ஆரோக்கியமான மருத்துவத்துறை என்பது மக்களின் உடல், உள சமூக விருத்திகளின் ஊடாகத் தரமான வாழ்க்கை வழங்குகின் மிக உன்னதமான ஒரு தொழிற்பாடு ஆகும். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான நவீன ஆங்கிலத்துறையினுடைய வளர்ச்சியின் மூலமாக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தேர்ச்சியும், சிறப்பத் தன்மை வாய்ந்ததுமான சுகாதார தொழில் வாண்மையாளர்களைக் கொண்ட சிகிச்சை முறைகளைத் தன்னகத்தே இது உள்ளடக்கியுள்ளது. இதன் அடிப்படையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை விசேடத்துவம் பெற்றதும், தற்காலத்தில் மிகவும் அசசியமான ஒரு சிகிச்சை முறையாகவும் கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை முறை, அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்து வருகின்ற ஒரு சிகிச்சைமுறையாகத் திகழ்கின்றது. இதன் அடிப்படையில் ஏறக்குறைய இற்றைக்கு 15 தொடக்கம் 18 ஆண்டுகள் கொண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு காணப்படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சைத் துறையானது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால் இதன் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது. ஏனெனில் போதிய அளவு சிறப்புத் தேர்ச்சி பெற்ற பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதே ஆகும். இலங்கையின் பிரதான நகரங்களில் காணப்படுகின்ற அரச வைத்தியசாலைகளில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையைப் பெற்று கொள்ள முடியும். விசேடமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பெற்றுக் கொள்ள முடியும். கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஏனைய தனியார் வைத்தியசாலைகளிலும் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் தமிழ் மொழிமூலமாக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சைத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழில் வாண்மையாளர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். இலங்கையில் வட, கிழக்க பகுதிகளில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை புதியதோர் விடயமாக பார்க்கப்படுகின்றது. இதற்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் ஏனைய பிரதேசங்களில் இருந்து நீண்ட காலம் சற்று தனித்தே இருந்தமையே காரணமாகக் கருதப்படுகின்றது.
இன்றைய காலப் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட ஏனைய வட பகுதி வைத்திய சாலைகளில் போதியளவு வைத்திய நிபுணர்கள் இருக்கின்ற போதிலும் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறையின் தேவை மிக அதிகமாக காணப்படுகின்ற போதிலும், இந்தத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிரந்தர பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர் எவரும் இல்லாத இந்த பகுதிகளில் இருந்து பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருகின்றவர்களுக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது. இந்த நிலையில் சேவையைப் பெற வரும் சேவை நாடிகளுக்கு மட்டுமல்லாது, சுகாதாரத் துறையில் ஈடுபடுகின்ற ஏனைய மருத்துவத் தொழில் வாண்மையாளர்களுக்கும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தடைக்கல்லாக அமைந்து காணப்படுகின்றது. பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர் எமது பிரதேசங்களில் பற்றாக்குறையாக காணப்படுகின்றபடியினால் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை பற்றிய வழிப்புணர்வு மட்டம் சுகாதார தொழில் வாண்மையாளர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் குறைந்த அளவு மட்டத்தில் இருப்பதற்கு காரணமாக அமைகின்றது. தற்காலத்தில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை குறித்து பார்த்தோம். பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை பற்றி விவரமாக நோக்குவோம்.
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை / பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர் ( Speech and Language Therapist)
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறையானது சிறுவர்களிலும், பெரியவர்களிலும் ஏற்படக்கூடிய பேச்சு, மொழி தொடர்பாடல் பிரச்சினைகள் மற்றும் உணவை விழுங்குவதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை முறை ஆகும்.
பேச்சு, மொழி, தொடர்பாடல் மற்றும் விழுங்குவதில் பிரச்சினைகள் உள்ள தனிநபர் அல்லது குழுவுக்குச் சிகிச்சை வழங்குவதும், அதனுடன் தொடர்புடைய குறைபாடுகளை இனம் காணுதல், அவர்களைக் கணிப்பீடு செய்தல், அவர்களை ஏனைய மருத்துவ நிபுணர்களிடம் பரிந்துரை செய்து தேவையான சேவைகளை சேவை நாடிகளுக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்ள பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சைத் துறையில் விசேட தொழில் வாண்மை சார்ந்த திறன்களைக் கொண்டு காணப்படுவர் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர் ( Speech and Language Therapist) என்று அழைக்கப்படுகின்றனர்.
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையினுடைய வரலாறு
உலகில் ஆரம்ப காலப் பகுதியில் பேச்சு, மொழி, தொடர்பாடல், மற்றும் விழுங்குவதில் பிரச்சினைகள் கொண்ட பல்வேறு நோயாளர்கள் காணப்பட்டாலும் அவர்களைச் சரியான முறையில் அடையாளப்படுத்தவும், தேவையான சிகிச்சை முறைகளை வழங்கவும் 1700 மற்றும் 1800 ஆண்டுகள் காலப்பகுதிகளில் தொழில் வாண்மையாகத் தேர்ச்சி பெற்றவர்கள் தோற்றம் பெறவில்லை.. 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட தேவைகளின் பொருட்டு பேச்சு, மற்றும் மொழிச் சிகிச்சை முறையின் அவசியம் உணரப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாண்மை சார்ந்த பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்கள் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மருத்துவ நிறுவனங்களின் ஊடாக உருவாக்கம் பெற ஆரம்பித்தனர்.
1939- 1945 காலப்பகுதியில் ஏற்பட்ட 2ம் உலகப் போரின் விளைவு பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சைத்துறையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று குறிப்பிடுவதில் ஐயமில்லை. காரணம் என்ன வெனில் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அதிகளவான மக்கள் விசேட தேவையுடையவர்களாக மாற்றம் பெற்றனர். இதனால் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறையைக் கொண்டு செல்வதற்கும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்களுக்கு பேச்சு, மொழி மற்றும் தொடர்பாடல் திறன்கள் சிகிச்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை இன்னியமையாததாகக் காணப்பட்டது. இதன் பொருட்டு இக்காலப்பகுதியில் அதிகப்படியான பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, தொழில் வாண்மை வாய்ந்தவர்களாகத் தமது சேவைகளை ஒழுங்குபடுத்தப்பட்ட புனர்வாழ்வின் ஊடாக வழங்கி வந்தனர். அத்தோடு பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சை நிலையங்கள், புனருத்தான நிலையங்கள் என்பன அதிகப்படியாக விசேட தேவையுடையவர்களை மையப்படுத்தி தோற்றம் பெற்று சேவைகளை வழங்கத் தொடங்கின. தற்காலப்பகுதியில் பேச்சு மொழிச் சிகிச்சையாளர் வைத்திய சாலைகளை மட்டுமே மையப்படுத்திச் சேவைகளைச் செய்யாது எல்லா மட்டங்களிலும் சேவைகளை வழங்கி வருவதுடன் பாடசாலைகளிலும் தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும் நவீன யுகத்தில் தொழில்நுட்ப நுணுக்கங்களுடாகவும், ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டும் சிறந்த முறையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை திறம்படத் தொழிற்பட்டு வருகின்றது.
இலங்கையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறையின் தோற்றம் பற்றி நோக்குகையில் Harry Wicondan என்பவர் பிதாமகராக விளங்குகின்றார். Harry Wicondan தனது குழுவினருடன் பிளவு பட்ட உதவு/ அன்னம் ( Cleft lip / palate) சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தார். சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர் குறிப்பிட்ட சேவை நாடிக்கு பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை அவசியமாகக் கருதப்பட்டது.
( இன்னும் வளரும்…..)
ப.கௌரிதாசன்
பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளர்.
நரம்பியல் பிரிவு – B
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்