எமது உடலிலுள்ள நிர்ப்பீடனத் தொகுதியானது, உடலினுள் உட்புகும் பிறபொருள்களுக்கெதிராக (Antigens) பிறபொருள் எதிரிகளை (Antibodies) உற்பத்தி செய்கின்றது. இதன் மூலம் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய பிறபொருள்களின் தாக்கத்திலிருந்து உடல் பாதுகாக்கப்படுகின்றது.
ஆனால் ஒவ்வாமை உள்ளவர்களில் Lge எனப்படும் பிறபொருள் எதிரியானது மிக அதிகளவில் சுரக்கப்படுகின்றது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத பிறபொருள்களுக்கு எதிராகவும் இது அதிகளவில் சுரக்கப்படுகின்றது. இதன் மூலம் உடலில் வேண்டதக்காத சில மாற்றங்கள் உருவாகின்றன. இதுவே ஒவ்வாமை எனப்படுகின்றது.
உடலில் கடி ஏற்படுதல், சிவப்புநிற அடையாளங்கள் உருவாதல், கண் சிவத்தல், முழங்கை, முழங்காலின் பின்பகுதி போன்றவற்றில் கடியுடன் கூடிய சிவப்பு அடையாளங்கள் உருவாதல், மூக்கிலிருந்து நீர் வடிதல், மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற இதன் அறிகுறிகளாக இருக்கும். ஆஸ்துமா, எக்ஸ்சிமா போன்றனவும் ஒவ்வாமையால் ஏற்படும் நோய் நிலைகளே.
மிகத் தீவிரமான நிலைகளின் குருதியமுக்கம் குறைவடைவதுடன், மூச்சுக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் உயிராபத்தும் ஏற்படலாம். இது ஒவ்வாமையைால் ஏற்படும் அதிர்ச்சி (Anaphylactic Shock) என அழைக்கப்படுகின்றது.
ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்களாவன
உணவுகள், மருந்துகள், பூக்களின் மகரந்தம், பூச்சிகளின் உடற் பாகங்கள், சில உண்ணிகள், தூசு, புகை போன்றனவாகும் ஒவ்வாமையானது பரம்பரையாகவும் கடத்தப்படலாம்.
உடலின் கண், மூக்கு, தோல், சுவாசப்பை போன்றவற்றிலே ஒவ்வாமை விளைவுகள் அதிகளவில் ஏற்படுகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் அதிர்ச்சியானது பெரும்பாலும் உட்செலுத்தப்படும் சில மருந்துகளாலும், உணவுகள் மூலமும் ஏற்படுகின்றது. வயிற்றுநோ, மூச்செடுப்பதில் சிரமம், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த நிநலையில் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும்.
இந்த நிலை ஏற்படாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகளாவன
- நீங்கள் ஏதாவது நோய்க்காக வைத்தியரை நாடும்போது உங்களுக்கு ஒவ்வாமை இருப்பது பற்றியும் என்னென்ன பொருள்களுக்கு ஒவ்வாமை உண்டாகின்றது என்பது பற்றியும் தெரியப்படுத்துங்கள்
- வைத்தியர் உங்களுக்கு சிபாரிசு செய்யும் மருந்துகளில் உங்களிற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் உள்ளனவா என கேட்டறிந்துகொள்ளுங்கள்.
- புதிதாக வழங்கப்பட்ட மருந்துகள் உட்கொண்டபின் ஒவ்வாழமக்குரிய அறிகுறிகள் ஏற்பட்டால் அதுபற்றி வைத்தியருக்கு தெரியப்படுத்துங்கள்.
- தூசு, பூச்சிகள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை இருப்பின் அவற்றுடன் தொடுகையுறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
- உணவுப் பொருள்கள் வாங்கும்போது அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருள்களின் பட்டியலை வாசியுங்கள்.
அடிக்கடி ஒவ்வாமைத்தாக்கம் ஏற்டுவராயின் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று நீங்கள் அதற்கான மருந்துகளை வீட்டிலேயே தயாராக வைத்திருக்கலாம். தன்னியக்க செயற்பாட்டைக் கொண்ட மருந்து செலுத்திகள் தற்பொழுது பாவனையிலுள்ளன. Epi – pen எனப்படும் இவ் உபகரணம் மூலம் இலகுவில் உடலில் Epinephrine எனப்படும் மருந்தை செலுத்த முடியும். மருந்தின் அளவானது ஏற்கனவே தீர்மானிக்கப்டிட்டிருக்கும்.
இதனைப் பாவிக்க முன்பு உங்கள் வைத்தியரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு பயிற்சிசெய்து பார்க்கவும். நீங்கள் எங்கு செல்லும் போது அதனைக்கொண்டு செல்லவும். உங்களுடைய நண்பர்கள், உடன்வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு உங்களுடைய ஒவ்வாமை பற்றி தெரியப்படுத்துங்கள். இதற்குரிய உடனடி சிகிச்சை பற்றியும் அவர்களுக்கு அறியப்படுத்துதல் சிறந்தது.