இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. தற்போது அந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன. எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கம். சமீபகாலமாக புத்தகங்களுக்கு பதில் மின்னொளி உமிழும் மின்படிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.இப்படி அதிகரித்துவரும் மின்படிகளின் பயன்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரித்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக, புத்தகம் படிப்பதற்கும் இ-ரீடர்கள் எனப்படும் மின்படிகளைப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
தூங்கச் செல்வதற்கு முன் மின்படிகளை படிப்பவர்களுக்குத் தூக்கம் வருவதற்கு நீண்டநேரம் பிடிப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
தூங்குவதற்கு முன்னர் ஒருவரின் கண்களில் நேரடியாக படும் ஒளியின் அளவு அவரது தூக்கத்தை பெருமளவு பாதிப்பதாக கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் அந்த கவலையை உறுதிப்படுத்தியிருப்பதோடு அவற்றை அதிகப்படுத்தியிருக்கின்றன.எனவே மாலை நேரங்களில் கண்களுக்குள் நேரடியாகப்படும் ஒளியின் அளவைக்குறைக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கத் துவங்கியிருக்கின்றனர்.
மின்படிகள் என்னும்போது முதன்முதலில் வந்த அமேசானின் கிண்டில் மின்படியில் திரையில் தெரியும் எழுத்துக்களுக்கு பின்னிருந்து எந்த ஒளியும் உமிழும் வசதியிருக்கவில்லை. அந்த முதல் தலைமுறை கிண்டில் மின்படியை நீங்கள் படிக்கவேண்டுமானால், மற்ற சாதாரண காகிதப் புத்தகங்களைப்போல சூரிய வெளிச்சம் அல்லது விளக்கு வெளிச்சத்தில் தான் அவற்றைப் படிக்கமுடியும்.
ஆனால் தற்போதைய மின்படிகளின் திரை ஒளிரும் திரையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் திரையைப்போல திரைக்குப் பின்னிருந்து ஒளி உமிழும் தன்மை கொண்டவையாக இவை இருக்கின்றன. ஒளிரும் மின்படிகளின் திரையில் இருந்து வெளிப்படும் கூடுதல் வெளிச்சமானது நேரடியாக கண்ணுக்குள் செல்வதால் மனிதர்களின் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகார சமநிலை பாதிக்கப்படுவதாகவும் ஆய்ளவாளர்கள் கூறிகின்றனர். இதற்கு நேர்மாறாக, புத்தகங்கள் மற்றும் திரை ஒளிரா மின்படிகள் இப்படியான அதிகப்படியான ஒளி எதனையும் கண்களுக்குள் நேரடியாக செலுத்துவதில்லை என்பதால் அவற்றால் ஒருவரின் தூக்கம் கெடுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எனவே ஆழ்ந்த அமைதியான தூக்கம் விரும்புபவர்கள், தாங்கள் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டுமணி நேரத்துக்கு முன்னதாகவே தங்களின் ஸ்மார்ட்போன்கள், ஒளி உமிழும் மின்படிகள் போன்ற கூடுதல் ஒளியை நேரடியாக கண்ணுக்குள் செலுத்தும் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.