நீரிழிவுநோய் உள்ளவர்களும், அதிகரித்த உடல்நிறை உள்ளவர்களும் சீனியின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும், உடல்நிறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சீனிக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளைப் பெருமளவில் பாவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாவனைக்கு உகந்தன என அனுமதிபெற்று தற்பொழுது பாவனையில் உள்ள இனிப்பூட்டிகளாவன.
1. அச்சலபம் பொட்டாசியம் (Acesephme Potassium)
2. அஸ்பாற்றம் (Aspartame)
3. நியோற்றம் (Neptame)
4. சக்கறீன் (Saccharin)
5. சுக்கிறலோஸ் ( Sucralose)
இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்தபொழுதும், இவற்றுக்கு குருதி குளுக்கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ அல்லது உடல் நிறையை அதிகரிக்கும் தன்மையோ இல்லை. அத்துடன் இவற்றுக்கு இரத்தத்திலே, அல்லது உடலிலோ கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மைகூட இல்லை. சீனி, சர்க்கரை போன்ற இனிப்பு வகைகளைப் பாவித்தால் பற்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய பாதிப்புகள் செயற்கை வகையான இந்த இனிப்பூட்டிகள் பாவிப்பதால் ஏற்படமாட்டாது.
இந்த இனிப்பூட்டிகளின் பாவனையால் ஏதாவது ஆபத்து நிகழுமா? அல்லது உடற்பாதிப்புகள் ஏற்படுமா? என்பது சம்பந்தமாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அளவுடன் இவற்றை பாவிப்பது பாதுகாப்பானது என்பதை உறுதி செய்திருக்கின்றன. அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் எண்பது பாதுகாப்பானதல்ல என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
பாயாசம், தேநீர், ஐஸ்கிறீம்வகைகள் மோதகம் போன்றவற்றுக்கும் இந்த இனிப்பூட்டிகளைப் பாவிக்க முடியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல குடும்பத்தில் எந்த நோய் உள்ளவர்களும் அதிகரித்த நிறை உள்ளவர்களும் நிறை அதிகரிப்பை தடுக்க விரும்புவர்களும் சீனி, சர்க்கரைக்கு பதிலாக இந்த இனிப்பூட்டிகளைப் பாவிப்பது பாதுகாப்பானது.
ஆரோக்கியமாக உணவு வகைகளைச் சுவை மிக்கனவாகச் சமைத்து அளவுடன் உண்பது ஒரு கலையே! இனிப்பூட்டிகளின் வரவு இனிப்பை விரும்புவர்களுக்கு உண்மையிலேயே ஒர் இனிப்பான செய்தியாகும்.
சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை