வைத்தியர் – பிள்ளைக்கு நிறைகுறைவு என்று அனுப்பியிருக்கினம்…
தாய் – ஆம் நிறை குறைவுதான், ஆனால் அவன் நல்ல சுட்டி நிறை குறைஞ்சாலும் “அக்ரிவ்” என்றபடியால் நான் கவலைப்படவில்லை. ஆண் பிள்ளை உயரம் குறைவாய் இருக்கிறான் என்றபடியால்தான் வந்தனான்.
குழந்தைகளின் வளர்ச்சி வயதுக்கேற்ப இருப்பது பெற்றோர்களின் பெருவிருப்பாகும். வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பதால் பல விருப்பத்தகாத பின் விளைவுகளைத் தடுக்க முடியும். சில நேரங்களில் நோய் நிலைமைகளின் ஆரம்ப வெளிப்பாடாகவும் வளர்ச்சிக் குறைபாடு அமைகின்றது.
வளர்ச்சிக்குரிய அளவீடுகளைக் கால இடைவெளிகளில் அளந்து குறிப்பதனால் வளர்ச்சி அளவு கணிக்கப்படுகின்றது.
குழந்தையின் வளர்ச்சியைக் கணிக்க உதவும் அளவீடுகள்
- நிறை
- நீளம் / உயரம்
- மேற்புயத்தின் மத்திச் சுற்றளவு
- தோல் மடிப்பின் தடிப்பு
- இடுப்புச் சுற்றளவு
மேற்குறிப்பிட்ட அளவீடுகளில் நிறை வளர்ச்சிப்படியின் தாக்கங்களை குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் ஒப்புநோக்க உதவும் இலகுவான அளவீடாகும்.
உங்கள் பிள்ளையின் நிறையைத் திருப்திகரமாகப் பேணுவது ஏன் அவசியமாகிறது?
- நிறை அதிகரிப்பு பிள்ளையின் வளர்ச்சியின் அளவு கோலாகக் கருதப்படுகின்றது.
- நீண்ட நாள்களாக நிறைக்குறைவு ஏற்படும்போது அது பிள்ளை அடைய வேண்டிய உயரத்தைப் பாதிக்கின்றது.
- மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மூளை வளர்ச்சியும் திறமைகள் விருத்தியடைவதையும் பாதிக்கின்றது.
- நிறைகுறைவான பிள்ளைகள் அடிக்கடி கிருமித்தொற்றுக்குட்படும் நிலைமையும் நோய்வாய்ப்படும் தன்மையும் காணப்படுகின்றன.
- நிறைகுறைவான பெண்பிள்ளைகள் அவர்கள் தாயாகும் வேளையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றனர்.
- திருப்திகரமான மூளை வளர்ச்சி, விருத்தி
- வயதுக்குரிய உயரத்தை அடைதல்
- கிருமித் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு
என்பவற்றுக்கு பிள்ளையின் நிறையைச் சரியாகப் பேணுவது அவசியமானது. உங்கள் பிள்ளையின் நிறையைத் தீர்மானிக்கும் காரணிகள்.
பிறப்பு நிறையைத் தீர்மானிக்கும் காரணிகள்
- தாயின் உயரம்
- கர்ப்பகாலத்தில் ஏற்படும் நிறை அதிகரிப்பு
- கர்ப்பகாலத்தின் முன்னரும் அதன் போதுமான தாயின் போசனை.
- தாயின் கர்ப்பகால நோய் நிலைமைகள்
- குழந்தையில் ஏற்படும் நோய் நிலைமைகள்
- பரம்பரைக் காரணிகள்
பிறப்பின் பின்னரான வளர்ச்சி பின்வரும் முக்கிய காரணிகளால் நிர்மாணிக்கப்படுகின்றது.
- ஒரு வயது வரை போஷாக்கான உணவினால்
- 2 முதல் 10 வயது வரை தைரொக்சின் வளர்ச்சிக்குரிய ஹோர்மோன்கள்
- பூப்படையும் வயது பாலியல் ஹோர்மோன்கள்
எல்லா வயதுள்ள பிள்ளைகளிலும் பின்வரும் காரணிகள் வளர்ச்சியில் பங்களிக்கின்றன.
- போஷாக்குள்ள உணவு
- ஆரோக்கியமான உடல் நிலை
- திருப்திகரமான உளநலம்
- சமநிலையிலுள்ள அகஞ்சுரப்புகள்
எனவே நிறைகுறைவு மேற்கூறப்பட்ட காரணிகளில் சமநிலையில்லாத போது ஏற்படுகின்றது. ஆரம்பத்திலேயே நிறைகுறைவுக்கு உரிய காரணத்தைக் கண்டறிவதும் நிவர்த்தி செய்வதும் மிக அவசியம். இல்லாவிடின் அது பிள்ளையின் உயரம், மூளை வளர்ச்சி – விருத்தி என்பனவற்றையும் பாதிக்கின்றது.
குமுதினி கலையழகன்
குழந்தைநல வைத்தியர்
யாழ். போதனா வைத்தியசாலை