இலங்கையில் 93 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் கடல் பாம்புகளும் அடங்கும். எனினும் ஐந்துவகை பாம்புகள் மட்டுமே அதிக நச்சுத் தன்மையுள்ளனவாகவும், இறப்பை ஏற்படுத்தக்கூடியளவாகவும் உள்ளன. இலங்கையில் உள்ள அதிக நச்சுப்பாம்புகள்.
- நாகபாம்பு (Cobra)
- எண்ணை விரியன் ( Common Krair, Ceylon Krait)
- கண்ணாடி விரியன் ( Russell’s Viper)
- சுருட்டை பாம்பு ( Saw Scaled Viper)
பெரும்பாலான இறப்புக்கள் நாகபாம்பு, எண்ணை விரியன், கண்ணாடிவிரியன் என்பவற்றினாலேயே ஏற்படுகின்றன.
பாம்புக்கடியினால் ஏற்படுகின்ற நோய் அறிகுறிகள் கடித்த பாம்பின் வகையை பொறுத்தும், பாம்பினால் உட்செலுத்தப்பட்ட நச்சுத் தன்மையின் அளவிலும் தங்கியிருக்கிறது.
பெரும்பாலான பாம்புக்கடிகள் நச்சுத்தன்மை குறைந்த பாம்புகளால் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் நச்சுள்ள பாம்புகளால் கடி ஏற்பட்ட போதிலும் அவை இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு நச்சை உட்செலுத்துவதில்லை.
நோய் அறிகுறிகள்.
அதிக நச்சுப் பாம்புகள் கடித்து குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட நச்சுத் தன்மையை உட்செலுத்திய பின் பாம்பின் வகையைப் பொறுத்து நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. பொதுவான அறிகுறிகளாக கடித்து சில மணி நேரத்தியேயே வாந்தி, வயிற்றுநோய், தலைச்சுற்று என்பவையும் கடித்த இடத்தில் வீக்கம், நோ, இரத்தப்போக்கு என்பவையும் ஏற்படலாம்.
பாம்புகளுடைய நச்சுகளின் வகையை பொறுத்து, பாம்புகளின் நச்சுகள் தாக்குவனவாகவும் சில குருதிச் சுற்றோட்டத்தொகுதியை தாக்குவனவாகவும் சில இரு தொகுதிகளையும் தாக்க கூடியனவாகவும் உள்ளன.
பிரதாகமாக நாகபாம்பு, எண்ணை விரியன் என்பனவற்றில் நரம்புத் தொகுதியைத் தாக்கக்கூடிய நச்சுக்கள் உருவாகின்றன. நரம்புத் தொகுதி பாதிக்கப்படுவதன் விளைவாக கண்கள் மூடுபடுதல், விழுங்க முடியாமல் போதல், சோம்பல், மூச்சு எடுப்பதில் கஷ்டம், பார்வை இரண்டாக தெரிதல் என்பன ஏற்படுகின்றன.
கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு என்பவற்றின் நஞ்சு பிரதாகமாக குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குருதியில் விளைவுகள் ஏற்படுத்துவதன் மூலம் குருதி உறைாயத தன்மை, இரத்தப்பெருக்கு, இரத்தவாந்தி, சிறுநீருடன் இரத்தம் போதல், மூளைக்குள் இரத்தப்பெருக்கு ஏற்படுதல் என்பவை ஏற்படலாம். குறிப்பாக கண்ணாடி விரியன் இரண்டு தொகுதிகளையும் தாக்கக்கூடிய நஞ்சை கொண்டுள்ளன. கடற்பாம்புகளின் நஞ்சுக்கள் தசை நார்களைத் தாக்கவதனால் சிறுநீரகத்தை பாதிக்கின்றன.
முதலுதவி
பாம்புக்கடி ஏற்பட்டவரை முதலில் பயப்படாதபடி அறிவுரைகூறி, கடிபட்ட இடத்தை இயலுமானவரை அசைக்காது வைக்கவும், காலில் கடி பட்டிருந்தால் கால் தொங்கக்கூடிய வகையில் இருத்தி வைக்கவும். கையில் கடி ஏற்பட்டால் கையை உயர்த்தி பிடிக்காது தொங்கவிட்டபடி வைக்கவும். காயத்தை தூய தண்ணீரால் மெதுவாகக் கழுவவும். இறுக்கி உரஞ்சி கழுவுவதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் நச்சுத்தன்மை குருதிச் சுற்றோட்டத்துக்கு பரவுவதை குறைக்கலாம்.
கடிபட்ட இடத்துக்கு மேலாக கட்டுவதையோ காயத்தில் வாய் வைத்து உறிஞ்சுவதையோ, பிளேட் போன்றவற்றால் காயத்தை வெட்டுவதையோ தவிர்க்கவும் இந்தச் செயன்முறைகளால் பாதகமான விளைவுகளே நோயாளிக்கு ஏற்படுகின்றது. கடித்த இடங்களில் மோதிரம், மெட்டி என்பவை அணிந்திருந்தால் அவற்றை உடனடியாக கழற்றிவிடவும் ஏன் எனில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றால் தீய விளைவுகளே ஏற்படும். கடிபட்டவருக்கு எந்த உணவுப் பொருளையோ மாத்திரைகளையோ கொடுக்காது இயலுமானவரை விரைவாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் கொண்டு சென்று வைத்தியரின் உதவியை நாடவும். இயலுமானால் கடித்த பாம்பை கொண்டுவர முடிந்தால் நோயாளியுடன் கொண்டு வரவும் இறந்த பாம்பைக் கொண்டுவருவதன் மூலம் நச்சுப்பாம்பை இனங்கானன உதவியாக இருக்கும்.
இதற்காக எந்தவிதத்திலும் நோயாளியை வைத்தியசாலையில் சேர்ப்பதைத் தாமதிக்கவேண்டாம். வைத்தியசாலையில் மருத்துவர்களால் நச்சுத்தன்மை உட்வுத்தப்பட்டுள்ளது என்பதை நோயாளியின் நோய் அறிகுறிகள் கொண்டும், பரிசோதனைகள் மூலமும் உறுதிப்படுத்திய பின் நச்சுத்தன்மையை குறைக்கக்கூடிய ஊசி மருந்து ஏற்றப்படுகிறது. ( Anti Snake Venom) இந்த மருத்துவ முறையால் பெருமளவிலான இறப்புக்கள் குறைக்கப்படுகின்றன.
தடுப்பு முறைகள்
இயலுமானவரை பாம்புக்கடியிலிருந்து தப்பி இருப்பதற்கு வீட்டையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். விசேடமாக பற்றைகள், கற்கும்பிகள் என்பவற்றை அகற்ற வேண்டும்.
இயலுமானவரை இரவில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்கவும். வெளியில் நடமாடும்போது செருப்பு அல்லது சப்பாத்து அணிந்து சரியான வெளிச்சம் உள்ள இடங்களில் மட்டும் இரவில் நடமாடவும்.
பாம்புக்கடி ஏற்பட்டால் இயலுமானவரை விரைவாக வைத்திய சாலைக்கு செல்வதன் மூலம் பெருமளவிலான இறப்புக்களைத் தவிர்த்து கொள்ள முடியும்.
Dr.பி.யோண்சன் MD ( Medicine)
யாழ் போதனா வைத்தியசாலை