சக்தியின் வடிவங்களில் ஒன்றான ஒலியானது மனிதனதும் சக உயிர்களினதும் பிரதான தொடர்பாடல் ஊடகமாக இருக்கின்றது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இவ் ஒலி கூட மிதமிஞ்சியதாக இருக்கும்போது மனிதனதும் ஏனைய உயிரினங்களினதும் செயற்பாடுகளையும் சமநிலையையும் பாதிக்கும் அளவிற்கு மாசாக்கத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கின்றது.
ஒலிமாசாக்கம் என்பது மற்றைய சூழல் மாசாக்கங்கள் போன்று அல்லது சூழலில் எந்த ஒரு விளைவையும் விட்டு வைப்பதில்லை. ஆனாலும் அது மனிதனது உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதிப்படையச் செய்கின்றது.
மிகவும் உரத்த ஒலிமற்றும் உரப்புக் குறைந்த ஆனால் நீண்ட நேரமாக ஒலிக்கப்படும் ஒலியானது மனிதனின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவ் ஒலி மாசடைதலின் பிரதான காரணிகளாக –
- வீடுகளில் அதிக தொனியிற் கேட்கப்படும் வானொலிகள்
- கட்டக் கட்டுமானப் பணிகளின் போது ஏழுப்பப்படும் இயந்திர ஒலிகள்
- வாகனங்கள்
- தொழிற்சாலை இயந்திரங்கள்
- ஒலிபெருக்கிகள்
என்பன விளங்குகின்றன. இதனால் மக்கள் வீட்டில், தெருக்களில், வேலைத்தளங்களில் துருதிஷ்ட வசமாக கோவில்களில் கூட ஒலிமாசக்கத்தினாற் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று அனேகமான வீடுகளில் வானொலியானது அதிக தொனியிலேயே ( high volume) கேட்கப்படுகின்றது. இதனால் அவ்விட்டில் வசிப்பவர்கள் மாத்திரமின்றி அயல்வீடுகளில் வசிப்பவர்களும் கூட பல சிரமங்களிற்கு உள்ளாகின்றனர். இதனால் ஒருவருக்குகொருவர் உரையாடிக் கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், கல்வி கற்கும் மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடல், உள ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். இது மாணவர்களது கல்வியைப் பெருமளவிற் பாதிக்கின்றது.
இவ்வாறு வீதியிற் செல்லும் வாகனங்களின் இரைச்சல் மற்றும் அவற்றால் ஏற்படுத்தப்படும் ஹோர்ண் சத்தத்தினால் வீதி அருகில் வசிக்கும் மக்களும், ஒலி பெருக்கிகளினால் அதன் சுற்றுவிட்டாரத்திலுள்ள மக்களும் பெருமளவில் ஒலிமாசாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மிதமிஞ்சிய உரத்த ஒலிகளைக் கேட்பதனாலும், உரப்புக் குறைந்த ஒலிகளைத் தொடர்ச்சியாகக் கேட்பதனாலும் மனிதனது கேள்தகைமை பாதிக்கப்படுவதுடன் ஒரு கட்டத்திற்கு மேல் அது மீளமுடியாத செவிட்டுத்தன்மையையும் ஏற்படுத்தி விடுகின்றது. அது மட்டுமன்றி உரத்த சத்தங்களை உணர்ந்து கொள்வதில் சிரமம், தொடர்ச்சியாக காதினுள் இரையும் தன்மை என்பனவும் ஏற்படுகின்றன.
புகையிரதப் பாதை மற்றும் பிரதான வீதிகளிற்கு அருகில் வசிக்கும் மக்கள் இரவில் ஏற்படுத்தப்படும் இரைசை்சலினால் நித்திரைக் குழப்பங்களிற்கு ஆளாகி சீரான நித்திரை இன்மையால் உடல் நலக்குறைவு மற்றும் மன அழுத்தம் என்பனவற்றுக்கு ஆளாவதாக ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. இதனால் உயர் குருதி அமுக்கம், இருதயசம்பந்தமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.
தொழிற்சாலைகள் மற்றும் கட்டக் கட்டுமானம் என்பவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகநேரம் இயந்திரங்களின் இரைச்சல் மற்றும் பாரிய சத்தங்களைக் கேட்கவேண்டி உள்ளதனால் அவர்களின் கேள்தகைமை பாதிக்கப்பட்டு, வேலை செய்யும் ஆற்றலும் பாதிப்படைவதனால், அவர்கள் தங்கள் தொழிலை இழந்து பொருளாதார நெருக்கடிகளிற்குள்ளாவதுடன் மன அழுத்தம் போன்ற உளவியற் பாதிப்புக்களிற்கும் ஆளாக நேரிடுகின்றது.
ஒலிமாசாக்கத்தினால் குழந்தைகளும், சிறுவர்களும் மிகமோசமான பாதிப்புக்களை எதிர்நோக்ககின்றனர். சிறுவர்களிற்குக் கேள்திறன் பாதிப்படைவதனால் அ வர்களின் கற்றற் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலை ஏற்படுகின்றது.
குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது கேள்திறன் பாதிப்படைவதுடன், பேச்சு ஆற்றல் இழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.
ஒலிமாசாக்கத்தினால் மனநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறும் உண்மை அத்துடன் ஏற்கனவே மனநோயால் பாதிக்கபட்டவர்களின் நிலைமை தீவிரமடைவதும் ஆய்வுகளின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒலிமாசாக்கம் ஆனது மனிதனை மட்டுமன்றி மற்றைய உயிர்களையும் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாகக் காட்டுப்பகுதிகளில் வாழும் பறவைகள், மரம்வெட்டும் இயந்திரங்களின் சத்தத்தினால் அங்கு வசிக்க முடியாது குடி பெயர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒலிமாசாக்கம் ஆனது உலகில் வாழும் சகல உயிரினங்களிற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதினால் இதிலிருந்து எம்மை காத்துக்கொள்வதற்கு எம்எல்லோரதும் ஒத்துழைப்பும், புரிந்துணர்வும் அவசியமாகின்றது.
இதற்காக –
- வீடுகளில் வானொலிப் பெட்டியின், தொலைக்காட்சியின் சத்தத்தை குறைத்தல்
- வாகனங்களில் செல்லும்போது தேவையற்ற இடங்களில் ஹோர்ண் பாவிப்பதை தடுத்தல்.
- ஒலிபெருக்கிகளைத் தேவையான நேரத்தில், தேவையான இடங்களில் தேவையான அளவிற் பயன்படுத்தல்.
- தொழிற்சாலைகளை, குடியிருப்பு மற்றும் பாடசாலைகளிலிருந்து கிட்டத்தட்ட 1 Km தூரத்திற்கு அப்பால் அமைத்தல்.
- புகையிரதப்பாதை, மற்றும் பிரதான வீதிகளிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தல்.
- சத்தம் அதிகம் உள்ள இடங்களில் ஒலிபுகாத அறைகளை அமைத்தல்
- இயந்திரங்களுடன் பணிபுரியும் தொழிலாளர்கள் காதில் ஒலிபுகாதகருவிகளை அணிதல் போன்றவற்றை மேற்கொள்ளல்.
கருணதீபா சிவபாதசுந்தரம்