ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் ஆசை நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா ? என்று கேட்டால் 100இற்கு 90 வீதம் இல்லை என்பதே பதில். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆரோக்கியமாக வாழ எமக்கு உணவு பழக்கங்கள் மிகவும் அவசியமாகின்றன.
ஏதாவது உடல்நிலை பாதிப்பு என்று வைத்தியரிடம் போனால் மருந்துடன் நல்ல சத்தான சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்று தான் சொல்வார்கள். சரி சத்தான உணவு என்றால் என்ன? இரத்தம், எலும்பு, தசைகள், தோல், நரம்புகளுடன் பின்னிப் பிணைந்த இதயம், கல்லீரல், நுரையீரல், உடல், சிறுநீரகம் போன்றவற்றைக் கொண்டது தான் எமது உடல், இந்த உடலுக்கு இரத்த ஒட்டம் கிடைத்தால்தன் உடல் உறுப்புக்கள் முழுமையாக இயற்கும் நோய்கள் ஏற்படாது.
எங்கள் உடலுக்கு சத்துக்கிடைக்கவில்லை என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறீர்களா? சத்தான உணவு எமது உடலுக்கு கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் இதோ.
- எப்பொழுதும் சோர்வு
- பலவீனம், வீட்டில் சாதாரண வேலைகள் கூட செய்யமுடியாத நிலை
- உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவு
- நித்திரைக்குறைபாடு
- எப்பொழுதும் மன அழுத்தம்
- கவனக் குறைவு
- உணவு சமிபாடு ஆகாமல் இருப்பது.
- மலச்சிக்கல் ஏற்படுவது
- அடிக்கடி எரிச்சல்படுவது
- தோல்பகுதி வறண்டு இருப்பது.
- சொறிசிரங்கு ஏற்படல்
- வாய், உதடு வரண்டு போவது
- நகங்கள் திடமாக இல்லாமல் உடைந்து போவது.
- தலைமுடி கொட்டுவது அதிகரிப்பது
- உடலில் நீர் வற்றியது போன்ற உணர்வு
- ஞாபகசக்திக் குறைபாடு
இவ்வளவு அறிகுறிகள் சில இருந்தாலே உடலுக்குச் சத்தான உணவு கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சத்துக்கள் கிடைக்காத நிலையில் அடுத்து நோய்கள் அணிவகுத்து வரும் என்பதை உணரவேண்டும்.
நான் நன்றாகச் சாப்பிடுகின்றேன் தானே ஏன் சத்து இல்லை என்று சொல்லுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். உணவைத் தெரிந்தெடுத்து நாம் உண்ண வேண்டும் வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைக்கேற்ப உணவைத் தெரிவது மிகவும் அவசியம். ஒரு புடவை எடுக்கபோகின்றோம் என்றால் எவ்வளவு யோசிக்கின்றோம்? எத்தனைமுறை கடையேறியிறங்குகின்றோம்? ஏன் எமது உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமானதாகவும் பிடித்திருக்கவும் வேண்டுமல்லவா? உடலின் வெளியே அணியும் புடைவைக்கே இவ்வளவு முக்கியம் கொடுக்கும் நாம், எம் உடலில் ஏன் கவனம் செலுத்துவதில்லை சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இப்பொழுது சிந்திக்காவிட்டால் வாழ்வின் இறுதி எல்லையைத் தொட எமக்கு அதிகநேரம் பிடிக்காது.
பசி எடுத்தவுடன் கடையிலோ, வீட்டிலோ பசியைப் போக்குவதற்குகாக ருசி யான சாப்பாட்டைத்தான் நாம் தேடுகின்றோம் அல்லவா? எமது உடலுக்கு எவை தேவை என்பதை சிந்திப்பதுகிடையாது. வெறுமனே கலோரிப் பெறுமானம் கொண்ட உணவுகளையே அதிகம் உண்கின்றோம் புரதம் விற்றமின் கனியுப்பு நிறைந்த உணவுகளையும் எமது நாளாந்த உணவில் சேர்த்துக்கொள்ள மறந்து விடுகின்றோம்.
குடும்பத்தில் உணவு சமைக்கும்போது ஏதோ மூன்றுவேளையும் சமைத்துவைத்தால் சரி, வீட்டில் உள்ளவர்கள் பசியில்லாமல், நாம் சமைப்பதை மிச்சமில்லாமல் சாப்பிட்டால் சரியன்றே நாம் நினைக்கின்றோம். அது தவறு வீட்டில் குழந்தைகள், வயோதிபர்கள் வளரும் பிள்ளைகள், வாலிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் இருக்கலாம். அவரவர் உடல் தேவையை மனதில் இருத்தியே நாம் உணவைத் தயாரிக்கவேண்டும்.
மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு சக்தி கூடுதலாக தேவை. அலுவலக வேலை செய்பவருக்கு அந்தளவு சக்தி தேவையில்லை. உணவைத் தெரியும்போது அவரவர் செய்யும் வேலையையும் கருத்தில் கொள்ளவேண்டும். மிகவும் எளிதான வேலை செய்பவர்கள். நடுத்தர வேலைசெய்பவர்கள் நாம் பார்க்கும் வேலை மட்டுமல்ல வயது, பால், நோய்கள், ஒவ்வாமை அனைத்தையுமே உணவுத் தெரிவின்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் நினைக்கலாம் மாதாந்தம் எடுக்கும் சம்பளத்தில் இப்படிச் சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளைக்கே போதாது இப்படியிருக்க என்ன செய்வது? என்று அது உண்மைதான் என்ன செய்வது? இறைச்சி, மீன் முட்டை என அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடச் சொல்லவில்லை. சாதாரண காய்கறிகள், பழங்கள், இலைவகைகளைச் சேர்த்து சாப்பிட்டாலே போதுமானது.
காலையிலே வெறும் வயிற்றோடு அநேக குழந்தைகள் பாடசாலைக்கும், பெரியவர்கள் வேலைக்கும் போகின்றார்கள், இது தான் நாம் எமக்கே கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை. பல நோய்களுக்கு வித்திடுவது இதுதான். காலையில் ஒரு கப்பாலாவது குடித்துவிடடுத்தான் வெளியே செல்லவேண்டும்
குழந்தைகளுக்கு வெளியே சாப்பிடக் காசு கொடுக்காமல் பொரி அரிசிமா, முட்டை மா, என்பவற்றைச் செய்து வையுங்கள். அவை இலகுவில் தயாரித்து உண்ணக்கூடியவை. சுண்டல், பயறு, கௌப்பி, என்பவற்றை முறையாகத் தயாரித்துக் கொடுங்கள்.
நீங்கள் சொல்லலாம் “இவையெல்லாம் செய்து கொடுத்து அலுத்து விட்டது. பிள்ளைகள் சாப்பிடமாட்டன் என்று அடம்பிடிக்கிறார்களே! என்ன செய்ய?” என்று ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு விதம்விதமாக உணவைத் தயாரியுங்கள். பிட்டு சமைக்கின்றீர்களா? அதில் கொஞ்சம் கீரையைச்சேர்த்து அவுயுங்கள், ரொட்டி செய்கின்றீர்களா? கரட், கோவா, பீற்றூட் போன்றவற்றை துருவலாக வெட்டி மாவுடன் சேருங்கள், தோசையின் மீதும் தூவிக்கொள்ளுங்கள். எண்ணையில் பொரித்த உணவுகளை விட ஆவியில் அவித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
முழுத் தானியங்கள், முளைகட்டிய தானியங்கள் ( பயறு போன்றவற்றை முதல் நாள் நீருக்குள் ஊறவைத்து அடுத்த நாள் முளை கட்டியவுடன்) அதை உபயோகியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இட்லியை வாரம் இரு முறையாவது உண்ணுங்கள். இது ஆவியில் வெந்த ஒரு சத்தான உணவு மூடபழக்க வழக்கங்களையும், எண்ணங்களையும் தயவு செய்து விட்டு விடுங்கள், மதுபானம், புகையிலை, சிகரட் உபயோகிப்பதை விடடு விடுங்கள், இல்லை கடினமானால் குறைத்துவிடுங்கள்.
மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் மருத்துவரின் பரிந்துரையின்படியே மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துக்களை பெறுவதற்காக எமது எண்ணப்படி மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவுக்கேற்ப உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது.
உடலில் எவ்வளவு கூடிய கவனமெடுக்க வேண்டுமோ அதே அளவிற்கு மனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமாவது உடல் மனம் இரண்டையுமே சார்ந்தது. மன அழுத்தத்தைத் தவிருங்கள். நீங்கள் நினைக்கலாம் சொல்லுவது எல்லாம் சுலபம், கோபம் வந்தால் எப்படி அடக்குவது? துக்கத்தை எப்படி மறப்பது என்று சரியான கேள்விதான். எல்லாமே மற்றவர்களுக்குச் சொல்லும் போது சுலபமாக இருக்கும். அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். குழந்தை பிறந்து இரண்டாவது நாளில் நடக்கமாட்டாது. குழந்தை சிறிது சிறிதாக வளருவது போல் மெதுவாக எமது மனதைப் படம் போட்டுக் கொள்ளவேண்டும். நல்ல இசையைக் கேளுங்கள். முதலில் சத்தம் போட்டுக் கதைக்காதீர்கள். வார்த்தைகளை வெளியே விடாதீர்கள், நாக்குத்தான் எமக்கு பெரிய எதிரி, ஆன்மிகத்தில் கொஞ்சம் ஈடுபடுங்கள், மனம் விட்டு கதையுங்கள். பிரச்சினைகளைக் கண்டு ஒளிக்காதீர்கள். எதிர்நோக்குங்கள், தியானம் செய்யுங்கள், பிழை செய்தால் யாராயிருந்தாலும் மன்னிப்புக் கேளுங்கள். உதவி செய்தால் நன்றி சொல்லுங்கள், அழுகைவந்தால் அழுங்கள், சிரிப்பு வந்தால் சிரியுங்கள், மன அழுத்தம் மறைந்து விடும். மன அழுத்தம் மறைந்தால் உடல் புத்துயிர் பெற்றது போல் உணர்வீர்கள்
ஷாலினி புவனேசமூர்த்தி
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ். போதனா வைத்தியசாலை