ஒரு குழந்தையின் சுவாசத் தொகுதியானது மூக்கிலிருந்து ஆரம்பித்து சுவாசப்பையினுள் உள்ள காற்றறைகளில் (Alveli) முடிவடைகின்றது. காற்றறைகளிலேயே ஒட்சிசன் எனப்படும் நாம் உயிர் வாழ்வதற்கான நல்ல வாயு குருதிக்குள் எடுக்கப்பட்டு குருதியிலிருந்து காபனீரொட்சைட் எனப்படும் கழிவு வாயு வெளியகற்றப்படுகின்றது. மூக்கினுள் செல்லும் காற்றானது, தொண்டை, குரல்வளை, வாதனாளி போன்ற சுவாசக் குழாய்களினூடாக காற்றறைகளை அடையும். எமது சூழலில் காணப்படும் வேறுபட்டகிருமிகளால் சுவாசத்தொகுதி தொற்று நோய்கள் உண்டாகலாம். பொதுவாக வைரசு கிருமித் தொற்றே குழந்தைகளில் அதிகமா ஏற்படுகின்றது.
சுவாசப்பாதையை மேல் சுவாசப்பாதை (upper respiratoryract) கீழ் சுவாசப்பாதை ( lower res piratory tract) என இரண்டாக வகைப்படுத்தலாம். சுவாசத்தொற்று (Respiratory Infections) ஒரு குழந்தைக்கு ஏற்படுகையில் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது அந்தக் கிருமித் தொற்றுமேல் சுவாசப் பாதையிலா? அல்லது கீழ் சுவாசப் பாதையிலா என்பதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூக்கு, தொண்டை போன்ற மேல சுவாசப் பாதையிலேயே கிருமித்தொற்று ஏற்படுகின்றது. அவை பொதுவாக பாரதூரமானவையல்ல. குழந்தைகளுக்கு நாம் முறையாக நோய்த் தடுப்பூசி ஏற்றி வருவதனால் குக்கல், தொண்டைக்கரப்பன், குரல்வளையழற்சி போன்ற பாரதூரமாக மேல் சுவாசப்பாதை தொற்றுக்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றோம்.
சுவாசத்தொற்றுக்கள் ஏற்படும்போது சுவாசிப்பதில் சிரமமும் இழுப்பு போன்ற சத்தமும் கேட்குமாயின், உடனடி வைத்திய சிகிச்சை தேவைப்படும். பொதுவாக சுவாசப் பையினுள்ளோ அல்லது கீழ் சுவாசப்பாதையிலோ கிருமித்தொற்று ஏற்படுமாயின், குழந்தைக்கு அதிக பாதிப்புக்கள் உண்டாகும். எனவே பின்வருவனவற்றை அவதானிக்க வேண்டும்.
- கடுங்காய்ச்சல் காணப்படல் (38°C விட அதிகமாக)
- குழந்தை மிகவும் சோர்வடைந்து காணப்படல்
- பாலருந்துதலில் அல்லது உணவில் நாட்டம் காண்பிக்காமை
- மூச்சு விடுவதில் சிரமமும், சுவாசவீத அதிகரிப்பும் – சாதாரணமான குழந்தை எந்தவித பிரச்சினைகளும் இல்லாதவிடத்து ஒரு நிமிடத்துக்கு 30 – 40 தடவை மூச்சை உள்ளெடுத்து வெளியே விடும். அதேவேளை சுவாசிக்கும் போது சிரமப்படாதிருப்பதுடன் சத்தம் ஏதுவும் கேட்காது. மூச்சு விடுவதில் சிரமப்படும் போது விலா என்புகளுக்கிடையான தசைகள, நெஞ்சுக்குக் கீழான தசைகள் என்பன அதிகமாக உள்சென்று வெளிவரும். சுவாச வீதம் ஒரு குழந்தைக்கு அதிகரித்துக் காணப்படும்.
- சுவாசிக்கும் போது இழுப்பு போன்ற சத்தம் கேட்டல் – இவ்வாறான சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு உடனடிச் சிகிச்சை அவசியமாகும்.
சில சமயங்களில் பொதுவாக ஏற்படும் மேல் சுவாசப்பாதைத் தொற்றானது, முழு சுவாசத் தொகுதிக்கும் பரவலாம். எனவே குழந்தையை அவதானிப்பதுடன் மேற்கூறிய அறிகுறிகள் காணப்படுகின்றனவா எனக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளில் சுவாசத் தொற்றுக்கள் மிகப் பொதுவாகக் காணப்படினும், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.
- குழந்தைகளுக்கு இயன்றவரை தாய்பாலூட்டலை மேற்கொள்ளல். ஏனெனில் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுண்டு.
- குழந்தைகளுக்கு போசாக்கான நிறையுணவை ஆறுமாதத்தின் பின்னர் முறையாக வழங்குதல்.
- சரியான முறையில் தனிநபர் சுகாதாரத்தைப் பேணுதல், குறிப்பாக தகுந்த முறையில் சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுதல்.
- அதிக சனநெருக்கடியான பகுதிகளுக்கு குழந்தையைக் கொண்டு செல்வதை இயன்றளவுக்குத் தவிர்த்தல்.
- சுவாசத் தொற்றுள்ள ஒரு நபருக்கு அருகில் இயன்றளவுக்கு குழந்தையைக் கொண்டு செல்லாதிருத்தல்.
- வீட்டில் சுவாசத் தொற்று ஒருவருக்கு ஏற்படின் தனியான அறையை இயன்றளவு உபயோகிப்பதுடன், கைக்குட்டையை அல்லது திசுதாளை (Lissue) இரும் போதும், தும்மும் போதும் பாவிக்க வேண்டும். இருமல் உள்ளவர் மூக்கையும் வாயையும் மறைக்கக்கூடிய மாஸ்க்கை (Mask) அணியலாம்.
- வீட்டின் அறைகளை தகுந்த காற்றோட்டம் உள்ளவையாகவும் தூசுகள் அற்றவையாகவும் வைத்திருத்தல்.
- ஒருவருக்கு சுவாசத் தொற்று ஏற்படின், தகுந்த சிகிச்சையை உரிய காலத்தில் பெறுதல்.
- குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொள்ளுதல்.
எனவே குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படும் வியாதியாக சுவாசத்தொற்றுக்கள் காணப்படினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை பாரதூரமைான வையல்ல. மேலும் கடுமையான சுவாசத் தொற்றுக்கான அறிகுறிகளை முற்கூடியே அவதானிப்பதன் மூலம், தகுந்த சிகிச்சையை நேரத்துடனேயே வழங்க முடியும். அதேபோல் தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால், குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசத்தொற்று நோய்களைக் குறைக்கமுடியும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.