நீங்கள் எப்போதாவர் தலைச்சுற்றினால் அவதிப்பட்டீர்களா?, நாங்கள் இப்பொழுது பார்க்கலாம். நாம் எவ்வாறு உடல் சமநிலையைப் பேணுகின்றோம் என்று. எமது கண்கள் காதுகள்( உட்காது) தசைகள், மூட்டுகள், பிரதானமாக உடல் சமநிலையைப் பேண உதவுகின்றன.
எமக்கு நல்ல கண்பார்வை இருக்குமானால் நாங்கள் சமநிலையாக நிற்பதை உணரமுடியும். எமது உடல் சமநிலைக்கு எழுபது சதவீத பங்கை கண்கள் வகிக்கின்றன.
எமது தசைகளும் மூட்டுகளும் எமது மூளைக்கு நாம் நிற்கும் உடல் நிலையைபற்றி செய்தி அனுப்புவதால் அவற்றின் தொழிற்பாட்டின் மூலம் எமது உடல் சமநிலையைப் பேணக்கூடியதாக உள்ளது.
பதினைந்து சதவீதமான உடல்சமநிலையை தசைகளும் மூட்டுகளும் பேணுகின்றன.எமது உட்காதில் உள்ள அரைவட்டக் கால்வாய் எமது உடல் சமநிலையைப் பேண பிரதான அங்கமாக உள்ளது. அரைவட்டக் கால்வாய் திரவம் ஒன்றால் நிறைந்துள்ளது.
ஒரே இடத்தில் நின்று நாங்கள் சுற்றும்போது எங்களுக்கு தலை சுற்றுவதை உணருகின்றோம். ஆனால் நாங்கள் சுற்றுவதை நிறுத்தியதன் பின்னரும் நாங்கள் தலைச்சுற்றுவதை உணருகின்றோம். இதற்குக் காரணம் உட்காதில் உள்ள திரவம் தொடர்ந்து அசைந்து கொண்டிருப்பதேயாகும். எமது மூளை, எமது கண்களிலிருந்து, காதுகளிலிருந்து, தசைகள், மூட்டுக்களிலிருந்து வரும் அறிவித்தல்களை ஆராய்ந்து உடலின் சமநிலையை மாற்றுகின்றது.
எமது கண்கள், காதுகள், தசைகள், மூட்டுகள் இவற்றுடன் எமது மூளை எந்தளவுக்கு தொடர்பு பட்டிருக்கின்றது என்பதை இப்போது விளங்கிக்கொள்ள முடியும். எனவே எங்களுக்கு தலைச்சுற்று உள்ள நோயாளி ஒருவரின் நோய் பற்றிய விரிவாக்கம் அவசியமானது. தலைச்சுற்றுக்கா மூலக்காரணம் என்ன என்பதை அறிவதற்கு பெரும்பாலான மாற்றக்கூடிய நோய்கள் சம்பந்தமாக இருப்பதால், எப்போதாவது உங்களுக்கு தலைச்சுற்று வரும்போது (ENT Surgeon) காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணரை முதலில் அணுகவும்.
உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்கு தலைசுற்று ஒரு சில வினாடிளே இருக்கும். அத்துடன் தலைச்சுற்று, நீங்கள் படுக்கையில் படுக்கும்போது, படுக்கையிலிருந்து எழும்பும் போதும் இருக்குமானால் காது, மூக்கு, வைத்திய நிபுணரால் ஒரு சிறிய பயிற்சி மூலம் ( உட்காதுக்கு ) குணப்படுத்த முடியும்.
இதைவிட்டு தலைச்சுற்று அத்துடன் காதில் சத்தம், காதுகேளாமை என்பவற்றுக்கு உட்காதில் அழுத்தம் (Pressure) கூடுவதும்மோர் காரணம். இத்தகைய நோயை மாத்திரைகள் மூலமோ உட்காதில் மருந்து ஊசி ஏற்றுவதன் மூலமோ குணப்படுத்த முடியும்.
தலையிடி, வெளிச்சத்துக்கு நாட்டமின்மை, சத்தத்துக்கு நாட்டமின்மை, வாந்தி போதல், இவை ஒற்றைத் தலைவலி (Migraine) இதனை மருந்து மாத்திரைகள் மூலம் எமது வாழ்க்கை முறை மாற்றம் ( நேரத்துக்கு உண்பது, தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்தல்) மூலம் குணப்படுத்த முடியும்.
இப்போது உங்களுக்கு ஒவ்வொரு நாளும் எல்லா வேளைகளிவும் தலைச்சுற்று வரலாம். இது உங்களுக்கு மனநோய் சம்பந்தமாக இருக்கலாம். இதனை முறையான ஆலோசனைகள் மூலமும் மாத்திரைகள் மூலமும் குணப்படுத்தலாம்.
மிகக் கடுமையான தலைச்சுற்று சாதாரணமாக தடிமன், காய்ச்சலின் பிற்பாடு வருமாயின் கிருமி உட்காதில் பரவுவதே அதற்கான காரணம் ஆகும். இதனை மருந்து மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் குணப்படுத்த முடியும். நீரிழிவு, கூடிய கொலஸ்ரோல், இரத்தச்சோகை, தைரோய்ட் பிரச்சினைகள் மூலமும் தலைச்சுற்று ஏற்படலாம். எனவே அதற்கு இரத்தப் பரிசோதனைகள் செய்வது அவசியம்.
பிரதானமாக உட்காது நோயினால் தலைச்சுற்று ஏற்படுவதால் காது கேட்கும் தன்மை குறித்துச் சோதனை அவசியம், உங்களுக்கு தலைச்சுற்று ஏற்பட்டு தொடர்ந்து படுக்கையில் இருப்பீர்களானால் உங்கள் தலைச்சுற்று விரைவாக குணமடையாது எனவே உங்கள் நாளாந்த நடவடிக்கையை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்.
உங்களை காது, மூக்கு தொண்டை வைத்திய நிபுணர் பரிசோதனை செய்த பின்னர் உங்கள் தலைச்சுற்றுக்கு உங்கள் மூளைதான் காரணம் என முடிவு செய்வாரானால் நீங்கள் ஒரு நரம்பியல் வைத்திய நிபுணரிடம் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்படுவீர்கள். உங்கள் மூளையை ஸ்கான் செய்வதன் மூலம் நோயை கண்டறிய முடியும்.