முறையான தூங்கும் வழக்கம் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் என்றும், குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்கள் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எலிகளில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, புற்றுநோய்க்கும் ஒழுங்கற்ற தூங்கும் வழக்கங்களுக்கும் இடையில் மறுக்க முடியாத தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது.
ஷிஃப்ட் வேலை செய்பவர்களின் உடல்நலம் குறித்த கவலைகளை ‘கரண்ட் பயாலஜி’ என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு எழுப்புகிறது.
குடும்ப வழியில் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து இருக்கும் பெண்கள் எப்போதுமே ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், இது சம்பந்தமாக மனிதர்களிடையே கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
தவிர ஒழுங்கான தூங்கும் வழக்கம் இல்லாதவர்கள், மற்றவர்கள் சாப்பிடும் அதே அளவான உணவை உட்கொண்டாலும் அவர்கள் அதிக உடற்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன.
ஷிஃப்ட் வேலை செய்பவர்கள், பல விதமான் நேரங்களிலும் பணியாற்றும் விமான சிப்பந்திகள் போன்ற பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்றும் வேறொரு ஆய்வு காட்டுகிறது.