இவ்வுலகில் பார்வை அற்றவர்களும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் உலக சுகாதார மேம்பாடு காரணமாக முதியோர் தொகை அதிகரிப்பதே. இந்த நிலை வளர்முக , வளர்ந்த நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் 80 வீத பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாட்டு நோய்கள் தடுக்கப்படக் கூடியவை என்பதாகும். முக்கிய நோய்கள் ஆவன வெண்புரை, தூர கிட்ட பார்வைக் குறைபாடு, குளுக்கோமா, நீரிழிவு சம்பந்தமான நோய்கள் கருவிழி தொற்று நோய் விழித்திரை தேய்வு மற்றும் குழந்தை பருவத்தில் பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோ்ய்கள் ஆகும்.
இந்த சமூக சுகாதார பிரச்சினையை கருத்திற் கொண்டு உலக சுகாதார ஸ்தாபகம் 1978 ஆம் ஆண்டு பார்வைக்குறைபாட்டை, பார்வை இழப்பை தடுக்கக் கூடிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து அதன் உறுப்பு நாடுகளுக்கூடாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 1999 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனமும் உலக பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் கூட்டாக இணைந்து பார்வை 2020 என்ற சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது.
பார்வை 2020 என்பது அனைவருக்கும் பார்ப்பதற்கான உரிமை என்பதாகும். இந்தப் பார்வை 2020 நிகழ்ச்சித் திட்டத்தில் அனைத்து நாடுகளும் சர்வதேச தேசிய உதவி ஸ்தாபனங்களும் அங்கம் வகிக்கின்றன. இதன் குறிக்கோள் 2020 ஆம் ஆண்டுக்குள் பார்வை இழப்பை அல்லது குறைபாட்டை குறைத்தல் அல்லது இல்லாமற் செய்தல் மற்றும் அனைவருக்கும் 20/20 அல்லது 100வீதம் பார்வையைத் தருவது ஆகும்.
இலங்கையை பொறுத்தவரையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. இந்தத் திட்டம் கல்வி அமைச்சின் மற்றும் சமூக சேவைகள் அமைச்சு சர்வதேச தேசிய உதவி ஸ்தாபனங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது. இந்தச் செயற்பாடு முழுமூச்சுடன் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படுத்தப்படுகின்றது. வடமாககாணத்தைப் பொறுத்தவரையில் 2009 ஆம் ஆண்டில் இது செயற்பட ஆரம்பித்தது. ஆனால் இன்று மிகவும் சிறந்த மாகாணமாக இந்த பார்வை 20/20 திட்டம் வடமாகாணத்தில் வெற்றி நடை பொடுகின்றது எனலாம்.
மந்தப் பார்வை உடையவர்கள் சமூகத்தில் இனங்காணப்பட்டு கண் வைத்தியரின் உதவியுடன் மந்தப் பார்வை கிளிகிக்குக்கு அனுப்ப்பட்டு பரிசோதித்து அவர்களுடைய வயது, தொழில் பார்வை என்பவற்றை கருத்திற் கொண்டு கீழ்க்காணும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
- மந்த பார்வை உடையவர்கள் என உறுதிப்படுத்தல்
- ஆலோசனை வழங்குதல்
- சூழலியல் திருத்தங்கள்
- மந்தபார்வை, உருப்பெருக்கி சாதனங்கள்
- மற்றும் உதவக் கூடிய சாதனங்கள்
- சாதாரண சமூக கட்டமைப்புக்குள் இணைத்தல் ( கல்வி கற்றல், வேலை வாய்ப்பு)
அதேபோல் பார்வை அற்றவர்களும் சமூகத்தில் இனம் காணப்பட்டு கண்வைத்தியரினால் உறுதிப்படுத்தப்பட்டு கீழ் குறிப்பிட்டுள்ள புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
- பார்வை அற்றவர் என உறுதிப்படுத்தல்
- ஆலோசனை வழங்குதல்
- வெள்ளைப் பிரம்பு பாவித்தலும் நடமாடும் பயிற்சியும்.
- Braille மற்றும் தொடர்பாடல் பயிற்சி
- சுயதொழிலுக்கான கல்வியும் தொழிற்பயிற்சியும்.
- சாதாரண சமூக செயற்பாட்டுடன் இணைத்தல் மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் செயற்பாடுகள் மூலம் பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் சம உரிமையுடன் வாழ வழி சமைக்கும். ஆனால் இந்தச் செயற்பாட்டை முழுமையாக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் திறனாளிக்கு தடைகள் அற்ற சமூகக் கட்டமைப்பு காணப்படுதல் என்பன அவசியம். பார்வைக்குறைபாடு மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தமாக கீழ் வருவனவற்றை தடை அற்ற வழிகளாக செயற்படுத்த வேண்டும்.
- நிறம்/ நிறங்கள் மூலம் அடையாளம் காணுதல்
- தொடுகை வித்தியாசம் மூலம்
- ஒலி எழுப்பும் சாதனங்கள் மூலம்
- தடைகள் அற்ற உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தல்
பார்வைக்குறைபாடு சம்பந்தமாக உள்ள மாற்றுத் திறனாளிகளினையும் அனைத்து நாடுகளில் ஒருங்கிணைத்து “உலக பார்வையற்றோர் முன்னணி” செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் பார்வைப் புனர்வாழ்வுத் திட்டம் முதன் முதலாக வடமாகாணத்தில் முன் எடுக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. 5 மாவட்டங்கள் உள்ளடக்கிய வடமாகாணத்தில் கிட்டத்தட்ட 11 இலட்டசம் மக்கள் வாழ்நது வருகின்றார்கள். இவர்களில் குறைந்தது 1500 பேர் முற்றாக பார்வை இல்லாமலும் 4500 பேர் மந்த பார்வையுடனும் வாழ்கின்றார்கள் ( நிரந்தரமாக) இவர்கள் அடங்கலாக கிட்டத்தட்ட 30000 பேர் பார்வைக்குறைபாட்டுடன் வாழ்கின்றார்கள். இவர்களில் 80 வீதமானோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து சமூகத்தல் சாதாரண பார்வையுடன் நடமாடச் செய்ய முடியும். இம் மாகாணத்தில் 5 மாவட்ட சகாதாரத்துறையிலும் மற்றும் கண்ணியல் பிரிவு நிலையங்கள் ( மாவட்ட பொது வைத்திய சாலைகள் / போதனா வைத்தியசாலை) ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வடமாகாணத்தில் இரு மந்தப் பார்வை கிளினிக்குகள் ( வவுனியா , யாழ்ப்பாணம் ) இயங்குகின்றன. இங்கு மந்தப் பார்வை மற்றும் பார்வையற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தப் புனர்வாழ்வு பணியில் யாழ் மாவட்டத்தில் வாழ்வகம், விழிப்புல வலுவிழந்தோர் இல்லம், யாழ் விழிப்புலனற்றொர் சங்கம், இலங்கை பார்வையற்றோர் சம்மேளனம், நவில்ட பாடசாலை, வவுனியா மாவட்டத்தில் ORHAN நிறுவனம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இனிய வாழ்வில்லம், மற்றும் மன்னார் மாவட்டத்தில் MARDAP ஈடுபாடு கொண்டு செயற்படுகின்றன.
இவர்களுடைய செயற்பாடு காரணமாக பார்வைப் புனர்வாழ்வுப் பணி சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் சமூக சேவைத் திணைக்களம் , கல்வித் திணைக்களம், சமூர்த்தி நிறுவனம் ஆகிய இவர்களுக்கான சமூக தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இவ்வாறு வடமாகாணத்தில் பார்வைப்புனர் வாழ்வுச் செயற்பாடுகள் திறம்பட செயற்பட்டாலும் அவை மேலும் மேம்பட சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
- மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் பார்வைக் குறைபாடு பார்வைப்புனர்வாழ்வு செயலணி அமைத்து நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
- மக்களிடையே அறியாமையை நீக்கி வழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள்
- அனைத்துக் கல்வி வலயத்திலும் விசேட கல்வி வழங்குவோரைச் சீராக ஒழுங்கு படுத்துதல்.
- இலகுவாக விரைவாக அணுகுவதற்கான சட்ட ஆலோசனைகள் வழங்குதல்.
- Braille Unit அமைத்தல்.
- அவர்களுக்கான கல்வி கலாசார விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்.
- கணினி மயப்படுத்தல் Braille ஐ பாவிப்பதற்கு வழிசமைத்தல்.
- மாற்று திறனாளிகள் தொடர்புடைய அறிவை பயிற்சிப் பட்டறை மூலம் வழங்குதல்.
- தடைகள் அற்ற சமூக கட்டமைப்பை உருவாக்குதல்.
- மாற்றுத் திறனாளிகள் தொழில் வங்கி / மையம் அமைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
Dr.M.மலரவன்
கண்சத்திர சிகிச்சை நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை.