வைத்தியர் – பிள்ளைக்கு எப்படி சாப்பாடு கொடுக்கிறீர்கள்?
தாய் – அதில் பிரச்சினை இல்லை .. காலையில் நூடில்ஸ், மத்தியானம் சோறும் பருப்பும், இரவில் இடியப்பம் சொதியுடன் கொடுக்கிறேன்.
வைத்தியர் – இடைநேரத்தில்
தாய் – ஏதாவது கடைத்தீன் கொடுக்க வேணும்.. பிஸ்கட், சொக்கிலேட் சாப்பிடுவான்.
வைத்தியர்– சாப்பாட்டின் அளவு எப்படி?
தாய் – ஒரளவு சாப்பிடுவான்… 3- 4 வாய் சாப்பிடுவான்.
உங்கள் பிள்ளையின் உணவூட்டல் பற்றிய உங்கள் எண்ணக்கருக்கள் வேறுபடலாம், மிகத் திருப்திகரமாகவோ / திருப்தியற்றதாகவோ இருக்கலாம்.
ஏதோ பரவாயில்லை என்பதாக இருக்கலாம். இவ் எண்ணக் கருக்கள் பெரும்பாலும் உங்களைச் சுற்றியுள்ள சூழலின் பிரதிபலிப்பாக இருக்கின்றது.
ஆனால் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப, நிறையைப் பொருத்தமாகப் பேணவேண்டிய போஷனைப் பொருட்கள் அடங்கிய உணவைப் போதுமான அளவில் வழங்கும் போதே அவ்வுணவு திருப்திகரமானதாகக் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒவ்வொரு வேளைக்குரிய உணவூட்டலிலும் உங்களை நீங்களே வினவுங்கள்….
- இவ்வுணவு குழந்தைக்கு தேவையான போஷணைகளைக் கொண்டிருக்கின்றதா?
- இவ்வுணவு வேளையில் குழந்தை உள்ளெடுக்கும் அளவு போதுமானதா?
உணவூட்டத் தொடங்கிச் சில மாதங்களின் பின்னர் படிப்படியாகக் கையால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்த முடியும். பிரதான உணவுகளையும், சிற்றுணவுகளையும் கொடுக்க முடியும். ஒரு வயது பூர்த்தியாகும் போது குடும்ப உணவினைப் பகிர முடியும். இவ்வுணவுகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
பிரதான உணவு – காலை 7 – 8 மணி
மதியம் 12 – 1 மணி
இரவு 6 – 7
சிற்றுணவுகள்- காலை 10 மணி, பிற்பகல் 4 மணி
இரவு 9 மணி (பொருத்தமெனின்) பிரதான உணவின்முன் குழந்தையின் பசியைக் குறைக்கின்ற சிற்றுணவுகள், பாற் பொருள்கள், என்பவற்றை 1- 2 மணித்தியாலத்துக்குத் தவிருங்கள்.
பிரதான உணவினை நீர்த்தன்மையாகக் கொடுக்கும் பழக்கத்தைத் தவிருங்கள். இயன்ற வரை திண்மத்தன்மையாக வழங்குங்கள்.
நிறை குறைந்த பிள்ளையெனில் ஒவ்வொரு பிரதான உணவிலும் எண்ணெய் வகை மற்றும் கொழுப்புவகையைச் சேருங்கள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.மாஜரீன்,சீஸ்,பட்டர், தடிப்பான தேங்காய்ப் பால் என்பன இவ்வாறு சேர்ப்பதற்க்கு உகந்தவை.
எந்த வேளையிலும் கொடுக்க கூடியதாக பொதி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற உணவுகளை இயன்ற வரை தவிருங்கள்.
உணவின் தரம்.
உணவைத் தேர்ந்து எடுக்கும் போது கிடைக்கும் தன்மை, விலை என்பன இத் தேர்வில் தாக்கம் விளைவிக்கின்றன.
சமநிலையிலுள்ள நாளாந்த ஆரோக்கிய உணவில் இடம்பெறும் சத்துப் பெறுமானங்கள் பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும்.
முழு உணவில்
காபோவைதரேற்று – 55%
கொழுப்பு – 30%
புரதம் – 15%
ஒவ்வோரு சாப்பாட்டு வேளையிலும் தினமும் பின்வரும் 6 வகையான உணவுகளும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
- தானியங்கள், சோறு, கிழங்கு வகை
- அவரைவகை, பருப்பு வகை
- காய்கறிகள்
- பழவகைகள்
- பாற் பொருள்கள்
- இறைச்சி, மீன், முட்டை,வித்துக்கள் ( கச்சான், கஜீ)
தினமும் மேற்குறிப்பிட்ட ஆறு தொகுதியிலிருந்து மாற்றி எடுப்பது எல்லா விதமான போஷாக்கையும் பெறுவதை உறுதி செய்யும். இதனால் நாளாந்தம் உடலுக்குத் தேவையான போசாக்குத் தேவை நிறைவு செய்யப்படுகின்றது.
- ஒரே விதமான அல்லது மூன்று வேளைகளுக்கும் வெவ்வேறு உணவு வகையுள்ள உணவு அட்டவணையைப் பாவித்தல்.
- பிள்ளைகளுக்கு உண்ணும் விருப்பத்தை அதிகரிக்கும்.
- உணவுத் தேவைக்குகேற்ப படிப்படியாக அறிமுகப்படுத்துங்கள்.
- உண்ணும் அளவையும் படிப்படியாகக் கூட்டுங்கள்.
- உங்களுடைய உணவுப் பழக்கத்தை நாளேட்டில் குறிப்பிடுங்கள்.
நீங்கள் பின்பற்றும் பழக்கத்தை சரியான விதத்தில் அமைத்துக் கொள்ள இது உதவும்.
எவ்விதமான உணவுகளில் நிறை அதிகரிப்பு அதிகமாக உண்டு என்பதை அறிய உதவும்.
உதாரணத்திற்கு ஒரு உணவு அட்டவணை கீழே காட்டப்படுகிறது.
காலை | மதியம் | மாலை | |
---|---|---|---|
திங்கள் | இடியப்பம்,முட்டைப் பொரியல் | சோறு, காய்கறி | திரிபோஷா |
செவ்வாய் | கடலை | சோறு,கீரை,இறைச்சி,காய்கறி | தோசை |
புதன் | – | – | – |
வைத்தியர் . குமுதினி கலையழகன்
குழந்தை நல வைத்தியர்
யாழ் போதனா வைத்தியசாலை.