அன்பு உடல், உள, சமூக ஆரோக்கியத்தின் அடிநாதமாய், திறவு கோலாய் எங்கும் வியாபித்து நிற்கின்றது. மனம் அன்புமயமாகி நிற்கும்பொழுது ஏற்படும் அளவு கடந்த ஆறுதலும் அமைதியும் மனிதனுக்கு பேராற்றலையும், துல்லியமாகச் செயற்படும் திறனையும், நோய்களை எதிர்க்கும் வல்லதையும் வழங்கி நிற்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. இறைவன் அன்பு மயமானவன் என்று சொல்லுவார்கள். அதனாலேயே அவன் சர்வ வல்லமையும் பொருந்தியவனாக விளங்குகின்றான்.
மனச்சஞ்சலங்களே பல நோய்களுக்கு வித்திடுகின்றன. இந்த மனச் சஞ்சலங்களை அகற்றும் அருமருந்தாய் அன்பு மினிர்கிறது.
எம்மீதும் எமது குடும்பத்தின் மீதும் அன்பு கொள்வோம். எமது சுற்றம், உறவுகள், நண்பர்கள் அனைவரும் மீதும் அன்பு கொள்வோம், ஊர், தேசம், மொழி, கலை, கலாசாரம் அனைத்தின் மீதும் அன்பு கொள்வோம். உலவிவரும் உயிர்களிலும் இயற்கையிலும் அன்பு கொள்வோம். இந்த அன்பினால் ஏற்படும் மன அமைதி உடலின் நோய் எதிர்ப்பு படைபலத்தைப் பெருக்கும் பேராயுதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எம்மை வெறுப்பவர்களிடமும் அன்பு வைக்கும் மனவலிமையை வளர்த்துக் கொள்வது இலகுவான காரியமல்ல. அதே சமயம் அது முடியாத விடயமுமல்ல. எம்மைப் பிறர் வெறுப்பதற்குக் காரணம் என்ன? நாம் பிறரை வெறுப்பதற்குக் காரணம் என்ன? எமது எதிரியாக நாம் கருதிக் கொள்பவர்களிடம் புதைந்து கிடக்கும் அன்பு ஊற்றை அடையாளப்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம்? வெறுப்புத்தான் அன்பினதும் ஆரோக்கியத்தினதும் எதிரி என்று தெரிந்து அதனை ஏன் வளர்த்துக் கெள்ள முயலுகிறோம்? தெரிந்தும் ஏன் பிழையான திசையில் செல்ல முனைகிறோம்.
மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் அன்புமயமானவர்கள் தான். அன்பு இல்லாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. எம்மைப்பலர் வெறுப்பதற்கும், நாம் பலரை வெறுப்பதற்கும் அடிப்படையாய், காரணமாய் இருப்பது என்ன என்பதை நாமே அறிந்துகொள்வது இலகுவான காரியமல்ல. ஆனால் இந்த வெறுப்புணர்வுதான் அன்பினதும் ஆரோக்கியத்தினதும் முதல் எதிரி என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.
எதிரியிலும் அன்பு கொண்டு மன்னித்து எமது பாதையைத்தற்காத்து தடம் மாறாது பயணிக்கும் மனத்திடத்தை வளர்த்துக் கொள்வது உடல், உள, சமூக நன்னிலையான, உண்மையான ஆரோக்கியத்துக்கு வழி சமைக்கும்.
கோபமும், வெறுப்பும், பகை உணர்வும் ஒருவனின் ஆற்றலையும், ஆளுமையையும், வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பாதித்து நிற்கும் ஒரு பொது எதிரியாக வர்ணிக்கப்படுகின்றது. இந்தப் பொது எதிரியானவன் எமது பொன்னான நேரத்தின் பெரும் பகுதியையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றான். இந்த எதிரியை அன்பு என்ற அஸ்திரம் கொண்டு தாக்கி அழிப்பது ஒரு இலகுவான போர் அல்ல. பல தடவைகள் நாம் அந்த போரில் தோற்றுவிடுகிறோம். ஆனாலும் இந்தத் தோல்விகள் நிரந்தரமானவையல்ல என்பதை மனதில் நிறுத்தி அன்பு என்ற அம்பைக் கொண்டு அந்தப் பொது எதிரி மீது இலக்குவைப்போம்.
அன்பு என்னும்பேராயுதத்தை சரியான முறையில் கையாளக் கற்றுக்கொண்டால் நாம் பல தொற்று நோய்களையும் வாழ்வின் தடைகளையும் வெற்றி கொண்டு சுகமான விடியலை நோக்கிப் பயணிக்க முடியும்.
சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை