வயது மூப்படையும்போது சிலருக்கு கூனல் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்தக் கூனல் ஏற்பட ஒஸ்ரியோபொரசிஸ் என்னும் நோய் நிலைமையே காரணமாகும்.
ஒஸ்எயோபொரசிஸ் என்ற நோய் எலும்புகளின் அடர்த்தி குறைவதனாலேயே ஏற்படுகின்றது. இந்த நோய் மனிதர்கள் மூப்படையும் போது தானாகவோ அல்லது தொடர்ச்சியான சில குறித்த மருந்துப்பாவனைகளின் விளைவாகவோ ஏற்படலாம். இந்த நோய் நிலைமையால் எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மை அதிகரிக்கின்றது. இதனால் பொதுவாக முள்ளந்தண்டு எலும்புகளே உடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது.
இந்த நோய் வயது மூத்தவர்களிடம் குறிப்பாக மாதவிடாய் நிரந்தரமாக முடிவடைந்த பெண்களில் அதிகமாக ஏற்படுகின்றது. இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் மேலதிக காரணிகளாக பரம்பரைக்காரணி அதிக மது பாவனை, மூட்டுவாத நோய், மெலிந்த உடல், நீண்டகாலம் அசையாதிருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த நோய் நிலைமையானது சில ஒமோன்களின் அதிகரித்த அல்லது குறைந்த தொழிற்பாடு காரணமாகவோ அல்லது மூட்டுவாத நோய, ஸ்டிரொய்ட், ஹெபாரின், வலிப்பு மருந்துகள் போன்ற மருந்துகளின் நீண்ட காலப் பாவனை காரணமாகவோ இளம் வயதிலேயே ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. கதிரியக்கப்படங்கள் டெக்ஸா ஸ்கான் மற்றும் குருதிப் பரிசோதனை மூலம் இந்த நோய் ஏற்பட்டுள்ளமை மற்றும் அதற்கான காரணிகளும் கண்டறியப்பட்டு அதற்கேற்ப மருந்துவகைகள் மூலமும் உங்கள் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாகவும் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
அவ்வாறான சில வாழ்க்கை முறைமாற்றங்களாகப் பின்வருவன அமைின்றன.
- புகைப்பிடித்தல் மற்றும் மது பாவனையை முற்றாக நிறுத்துதல்.
- உடல் நிறையைத் தாங்கும் உடற்பயிற்சிகள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.
- கல்சியம் மற்றும் விற்றமின் டி அதிகம் அடங்கியுள்ள உணவு வகைகளை உட்கொள்ளல்.
- தவறி விழுதலைத் தடுக்கும் வகையில் வீட்டுச் சூழலை மாற்றியமைத்தல்( கண்பார்வை சிகிச்சை, சூழலை ஒளியூட்டல், கைப்பிடித்து நடக்கக் கூடிய வகையில் வழியை அமைத்தல் வழுக்காதவாறு பாதையை அமைத்துக்கொள்ளல்)
Dr.சகிலா சிற்றம்பலம்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை.