நரகமாக்கியே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் உளவியல் ஆதரவு அவர்களின் இந்த மனஉளைச்சல்களை குறைத்து இயல்பாக வாழஉதவிடும்
பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் என்ன பாவம் செய்தார்கள் ? அவர்களை சமூகம் ஒதுக்கி அந்த பிஞ்சு உள்ளங்களில் சூட்டுக் கோலை செருகிடலாமோ?
இளைஞ்ர்களே! அற்ப ஆசைகளுக்காக உங்கள் வாழ்க்கையை நீங்களே கசக்கி வீதியில் வீசி விடாதீர்கள். அது உங்களை அழித்துக் கொள்வதுடன் நின்றுவிடாது இந்த சமூதாயத்தையும் அழித்ததாகவே அமைந்துவிடும். உங்கள் வாழ்க்கையை உயர்ந்த குறிக்கோள்களுடனும் சுயகாட்டுப்பாட்டுடன் கூடிய துணிவுடனும் அறிவு ஆற்றலுடனும் செலுத்துவீர்களானால் நிச்சயம் நீங்கள் இந்த சமூகத்திற்கு பாரமாக போவதில்லை.
வைத்தியர்.பொ.ஜெசிதரன்,
(MBBS, DFM (Colo))
( டிசம்பர் 01 – சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.)