இன்று ஒர் சாதாரண தடிமன், காய்ச்சல் ஏற்பட்டவுடனேயே நாம் மருந்தகங்களுக்குச் ( Pharmacy) சென்று வைத்தியரின் பருந்துரை இன்றி அன்டிபயோட்டிக் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். இது தவறானது.
பொதுவாக சாதாரண தடிமன் காய்ச்சலானது வைரஸ் என்னும் வகை நோய்க்கிருமிகளினால் ஏற்படுகின்றது. ஆனால் இவ் அன்டிபயோட்டிக் மாத்திரைகள் வைரஸ் நோய்க்கிருமிகளை அழிக்கமாட்டாது. இவை பக்ரீறியா என்னும் வகை நோய்க்கிருமிகளையே அழிக்கக்கூடியது. எனவே ஒர் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு நாம் தேவையற்ற விதத்தில் அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம்.
எமக்கு ஏற்பட்ட நோயானது பக்ரீறியாவினால் ஏற்பட்டதாக இருந்தாலும் கூட நாம் வைத்தியரின் ஆலோசனை இன்றி அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்துவது தவறானது. எனெனில் அன்டிபயோட்டிக் மாத்திரைகளை தெரிவுசெய்யும் போது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்படுகின்றன.
- நோயை ஏற்படுத்தும் பக்ரீறியா வகை
- நோயின் வீரியத்தன்மை
- நோயாளியின் வயது
- நோயாளியின் நிறை
- சிறுநீரகம், ஈரல், என்பவற்றின் தொழிற்பாடு
- கற்பிணித் தாய்மார்கள், பாலுட்டும் தாய்மார்கள்
- வேறு ஏதாவது மாத்திரைகள் பயன்படுத்துதல்.
மேற்குறிப்பிட்டவை தவிர ஓர் அன்டிபயோட்டிக் மாத்திரையை தெரிவு செய்யும் போது என்ன அளவில் பயன்படுத்துவது, எத்தனை தடவை பயன்படுத்துவது, தொடர்ந்து எத்தனை தினங்கள் பயன்படுத்துவது, சாப்பாட்டிற்கு முன்பு பயன்படுத்துவதா? பின்பு பயன்படுத்துவதா? போன்ற விடயங்களும் கருத்தில் கொள்ளப்படும்.
எனவே குறித்த நோய்க்கிருமியால் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு பொருத்தமற்ற வேறு ஓர் நோய்க்கருமிக்குரிய அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தி குறித்த கிருமியை அழிக்க முடியாது.
அவ்வாறே குறித்த ஓர் மாத்திரையானது குருதியில் குறிப்பிட்ட செறிவில் உள்ளபோதே நோய்க்கிருமிகளை அழிக்கக்கூடியது. உதாரணமாக ஒர் மாத்திரையை வைத்தியர் பரிந்துரைக்கும் போது ஒரு நாளைக்கு 3 வேளை தொடர்ந்து 07 தினங்களுக்கு பரிந்துரைப்பாராயின் இங்கு 3 தடவை என குறிப்பிடப்படுவது 8 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை என்பதாகும். எனவே நாம் மேற்குறிப்பிட்டவாறு பயன்படுத்தும் போதே குறித்த செறிவில் குருதியில் பேணமுடியும்.
சில அன்டிபயோட்டிக் மாத்திரைகளை நாம் சாப்பாட்டிற்கு முன்னர் பயன்படுத்தவேண்டும். இல்லையேல் உணவானது அவற்றின் அகத்துறிஞ்சலை பாதிக்கும். அதே போல் வேறு மாத்திரைகளை அன்டிபயோட்டிக் மாத்திரையுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சில மாத்திரைகள் அன்டிபயோட்டிக் மாத்திரைகளை விரைவாக அழிவடைய செய்து உடலிலிருந்து அகற்றிவிடும். வேறு சில மாத்திரைகள் அவை உடலிலிருந்து அகற்றப்படும் காலத்தை தாமதப்படுத்தும் இதனால் குருதியில் குறித்த செறிவை பேணமுடியாத நிலை ஏற்படும்.
அன்டிபயோட்டிக் மாத்திரைகள் ஈரல் அல்லது சிறுநீரகம் மூலமாகவே பொதுவாக உடலிலிருந்து அகற்றப்படும் எனவே இவை பாதிக்கப்பட்டிருப்பின் அவையும் குருதியில் மாத்திரையின் செறிவை மாற்றமடையச் செய்யும். சில மாத்திரைகளை இவ்வாறான பாதிப்புடையவர்களிற்கு பயன்படுத்தும் போது அவை உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
எனவே ஒர் நோயாளிக்கு எவ்வாறு அன்டிபயோட்டிக் மாத்திரைகளை தேர்வு செய்வது என்பது ஒர் வைத்தியராலேயே தீர்மானிக்க முடியும்.
இவ்வாறு வைத்தியரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படும். உதாரணமாக.
- முறையற்ற பாவனையால் உடலில் சாதாரணமாக வாழும் நோயை ஏற்படுத்தும் பக்ரீயாக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் உடலிற்கு நன்மை பயக்கும் பக்ரீறியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் வயிற்றோட்டம் , தோல் நோய்கள் போன்றன ஏற்படுகின்றன.
- தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் போது உடலில் மருந்தின் அளவு அதிகரித்து நச்சுத்தன்மை ஏற்படும். இதனால் ஈரல் தொழிற்பாடு, சிறுநீரகத் தொழிற்பாடு, என்பு மச்சையின் தொழிற்பாடு, கேட்கும் திறன், பார்க்கும் திறன் போன்றன பாதிப்படைகின்றன.
- கற்பகாலத்தில் சில அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவை தாயின் கருவில் வளரும் குழந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கு வழிசமைக்கும்.
- அன்டிபயோட்டிக் மாத்திரைகளை முறையாக பயன்படுத்தி நோய்க்கிருமியானது முற்றாக அழிக்கப்படாவிடின் அவை அம்மாத்திரைகளிற்கு எதிராக எதிர்ப்புசக்தியை உருவாக்கும். எனவே மீண்டும் அந்நோய்க்கிருமியால் தொற்று ஏற்படும் போது அவ் அன்டிபயோட்டிக் மாத்தரைகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த முடியாது.
எனவே வைத்தியர் பரிந்துரை இன்றி அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்த்து அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாப்போம்.
மேனகா பாக்கியநாதன்