ஐம்பலன்களில் செவி கேட்க உதவும் கருவியாக இருக்கிறது. அத்துடன் உடல் சமநிலை, உணர்வு தொடர்பாடலுக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் தலையின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவும்.
எனினும் பிற உயிரினங்களால் உதாரணமாக ஆடு, மாடு நாய் போன்றவற்றால் தமது காதுமடலை வளைத்தும் திருப்பியும் ஒலியைச் சேகரித்து ஒலியை உள்ளே அனுப்ப முடியும். எனினும் மனிதனால் காதுகளை வளைக்கவோ திருப்பவோ முடியாது. ஒலிவரும் திக்கினை நோக்கி எமது செவியை திருப்பி ஒலிலைய நுகரமுடியும். அத்துடன் எமத காதுகள் 80 – 85 டெசியல் வரை தான் சத்தத்தைத் தாங்கும் சக்தியுள்ளவை அதிகமான சத்தத்தை தவிர்ப்பது நல்லது.
எமது காதுகளை புறச்செவி, நடுச்செவி, உட்செவி எனப் பிரிக்கலாம். இதில் புறச்செவி காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருகிறது. புறச்செவிக்கும் நடுச்செவிக்கும் இடையே செவிப்பறை மென்சவ்வு காணப்படுகிறது. நடுச்செவியானது மூக்கு, முன்தொண்டை பகுதியையும் நடுச்செவிக்குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. உட்செவி நரம்புகளாலும் பாய் பொருள்களாலும் நிரப்பப்பட்டுள்ளது.
விலை கொடுத்துவாங்க முடியாத எமது செவிச் செல்வத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள், தொற்றுக்களை நாம் அலட்சியப்படுத்தினால் சிகிச்சைகள், பெறாது விட்டால் காது தனது பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே இவற்றைக் தவிர்ப்பதற்கு சில ஆலோசனைகள்….
குழந்தை பிறந்து குறிப்பிட்ட காலங்களில் சத்தங்களுக்கு தலையை திருப்புதல் அசைவுகளை காட்டாது விடின் மற்றும் பெரிய சத்தங்களுக்கு அதிர்ச்சி அடையாது விடின் உடன் வைத்தியரை நாடவும்.
காதில் இருக்கும் மெழுகுபோன்ற பொருளை (குடும்பி) நாம் தேவையில்லாது காதில் இருந்து அகற்ற முனையக்கூடாது. இது காதினை ஈரலி்ப்பாக வைத்திருப்துடன் இதன் கசப்பு சுவையம் கிருமிகள் எதிர்ப்புத் தன்மையும் Antibactcria Propertics வெளிக்கிருமிகளின் தொற்றுத் தன்மை உட்புறத்திற்கு செல்வதைத் தடுக்கிறது. அத்துடன் பூச்சிகள், நீர் போன்றவற்றில் இருந்தும் காதை பாதுகாக்கிறது.
காதில் குச்சி, தீக்குச்சி, ஊக்கு போன்றவற்றை விட்டுக்குடையக்கூடாது. இவை செவிப்பறையில் தொற்று கிழிவுகள், காயங்கள், காதினில் சீழ் படியும் நிலையையும் ஏற்படுத்தலாம். வெளிக்காதினை தேவைப்படும் போதும் குளிக்கும் போதும் சோப்பு நீர்விட்டு கழுவலாம், எனினும் காதினில் கிருமி தொற்றுள்ளவர்களும் செவிபறையில் துவாரம் உள்ளவர்களும் காதினில் நீர் விட்டுக் கழுவுவதைத் தவிர்க்கவும்.
சொத்தைப்பல், கடைவாய்ப்பல், சரியாக வெளிவராது இருத்தல், நாக்கு மற்றும் வாய்களில் புண்கள், டான்சில் சதைவளர்ச்சி, கழுத்து எழும்பு தேய்வு, வெளிக்காதுக் கால்வாயில் கெட்டியான குடும்பி, மூக்கு தொண்டைப்பகுதியில் தொற்றுக்கள் போன்றவற்றின் மூலமும் காது வலி ஏற்படலாம். இப் பாதிப்புகளுக்குரிய சிகிச்சையை உரிய மருத்துவரின் உதவியுடன் பெறுவதால் காது வலி, பாதிப்புக்களை குறைக்கலாம். குழந்தைகளுக்கு காதுப்பகுதியில் அறையக்கூடாது. இதனால் காதில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உங்கள் காது திடீர் எனக் கேட்கவிலலையாயின் உடன் 48 மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதால் விபரீதங்களைக் குறைக்கலாம்.
குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் தொடர்ந்து இரத்த உறவில் திருமணம் செய்வதைத் தவிர்த்தல் நல்லது.
காது கேட்கவில்லையாயின் பொருத்தமான செவிட்டுத் திறனுக்கு ஏற்ப பொறி அமைப்பை வாங்கி வைத்திய ஆலோசனையுடன் பொருத்துதல் நல்லது.
காதில் உள்ள உரோமங்கள் முக்கியமானவை இவை காதினில் பூச்சி, தூசிகள் உட்செல்வதைத் தடுக்கின்றன. எனவே இவற்றை வெட்டி அகற்ற வேண்டாம்.
சில மருந்துகள் செவிட்டு தன்மையை ஏற்படுத்தும். ஆகையால் மருந்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை எடுக்க வேண்டாம்.
அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் முத்துக் குளிப்போர்கள், சுரங்கவேலை செய்பவர்கள் தொழிற்சாலை நச்சுப்புகை சுழற்சிகளுக்குள் வேலை செய்பவர்கள் உதாரணம் ( குரோமியம், ஈயம், பாதரசம், ஆசனிக்) காதினில் அழுத்த வேறுபாடுகளை சமப்படுத்துவதற்கும் செவிப்பறையை பாதுகாப்பதற்கும், செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் பயன்படுத்திக் கொள்வதால் காதுகேளாமையை தடுக்கலாம்.
குளிர்காலங்களில் அதிகாலை நேரங்களில் பயணம் அல்லது வெளியில் நடமாட வேண்டி இருந்தால் அல்லது சைக்கிளில் செல்லவேண்டி இருந்தால் உங்கள் காதுகளை (கம்பளி அல்லது உல்லன்) துணியினால் மூடிக்கட்டிக்கொண்டு செல்வது நல்லது. அத்துடன் குளிர்காலங்களில் சூடான உணவுகளை உண்ணுங்கள், குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளை அப்படியே உண்ணுவதைத் தவிருங்கள்.
தொடர்ந்து சில மணிநேரங்கள் கைத்தொலைபேசியில் கதைப்பவர்கள் ஒரு காதில் இருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றி பேசுவது நல்லது. அத்துடன் கைத்தொலைபேசிகளை காதுடன் அழுத்தமாக வைத்துப் பேசுவதைத் தவிருங்கள் மூக்கை வேகமாக சீறக்கூடாது. வேகமாக சீறும் பொது மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுக்காது வரை செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. மற்றும் தண்ணீரில் கடல் நீரில் குதித்துக் குளிப்பதையும் உயரமான இடங்களில் இருந்து குதிப்பதையும் தவிருங்கள். இதன் போது தொற்றுக்கள், செவிப்பறை கிழிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
காதுக்குடும்பி காதுக்கு பாதுகாப்பு எனினும் அதிகமாக திரண்டால் காது கேட்பதில் குறைவு ஏற்படும். எனவே வைத்தியரின் உதவியுடன் மருத்துவ ரீதியாக வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்படும்.
எஸ். சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை.