ஏன் எமது குழந்தை நன்றாகச் சாப்பிடுவதில்லை?
என்பது அனேக பெற்றோர்களின் கவலையாகும். சாதாரணமாகவே ஒரு வயது முடிந்தபின், குறுநடை போடும் குழந்தைகள் (Toddlers) தாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து விடுவார்கள். இதற்கான பிரதான காரணி, இரண்டாம் வருடத்தில் குழந்தையின் வளர்ச்சி வீதம் குறைவடைவதால், உணவின் தேவை குறைவடைய பசியும் குறைவடைவதால், உணவின் தேவை குறைவடைய பசியும் குறைவதாகும். அதை விட குறுநடைபோடும் குழந்தைகள் எந்த நேரமும் துடிப்புடன் இருப்பதுடன், எப்போதும் விளையாடவே முயல்வார்கள், அதனால் உணவை மறுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வளர்ச்சி வீதம் சாதாரண நிலையிலும் இருப்பின் கவலையடையத் தேவையில்லை.
மேலும் எமது சமுதாயத்தில் காணப்படும் குறிப்பிடத்தக்க பிரச்சினை ஆறுமாத முடிவில் மேலதிக ஆகாரங்களாக வர்த்தக ரீதியில் தயாரித்த தானியமாக்கலவை, பிஸ்கட் என்பவற்றைக் கொடுத்து பழக்கிய பின்னர் சோறு, கறி போன்ற வழக்கமான குடும்ப உணவைக் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு அதில் நாட்டம் இருக்காது. ஏனெனில் வர்த்தக ரீதியான உணவு வகைகளின் சுவை குழந்தைக்கு பிடித்தால் அதையே தொடர்ந்தும் விரும்புவார்கள். அதனால்போஷாக்குகள் பலவும் நிறைந்த நமது அன்றாட உணவுகளைக் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
சரியாக சாப்பிடாத குழந்தையை எவ்வாறு சரிவர உணவருந்த வைப்பது?
- வேளை தவறாது, சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க முயற்சிக்கவும். மூன்று வேளை பிரதான உணவுடன், ஒரிரு தடவை இடைப்பட்ட உணவையும் (snacks) வழங்கவும். ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையில் 3, 4 மணித்தியால இடைவேளை அவசியம். தாய்ப்பாலையோ அல்லது மற்றைய நீராகாரங்களையோ சாப்பாட்டின் பின்னர் வழங்கவும்.
- ஒரே வகையான உணவைத் தொடர்ந்து வழங்கும் போது அந்த உணவின் மீது குழந்தைக்கு விருப்பமில்லாது போய் விடுகிறது. எனவே போஷாக்கான விதம் விதமான உணவுகளை வழங்கும் போது குழந்தை தனக்கு விருப்பமான உணவைத் தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும். ஒரு போதும் புதிய வகையான உணவுப் பொருள்களை வற்புறுத்தி வழங்கக் கூடாது. புதிய உணவை ஒரு தடவை விரும்பாத குழந்தை, மறுதடவை அதை விரும்பலாம். எனவே புதிய வகை உணவுகளை பல தடவைகள் வழங்கிப் பார்க்க வேண்டும். குழந்தை சிறிதளவுஉணவைத்தான் உட்கொள்கிறது எனின் அந்த உணவானது அதிக சக்தியும், போஷாக்கும் உடையதாக இருக்க வேண்டும். உதாரணமாக – ஒரு கிண்ணம் பாலில் சிறிதளவைத்தான் குழந்தை எடுக்கிறது எனின், அதே அளவைவிட குறைந்தளவு ஒரு சீஸ் துண்டின் மூலம் பாலிலுள்ள சத்தைவிடக் கூடிய போசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.
- எப்போதும் குடும்பமாக எல்லோரும் உணவருந்தும் போதே குழந்தைக்கும் உணவை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வளர்ந்தவர்கள் செய்வதைப் பார்த்துச் செய்யும் பழக்கம் உள்ளதால் பெரியவர்கள் சாப்பிடும் குடும்ப உணவில்ஆர்வம் ஏற்படும். ஆதேபோல் வழங்கும் உணவானது, சாதாரண குடுப்ப உணவாக இயன்றவரை இருப்பது நன்று. வர்த்தக ரீதியில் தயாரித்த, தகரத்தில் அடைத்த அல்லது பொதி செய்யப்பட்ட உடனடி உணவுகளைத் தவிர்த்தல் நல்லது,
- ஒருபோதும் குழந்தைக்கு முன்பாக நீர் இதைச் சாப்பிடவில்லை, நீர் சாப்பிட்டது காணாது போன்ற எதிர் மறைவான விடயங்களைக் கூறாது, அவர்களைச் பாப்பிட ஊக்கப்படுத்தக்கூடிய வசனங்களைக் கூற வேண்டும். பிள்ளைக்கு இ லஞ்சம் கொடுத்து சாப்பிட வைக்க வேண்டாம். உதாரணமாக – சொக்லேட் , இனிப்பு தருவேன் எனக்கூறி சாப்பிட வைக்கவேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தை சிறிதளவைச் சாப்பிட்டபின், இனிப்பு வைககளைக் கேட்டு அடம் பிடிக்கலாம்.
- உணவு வேளையில், குழந்தையை விளையாட்டுப் பொருள்களுடன் விளையாட விட்டோ அல்லது தொலைக்காட்சியை, வீடியோவை பார்க்க விட்டோ உணவை வழங்க வேண்டாம். ஆரம்பத்தில் இது பயனளித்தாலும் குழந்தை முழு ஆர்வத்தையும் உணவில் செலுத்தாது. விளையாடவோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதையோ தான் தொடரும். மாறாக குழந்தையும், குடும்ப உணவு வேளையில் மற்றோருடன் ஒன்றாகச் சேர்ந்து உணவு அருந்த வேண்டும் எல்லோரும் உணவு அருந்த வேண்டும். எல்லோரும் உணவருந்தும் வரை குழந்தையும் எல்லோருடனும் அமர்ந்திருக்க வேண்டும். மேலும் குழந்தையைத் தனது தூய கையினால் அணவை அள்ளி சாப்பிட இடமளிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு உணவில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உணவு வேளை சந்தோசமாக அமைய வேண்டும். உணவு வேளைகளில் தேவையற்ற வேறு விடயங்கள். முறுகலை உண்டு பண்ணும் விவாதங்கள் இருத்தலாகாது. அவை குழந்தைகளுக்குத் தாக்கத்தை உண்டாக்கலாம்.
- ஒரளவு வளர்ந்த பிள்ளைகளாயின், உணவு சமைக்கும் வேளைகளில், அவர்களுக்கு உணவுப் பொருள்களைக் காண்பித்து சமையல் செய்யும் போது அவர்களுக்கு அந்த உணவின் மீது விருப்பம் உண்டாகும். அதேபோல் உணவுப் பொருள்களுக்கு பிள்ளைகளுக்கு பிடித்த பெயர்களை விகடமாக வைக்கும் போது, அந்த உணவுகளுக்கு விருப்பம் உண்டாகும்.
- வீட்டிலுள்ள பெரியவர்களும், வளர்ந்த குழந்தைகளும், சிறு குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். வளர்ந்த பிள்ளை ஒன்று உணவொன்றை வெறுத்தால், சிறு குழந்தையும் அந்த உணவை வெறுக்கலாம். எனவே வளர்ந்த பிள்ளை உணவை ஒதுக்கக் கூடாது. எல்லோரும் உண்ணக் கூடிய குடும்ப உணவைப் பரிமாற வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சரியான உணவூட்டல் முறைகளை கைக்கொள்வதன் மூலம் சரிவர உணவருந்தாத குழந்தைகளுக்கும் போஷாக்கான குடும்ப உணவுகளை வழங்கி அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
மருத்துவர் – ந. ஸ்ரீசரவணபவானந்தன்
குழந்தை வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை