தற்போதைய உலகில் இறப்பு வீதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் நீண்டகாலத்திற்குரிய சுவாச நோய்கள் (வருடத்துக்கு நான்கு மில்லியன்) விளங்குகின்றன. அதிகரித்த புகையிலைப் பாவனை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சரீர உழைப்பின்மை மற்றும் அதிகரித்த மது பாவனை என்பவையே இந்த நோய்களின் தூண்டற் காரணிகளாக அமைகின்றன.
பொதுவான சுவாசநோய்களாவன
- மூக்கிலிருந்து நீர்வடிதல்
- தடிமன்அல்லது ஜலதோஷம்
- கக்குவான் இருமல்
- மார்புச்சளி நோய்
- சுவாசக்குழாய் அழற்சி
- ஆஸ்துமா
- நியூமோனியாக்காய்ச்சல்
- கசம்
- சன்னி
- சுவாசப்பைப் புற்றுநோய்
பொதுவாகச் சுவாசநோய்கள் கீழ்வரும் காரணிகளால் ஏற்படுகின்றன.
- ஒவ்வாமை – மகரந்தமணி, தொழில்சார் உணர்திறன்கள்,துசித்தெள்ளு, சில மருந்துப்பொருள்கள்.
- நுண்ணங்கித் தொற்று – பக்ரீரியா (குக்கல், கசம், ஈர்ப்புவலி), வைரஸ் (தடிமன், சுவாசக் குழாய் அழற்சி)
- புகைப்பிடித்தல் (சுவாசப்புற்றுநோய்)
- மனஅழுத்தத்தால்துண்டப்படுதல் (ஆஸ்துமா)
- சில நோய்கள் பரம்பரையாகக் கடத்தப்படக் கூடியவை (ஆஸ்துமா)
- அன்னியப் பொருள்களை உள்ளெடுத்தல்
- குளிர்காலநிலை
- ஆரோக்கியமற்ற உடற்பயிற்சி
- ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்.
சுவாச நோய்களைத் தடுக்கவும் நோய்க்குரிய சமூகத்திலிருந்து எமக்குப் பரவாது தடுப்பதற்குமான வழிமுறைகளாவன…
- இருமும்போதும், தும்மும் போதும் மூக்கு வாய்ப்பகுதிகளைக் கைக்கட்டையினால் மூடிக்கொள்ள வேண்டும்.
- கண்ட இடங்களில் துப்புவதைத் தடுத்தல் அல்லது தவிர்த்தல் வேண்டும்.
- நோயாளிகளால் ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டுச் சிகிச்சைபெற வேண்டும்.
- சிகிச்சைபூரணப்படுத்தப்படவேண்டும்.
- குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவப்பரிசோதனை (அவசிய மான நோய்களுக்கு அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். (கசம்)
- புகைத்தல், மதுப்பாவனை போன்றவற்றை இயன்றளவுதவிர்த்தல்.
- சமையலின்போது புகை வெளியேறுவதை இயன்றளவு தடுத்தல்
- நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் உள்ள இடங்களில் வாழ்தல்
- எமது போசாக்கு நிலையையும், நோய் எதிர்ப்புச் சக்தி நிலையையும் நன்கு பேணுதல் வேண்டும்.
- வக்சின்கள் மற்றும் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் போட்டுக் கொள்ளப்பட வேண்டும். (BCG குக்கல்)
- நோயாக்கியின் வாழ்தகவு கூடிய காலநிலை மாற்றங்களின்போது காலநிலைக்கேற்றவாறு எம்மை இசைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
- காசநோயாளிகளாயின் அவர்கள் உரிய சிகிச்சையையை முழுமை யாகப் பெறுவதுடன், நோயாளியின் சளி சேகரிக்கப்பட்டு புதைக் கப்பட அல்லது எரிக்கப்பட வேண்டும்.
- மனப்பயிற்சிகள், சுவாசப்பயிற்சிகள் என்பவற்றில் ஈடுபடுவதன்மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்க முயலுதல் வேண்டும்.
- சளி மற்றும் சுவாசச் சுரப்புகளுடன் கையாண்டு முடிந்தபின் கைகளைச்சவர்க்காரமிட்டுக் கழுவுதல்.
- வாய்ச்சுகாதாரம் மற்றும் தோல் சுகாதாரத்தைப் பேணுதல் வேண்டும்.
சுவாச நோய்கள் பொதுவாகக் காற்றுவழியான பரவுகையைக் கொண்டிருப்பதோடு, அவை சிறந்த சுகாதாரப் பழக்க வழக்கங்கள் மூலம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படக்கூடியவை.
எனவே, சிறந்த சுகாதாரப்பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நோய்களுக்கான உரிய சிகிச்சைகளை முழுமையாகப் பெறுதல் மூலமும் சுவாசநோய்களை இல்லாதொழிப்போம்.
செல்வி க. யாதவணி,
மருத்துவபீட மாணவி