சிறுவர்களில் குடற் புழுக்களின் தாக்கமானது பொதுவாக காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது மக்களிடையே பூச்சித் தாக்கமென அழைக்கப்படுகின்றது. குடற் புழுக்களில் ஒன்றான கொடுக்கிப்புழுவின் தொற்றல் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
கொழுக்கிப்புழுத் தொற்றுக்குள்ளாகிய சிறுவர்களின் சிறுகுடலில் ஒரு பெண்புழுவானது ஒரு நாளைக்கு 25,000 – 30,000 வரையிலான முட்டைகளை இடுகின்றது. இம் முட்டைகள் மலம் மூலம் மண்ணை அடைகின்றன. இவ் முட்டைகள் மண்ணில் விருத்தியடைந்து குடம்பி புழுவாகி மாறி பரவும் நிலையை அடைகின்றன.
சிறுபிள்ளைகள் இம் மண்ணில் வெறும் காலுடன் நடக்கையில் அல்லது கைகாளால் மண் விளையாடும் போது கை, கால்களின் மென்மையான பகுதிகளுடாக துளையிட்டு உட்செல்கின்றன. பின்னர் இவை படிப்படியாக முன்னேறி குருதிக் குழாய்கள் அடைந்து (நாளம்) பின்னர் படிப்படியாக வலது இதயம், சுவாசப்பை, சுவாசக்குழாய் தொண்டை என்பவற்றை கடந்து சிறுகுடலை அடைகின்றன. இவை சிறுகுடலில் வளர்ச்சியடைந்து புழுக்களாக மாறுகின்றன.
சிறுவர்களின் உடலில் கொழுக்கிப்புழுவின் தாக்கங்கள்
- புழு துளையிட்டு உட்சென்ற தோல் பகுதியில் தொடர்ச்சியான கடி ஏற்படுவதுடன் தோல் சிவந்து கொப்பளங்கள் உருவாகலாம்.
- சுவாசப் பையினுள் செல்லும்போது சுவாசப்பையில் காணப்படும் குருதி மயிர்க்குழாய்களைச் சேதப்படுத்துவதனால் இரத்தக் கசிவு ஏற்படுதல்.
- நிறை புழுக்கள் சிறு குடலின் வெவ்வேறு பாகங்களில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சி உணவாக பயன்படுத்துவதாலும், துளையிட்ட இடங்களில் தொடர்ச்சியான இரத்தக் கசிவு ஏற்படுவதனாலும் குருதிச் சோகை ஏற்படுகின்றது.
சிறுவர்களில் தெரியும் அறிகுறிகள்
- தோல் வீக்கம்
- பாதங்கள், கைகளில் அரிப்பு அல்லது கடி
- காய்ச்சல்
- மேல் வயிற்றுவலி
- சமிபாடின்மை
- வாந்தி
- சோர்வு
- களைப்பு
- உடல் வெளிறல்
- படிப்பில் மந்த நிலை
கொழுக்கிப் புழுத்தாக்கத்திலிருந்து தடுத்துக் கொள்ளல்
- பாதுகாப்பான மலசல கூடங்களைப் பாவித்தல்
- குழந்தைகளின் மலக் கழிவுகளை வெற்று மண்ணில் புதைப்பதைத் தவிர்த்து அவற்றை மலசலகூடக் குழியினுள் இட்டு அகற்றல்
- மலங்கழித்த பின்னர் கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவுதல்.
- மலங்கழிக்கச் செல்லும் போதும் வீட்டுக்கு வெளியே செல்லும் விளையாடச் செல்லும் போதும் பாதணிகளை அணிதல்.
- மண்ணில் விளையாடிய பின்னரும் உணவு உண்ண முன்னரும் கைகளை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவுதல்.
- கை, கால் நகங்களை ஒழுங்குமுறையாக வெட்டி பராமரித்தல்.
- தாய்மார் உணவு தயாரிக்கும் முன் தங்கள் கைகளைச் சவர்க்காரமிட்டு கழுவுவதுடன், பச்சை இலைவகை, காய்கறிகளை உப்பு நீரில் நன்கு கழுவ வேண்டும்.
சிகிச்சை முறை
வைத்திய அறிவுறுத்தல்களின்படி பூச்சி மாத்திரையை காலம் தவறாது பாவித்தல் வேண்டும். இரண்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு வகை மருந்தும், இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேறு மருந்தும் வழங்கப்படுகின்றது. இரண்டு வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பெரியவர்களின் மருந்தைக் கொடுத்தல் கூடாது.
மருத்துவர் ஹஜந்தினி குமாரகுலசிங்கம்
நீரிழிவு சிசிக்சை நிலையம்
யாழ். போதனா வைத்தியசாலை