சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது யாராவது அதை உணருகிறோமா? இல்லை. ஆனால் பல்வேறு நோய் நிலைமைகளில், தேவையான அளவு பிராணவாயுவை ( ஒட்சிசனை) எமது சுவாசப்பையானது. மூளை உட்பட உடலுறுப்புகளுக்கு வழங்க முடியாவிடின் சுவாச விகிதம் அதிகரிப்பதுடன் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.
- சுவாசத் தொகுதியுடன் தொடர்பான காரணங்கள்
- நாசி தொடக்கம் சுவாசப்பையிலுள்ள குழாய்கள் வரை காற்று போய் வருவதில் தடைகள் ஏற்படின் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உதாரணமாக அதிகளவு சீதம் ( Mucons) சுவாசக் குழாய்களில் படிந்திருத்தல், சுவாசக் குழாய்களின் உட்பக்கம் வீங்கியிருத்தல் அல்லது சுவாகச் குழாய்கள் சுருங்குதல் இந்த நிலைமைகள் மிகப் பொதுவான அஸ்துமா ( Astgma) வருத்தம் உள்ளவர்களில் காணப்படும். அதே போல் குழந்தைகளின் சுவாசக் குழாய்களில் கிருமித் தொற்றுக்கள் ஏற்படும் போதும் ஏற்படலாம். இதை விட, பிற பொருள்கள் ( Doreith body) சுவாசப்பாதை அடைப்பினும் மூச்சு விடுவதில் கஷ்டம் ஏற்படலாம். குறிப்பாக 1 – 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களிலுள்ள சிறு பகுதிகளை விழுங்கினாலும் அல்லது கடலை, பருப்பு போன்ற உணவுத் துணிக்கைகள் புரக்கேறினாலும் திடீரென மூச்சு விடுவதில் கஷ்டமும் இருமலும் ஏற்படலாம்.
- பிறப்பின் போதே ஏற்படும் சில குறைபாடுகளால் சுவாசப் பாதையினூடாக காற்று உட்சென்று வருவதில் தடைகள் ஏற்பட்டால் பிறப்பிலிருந்தே மூச்சு விடுவதில் சிரமம் காணப்படுவதுடன் அசாதாரண சத்தமும் சுவாசிக்கும் போது கேட்கலாம்.
- சுவாசப்பையினுள்ளே உள்ள காற்றறைகளில் கிருமித்தொற்று (Pneumonaia) கடுமையாக ஏற்பட்டாலும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
- நாம் சுவாசிப்பதற்கு தேவையான நெஞ்சறை தசைகள் என்பவற்றில் குறைபாடு ஏற்படினும் மூச்சுவிட கஷ்டம் ஏற்படலாம்.
- குருதிச் சுற்றோட்டத் தொகுதியுடன் சார்பான காரணங்கள்
சுவாசிப்பதில் கஷ்டம், தனியே சுவாசத் தொகுதியில் ஏற்படும் பிரச்சினைகளால் மட்டுமன்றி இரதயத்திலும் அதனனோடு தொடர்பான இரத்தக் குழாய்களிலும் பிறப்பின் போதே ஏற்படும் குறைாபடுகளாலும் ஏற்படலாம். ஏனெனில் இரு தொகுதிகளும் ஒட்சிசனை உடலுறுப்புகளுக்கு வழங்குவதற்கும். காபனீரோட்சைட்டை அகற்றுவதற்கும் இன்றியமையாத வையாகும். அதே போல் சிறுவர்களில் ஏற்படும் மூட்டுவதக் காய்ச்சலால் இருதய வால்வுகள் பாதிப்படைந்தாலும், சிறுநீர்த் தொகுதி நோய்களால் இரத்த அழுத்தம் அதிகரிப்பினும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். - மேற்குறிப்பிட்ட இரு தொகுதிகளிலும் ஏற்படும் பாதிப்புளால் மட்டுமின்றி சலரோக கடுமையான வயிற்றோட்டத்தால் நீரிழிப்பு ஏற்பட்டாலும் சலரோக வருத்தம் கடுமையாயினும் அல்லது சிறு நீரகத் தொழிற்பாடு கடுமையாகப் பாதிப்படையினும் சுவாச விகிதம் அதிகரித்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
இனி சுவாசிப்பதில் சிரமம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம். என்பதை பார்ப்போம்
- ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் வீதம் அதிகரித்தல் குழந்தைகளில் அவர்களின் வயதிற்கேற்ப சுவாச விகிதம் மாறுபடும்.
வயது | சுவாச விகிதம் ( நிமிடத்திற்கு) |
பிறந்த குழந்தைகளில் | 40 – 60 |
1மாதம் தொடக்கம் 1 வருடம் வரை | 30 – 40 |
1 வருடம் தொடக்கம் 2 வருடங்கள் | 25 – 35 |
2 வருடங்கள் தொடக்கம் 5 வருடங்கள் | 25 – 30 |
5 வருடங்கள் தொடக்கம் 12 வருடங்கள் | 20 – 25 |
மேற்குறிப்பிட்ட சுவாச விகிதத்தைவிட அதிகரித்து காணப்படின் உடனடி வைத்திய சிகிச்சை தேவையாகும்
- விலா என்புகளுக்கிடையேயான தசைகள், வயிற்றுத்தசைகள் மற்றும் கழுத்து தசைகள் சுவாசிக்கும் போது அதிகமாக உட்சென்று வெளிவரின் குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது எனலாம்
- சுவாசிப்பதில் சிரமம் உள்ள குழந்தை சுவாசிக்கும் போது இழுப்பு (wheezing) போன்ற சத்தங்கள் காணப்படலாம்.
- பாலருந்துவதில் அல்லது உணவு உட்கொள்வதில் சிரமப்ப்டல்
- சுவாசக் கஷ்டம் மிகமிக அதிகமாயின் குழந்தை அழமுடியாமலோ கதைக்க முடியாமலோ அவதிப்படுவதுடன் அதன் நிறம் வெளிறியோ ( Pallor) அ ல்லது நீலம் பாரித்தோ ( Cyanosis) காணப்படலாம். இந்த நிலைமை மிக அபாயகரமான கட்டத்தை குழந்தை அடைந்து விட்டது என்பதைக் காட்டும்.
எனவே பல்வேறு காரணங்களால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலும் அதன் ஆரம்ப அறிகுறிகளை முன்னதாகவே கண்டறிந்து உரிய காலத்தில், தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
மருத்துவர் ந.ஸ்ரீசரபவணபவானந்தன்
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ்.போதனா வைத்தியசாலை.