1. வயிற்றிலுள்ள சிசுவின் சாதரணமான துடிப்பு எவ்வாறு இருக்கும்?
அநேகமான கர்ப்பிணி பெண்கள் தமது சிசுவின் துடிப்பை முதலாவதாக 18 -20 கர்ப்ப வாரங்களில் உணர்ந்து கொள்வர். அது உங்களின் முதலாவது கர்ப்பம் எனின் 20 வாரங்களுக்கு அண்மித்ததாகவும் இரண்டாவது மூன்றாவது கர்ப்பம் எனின் 16 கர்ப்ப வாரங்களிலும் உணரப்படலாம்.
வயிற்றிலுள்ள சிசுவின் அசைவானது உதைத்தல், அசைத்தல், நீந்துதல், உருளுதல், போன்று உணரப்படலாம். சிசு வளரும்போது அசைவின் செயற்பாட்டிற்கு ஏற்ப மாறுபடலாம். அநேகமாக மதியம், மாலை வேளைகளில் அதிக அசைவுகள் உணரலாம்.
சிசுவின் நித்திரை கொள்ளும் நேரம் 20 – 40 நிமிடம் வரை வேறுபடலாம். இந்நேரத்தில் சிசு அசைவுகளை மேற்கொள்ளாது. அசைவுகளின் எண்ணிக்கை 32 கர்ப்ப வாரங்கள் வரை அதிகரித்து பின் மாறாது காணப்படும். ஆனால் அசைவின் வகை மாறுபடலாம்.
நீங்கள் வேலையில் ஈடுபடும்போது எல்லா வகையான அசைவுகளையும் உணர முடியாது போகலாம். உங்கள் சிசுவின் அசைவு பிரசவத்தின் போதும் உணரப்படும்.
2. சிசுவின் அசைவுகள் ஏன் முக்கியமானது?
உங்களது கர்ப்ப காலத்தில் வயிற்றிலுள்ள சிசுவின் அசைவு அதன் உடல் நலனைக் குறிக்கின்றது. சிசுவின் அசைவின் எண்ணிக்கை குறைந்தால் அல்லது அசைவின் வகை அசாதாரணமாக இருந்தால் சிசுவின் நலன் பாதிப்புற்றிருக்கலாம். நீங்கள் உடனடியாக உங்கள் பிரதேச மருத்துவமாதைத் தொடர்புகொண்டு சிசுவின் நலனை அறிதல் வேண்டும்.
3. எத்தனை அசைவுகள் போதுமானது?
அசைவுகளின் எண்ணிக்கை ஆளுக்காள் வேறுபடும். ஆனால் உங்களின் கர்ப்ப காலத்தில் சிசுவின் அசைவு எண்ணிக்கையும், வகையும் வேறுபடுவது ( அதிகரித்தல், குறைதல்) குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
சிசுவின் அசைவு எண்ணிக்கை முந்தியதிலும் குறைதலும் வகை வேறுபடுதலும்முக்கியமான மாற்றங்களாகும்.
4. சிசுவின் அசைவை உணர்வதைப் பாதிக்கும் காரணிகள் எவை?
நீங்கள் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தலும் வேலைப் பளுவும். சூல்வித்தகம் கருப்பையில் முன்பக்கச் சுவரில் காணப்படுதல். சிசுவின் கிடை ( முதுகுப்புறம் முன்நோக்கி இருப்பின் அசைவு குறைவாக உணரப்படும்)
5. சிசுவின் அசைவைக் குறைக்கும் காரணிகள் எவை?
- சில மருந்துகள் ( வலி நிவாரணி, நித்திரை, குளிசை)
- புகைத்தலும் மதுபானம் பாவித்தலும்
- சிசுவின் நரம்பு, தசைத்தொகுதி பாதிப்பு
- சிசுவின் உடல்நலன் பாதிப்பு
6. எவ்வாறு சிசுவின் அசைவை அவதானிக்கலாம்?
சிசுவின் அசைவின் எண்ணிக்கையையும் வகையையும் அட்டவணைப்படுத்துங்கள்
இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
1. Cardif “count10 ” formula நீங்கள் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்திலிருந்து ( மு.ப 8.00) அசைவை எண்ணத்தொடங்குங்கள். பத்து அசைவுகளை எண்ணி முடித்து நேரத்தைக் குறித்துக் கொள்ளவும்.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 12 மணித்தியாலத்தில் 10 அசைவுகளை விட குறைவாக துடித்தால் அல்லது ஒரு துடிப்பு 12 மணித்தியாலத்தில் உணரப்படாது விட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
2. நாளாந்த சிசுவின் துடிப்பு எண்ணிக்கை.
( Daily fetal movement count) காலை, மதியம், மாலை மூன்றுவேளையும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு அசைவுகளை எண்ணி 4 ஆல் பெருக்கவும் 10 இலும் குறைவதாயின் மருத்துவ ஆலோசனை பெறவும்.
தொடர்ந்து 3 மணித்தியாலம் அல்லது அதற்கு மேல் துடிப்பு உணரப்படாது விடின் வைத்திய ஆலோசனை பெறவும்.
7. சிசுவின் துடிப்பு நிச்சயமற்று காணப்படின் என்ன செய்யலாம்?
அமைதியாக கட்டிலிலோ , தரையிலோ இடதுபக்கம் திரும்பிப் படுக்கவும் தொடர்ந்து இரு மணித்தியாலத்திற்கு சிசுவின் துடிப்பின் மீது கவனத்தைச் செலுத்தவும்.
இரு மணிநேரத்தினுள் 10 இலும் குறைந்த அசைவுகளை உணர்ந்தால் வைத்திய ஆலோசனையை நாடவும்.
8. பிள்ளையின் துடிப்பு முன்னையிலும் குறைவாகக் காணப்படின் என்ன செய்ய வேண்டும்.
எப்போதும் வைத்தியரை நாடி ஆலோசனை பெறவும். துடிப்பு குறையின் அதனை புறக்கணிக்க வேண்டாம். குறைந்தது மருத்துவ மாதை தொடர்பு கொண்டு அவர் மூலம் சிசுவின் அசைவைப் பரீட்சிக்கலாம்.
ஒருமுறை மட்டும் துடிப்புக் குறைவை உணர்ந்த அநேகமான பெண்கள் நலமான பிளைகளைப் பெற்றெடுப்பினும் திரும்பத் திரும்ப துடிப்பு குறைவு காணப்படின் மகப்பேற்று வைத்திய நிபுணரின் கவனிப்புப் பெறுதல் மிக அவசியம். ஏனெனில் சிசுவை உடனடியாக பிரசவிக்க நேரிடலாம்.
எனவே உங்களின் வயிற்றிலுள்ள சிசுவின் அசைவு அல்லது துடிப்பு குறைவாக அல்லது வித்தியாசமா உணரப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடவும்.
Dr.யோ.சிவாகரன்
யாழ் போதனா வைத்தியசாலை.