இன்று உலக அரங்கில் வருடாந்தம் 60 லட்சம் மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டு பலகோடிக் கணக்கான மக்களை நோயாளிகள் ஆக்குகின்ற புகையிலையின் பிறப்பிடம் அமெரிக்கா 15ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் குளிர் பனி போன்ற விசேட காலங்களில் பாவித்துவந்தனர்.
இதனை புதிய உலகைக் கண்டு பிடிக்கப்புறப்பட்ட கொலம்பளம், மாலுமிகளும் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அவதானித்ததாக வரலாறு கூறுகிறது. பின்பு அங்கிருந்து ஸ்பெயின் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாயப் பேரரசர் ஆட்சிக் காலத்தில் பயிரிடப்பட்டுப் பின் ஆசிய நாடுகளில் எல்லாம் மிக வேகமாகப் பரவியது. தற்போது இது இல்லாத நாடு எதுவும் இல்லை எனும் அளவுக்கு ஊடுருவி, மனித சமுதாயத்தில் பல்கிப் பெருகிச் சர்வசாதாரணமாக இருக்கும் புகைப்பிடிப்பழக்கம் எல்லோரையும் தன்வயமாக்கிப் பழக்கமானதொரு வழக்கமாகி விட்டது. வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்மீது மட்டும் பற்று இருக்குமாறு இப்புகைக்குடி செய்து விடுகிறது.
பலவிதமான நச்சுப்பொருள்களைக் கொண்ட புகையிலையில் உள்ள நிகோட்டின் எனும் நஞ்சானது மூளையையும் அதன் நரம்பு மண்டலங்களையும் தூண்டி விடுகிறது. இதனால் தற்காலிகப் புத்துணர்ச்சி பெறுவது போன்ற இன்பம் அடைகின்றான். இருதயத்தையும் அதிவேகமாகத் துடிக்க வைக்கிறது. குருதிக் குழாய்களையும் குறுக்கி விடுவதால் குருதி அமுக்கம் தற்காலிகமாக அதிகரிக்கிறது.
இப்புத்துணர்ச்சிக்குப் பின் மனிதன் மிகச் சோர்வுள்ளவனாக ஆகிவிடுகிறான். எனவே மீண்டும் புத்துணர்ச்சிபெற விரும்புகிறான். அதனால் மீண்டும் புகையை நாடுகிறான். இவ்வாறு புகைக்குடிக்கு அடிமை ஆகிறான். ஒருமுறைபுகை குடிக்கும்போது உடலில் சென்ற நிகோட்டின் ஆனது நான்கு மணித்தியாலயத்துக்கு உடலில் அதன் தாக்கம் இருக்கும் மக்கள் புகையிலையைச் சுருட்டு பிடி வாய்ப் புகையிலை, சிகெரெட் முக்குத்துள் போன்ற வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினரும் உயர் வர்க்கத்தினரும் கூடுதலாகச் சிகரெட் பாவிக்கிறார்கள். இதில் புகையை வடிகட்டும் பில்டர் உண்டு. ஏழைகளும் தொழிலாளர்களும் கூடுதலாகப் பிடி பாவிக்கிறார்கள். இது மலிவானது. எனினும் சிகரெட்டை விட ஆபத்தானது. பிடியில் உள் எடுக்கப்படும் புகையில் காபன் மொனக்சைட் நிகோடின், வைற்ட்ரஜன் சயனைட்டு, பொன் சோபைரின் மற்றும் அமோனியா போன்றவை சிகரெட்டில் உள்ளதைவிடக் கூடுதலாக உள்ளெடுக்கப்படுவதால் அதிக ஆபத்தைக் கொடுக்கும். அத்துடன் இதில் வடிகட்டுவதற்கு பில்டர் இல்லை. வாய்மூலம் மெல்லப்படும் உமிழ்நீர் கலந்த புகையிலைச்சாறு ஆனது வாய்ப்பகுதி, சுவாசப்பை வயிற்றுப் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
ஒருவர் சிகரெட் குடிக்கும்போது அதில் 1/3 பகுதி நிகோடின் புகைமூலம் உடலினுள் உள்வாங்கப்படுகிறது. அத்துடன் விரைவாகக் குடிக்கும் போதும் சிகரெட் எரிந்து குறுகும்போதும் கூடுதல் அளவு நிகோடின் உள்வாங்கப்படுகிறது. மீதி நிகோடின் ஆனது காற்றின்மூலம் விட்டுச் சுவர்கள் கட்டில்கள் தரை தரைவிரிப்புகள், மேசை, நாற்காலிகள் போன்ற மரப்பொருள்களிலும் அவர் அணிந்திருக்கின்ற உடை அவரது தோல் பகுதிகளிலும் படிகின்றன. பின்பு இந்த நிகோடின் ஆனது காற்றில் உள்ள நைட்டஸ் அமிலத்துடன் (Nitrous acid) கலந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (TSNAS) Tobacco Specific Niro samines எனும் நச்சுப் பொருளை உண்டாக்குகின்றது. இது விட்டில் தவழும் குழந்தைகள் ஓடி விளையாடும் பிள்ளைகளின் தோல், சுவாச மூலம் உடலினுள் சென்று ஏதும் அறியாதவர்களும், புகை பிடிக்காதவர்களும் இதனால் பாதிக்கப்படுவதற்குக் காரணமாகின்றது.
சாதாரண சிகரெட் புகையில் நிகோடின் பைரிடைன் அமோனியா மெதிலைமன் பிரஸ்ஸிக் அசிட் கார்பன் மொனசைட் சல்பரிட் ஹட்ரஜன் கார்பாலிக் அசிட் காவிடிக் இது போன்ற 19 வகையான உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது.
ஒருவருக்கு ஏற்படும் இந்தப் புகைத்தல் பழக்கத்தால் பணவிரயம், காலவிரயம் சக்தி விரயம், உதடைக் கருகச் செய்தல் பற்களின் நிறமாற்றம் பல்ஈறுகளில் காவிபடிதல், வாய் துர்நாற்றம், இதய நோய்கள், சுவாசப்பை நோய்கள் இரத்த அழுத்தம், கண்பார்வை மங்குதல், உஷ்ண இருமல், சீரண சக்தி குறைவு, பசியின்மை, துக்கமின்மை, மூச்சுத்திணறல், ஆஸ்துமா இரத்தக்குழாய்கள் சுருக்கம் இரத்த நாளங்களில் அழற்சி, கசரோகம், சரீர வளர்ச்சி குறைவு உடலின் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படுதல், சிறு மரணம், குறைப் பிரசவம், பாரிசவாதம், மலட்டுத்தன்மை வாய், தொண்டை உணவுக் குழாய், சுவாசப்பை போன்ற பகுதிகளில் புற்றுநோய்கள் நாவு சுவை அற்று இருத்தல், இப்படியே தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கலாம். இப்படிப் புகையிலை பாவிக்கும் பழக்கத்தில் இருந்து ஒருவர் மீள்வதற்கு ஆரம்பம் ஆயின் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
புகைத்தலை முற்றாகத் தவிர்த்தல், பல நாள்களாகவே இப்பழக்கம் இருப்பினும் நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும் கூடுமானவரை புகைப்பிடிப்பவர்களோடு இருத்தலைத் தவிர்த்தல், தண்ணீர் அல்லது சீனி சேர்க்காத பழரசங்களை அதிக அளவில் அருந்துதல், கிளர்ச்சியூட்டக்கூடிய எல்லாப் பானங்களையும், உணவுகளையும் தவிர்த்தல், சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் உடற் பயிற்சி செய்தல், உலாவுதல், உங்கள் புகைகுடியோடு சம்பந்தப்பட்ட இடங்களைத் தவிர்த்தல், செயல்களைத் தவிர்த்தல், அதிகம் புகைகுடிக்கும் பழக்கம் முன்பு இருப்பின் படிப்படியாகக் குறைத்தல் மாற்றுப் பழக்கத்தை ஏற்படுத்தல் (ஸ்விங்கம்) வாயில் போட்டு நெடுநேரம் மெல்லுதல், மருத்துவம், மனோவசிய முறைகளை நாடுதல், தனிமையில் இருத்தலைத் தவிர்த்தல், தன்னடக்க முறை. சிகரெட்குடிப்பது தவறு. அது எமது உடலுக்கு நஞ்சு என்பதை அறிந்து புறமனதின் அறிவுறுத்தலினால் நாம் ஒவ்வொருவரும் இதில் இருந்து மீட்சி பெறுதல் வேண்டும். இன்று உலக அரங்கில் எந்த அரசின் பொருளாதாரத்திலும் புகையிலைப் பொருள்களும் மதுபானமும் அதிக வருமானத்தைக் கொடுப்பதால் அதனை முற்றுமுழுதாகத் தடை செய்யமுடியாத நிலையில் உள்ளது. எனினும் மக்கள் நலன் கருதி இதன் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தடை செய்வதன் மூலமும் இதன் பாதிப்புக்களை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலமும், மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு இதுபற்றிய அறிவைப் புகட்டுவதன் மூலமும் பொது இடங்கள், மக்கள் போக்குவரத்துப் பாதைகள் போன்றவற்றில் இவை பாவிப்பதை தடைசெய்வதன் மூலமும் ஒவ்வொரு தனிமகனும் இதுபற்றி விழிப்புணர்வு பெற்று இதில் இருந்து மீள்வதன் மூலம் எம்மால் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முடியும்.
ச. சுதாகரன்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ் போதனா வைத்தியாசாலை.