சிறுவர்களிடையே வாசிப்பு பழக்கத்தில் அல்லது வாசிக்க முயற்சிப்பதற்கான செயற்பாட்டில் பின்னடைவு காணப்படுமாயின் அதை திருத்தவேண்டும் இவ்வாறான பிள்ளைகள் ஒரு சொல்லை சரியான விதத்தில் இனங்கண்டு உச்சரிப்பதை கடிகமாக கருதுவர் இதனால் இவர்கள் புதுப்புது சொற்களை பாவிப்பதிலும் வாசிப்பதிலும் சிரமங்களை எதிர்கொண்டு இறுதியில் வாசிப்புத்திறனை இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலைமையானது மரபுவழி ரீதியாகவும் நரம்பியல் ரிதியாகவும் ஏற்படுகின்றது. எனினும் தகுந்த வழிகாட்டலின் கீழ் இப்பிள்ளைகள் தமது வாசிப்புத்திறனை விருத்தி செய்து சிறந்த வாசிப்பாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பற்காலத்தில் திகழலாம்.
வாசிப்பு பிறழ்வு நிலைமையானது ஒரு குழந்தையின் வாசிப்புத்திறனை மட்டுமல்லாது எழுதுதல், சொல் உச்சரிப்பு மற்றும் வாய்திறந்து சராமரியாக கதைத்தல் போன்ற செயற்பாடுகளையும் பாதித்துவிடுகிறது. இந்நிலைமையானது அப்பிள்ளையின் விவேகத்திறமை குறைவாக காணப்படவோ அல்லது அசமந்தத் தன்மையின் அறிகுறியுமல்ல இந்நிலைமையானது அப்பிள்ளையின் விவேகத்திறமை குறைவாக காணப்படவா அல்லது அசமந்தத் தன்மையின் அறிகுறியுமல்ல. இந்நிலைமையானது மரபு வழியாகவும் பிழையான மூளையின் செயற்பாட்டாலும் ஏற்படுகிறது. ஒரு குழந்தைக்கு கண்பார்வையில் குறைபாடு உள்ளதால் ஏற்படும் விளைவிற்கான அறிகுறியும் அல்ல. மாறாக கண் (பார்வை) மற்றும் காது (கேட்டல்) மூலம் பெறப்படும் விம்பமானது மூளையினால் விளங்கக்கூடிய செய்தியாக மாற்ற முடியாமல் இருப்பதாலேயே இந்நிலைமை ஏற்படுகிறது எனலாம்.
வாசிப்பு பிறழ்வு நிலையானது எல்லாவகையான இனத்தவர்களிலும் காணப்படக்கூடியது. ஆய்வுகளின் படி 15 சதவீத அமெரிக்கர்களில் காணப்படும் பாரிய பிரச்சினையாக உள்ளதாம்.
ஒரு பிள்ளையைப் பற்றிய தகவல்கள், அவதானிப்பு மற்றும் உளநிலை மதிப்பீடுகளினூடாக வாசிப்பு பிறழ்வு நிலையானது மருத்துவரீதியாக குழந்தை நல வைத்திய நிபுணரினால் கண்டுபிடிக்கப்பட வேண்டியது. தனியே ஒரு பரிசோதனை மூலம் இந்நிலைமையை எதிர்வு கூறமுடியாது. குடும்ப சரிதை ( பெற்றோரிற்கு இந்நிலைமை காணப்படின் 23 – 35 வீதமான பிள்ளைகளுக்கு ஏற்பட சாத்தியமுள) வகுப்பறை ஆசிரியரின் கண்காணிப்பும் முக்கியமாகிறது.
நம் சுற்றாடலை மையமாகக் கொண்டே குழந்தைகளில் இந்நிலை காணப்படின் இலகுவாக கண்டுபிடிப்பதற்கு எமக்கு உதவுவது அவர்கள் கல்வி பயில செல்லும் முன்பள்ளிசாலை மற்றும் வகுப்பறைகளே வகுப்பறைக் கல்வியானது வாசிப்பு மற்றும் எழுத்துமுறை ரீதியான செயற்பாடுகளை பிரதான உள்ளடக்குகிறது. ஆகவே வகுப்பறையில் பிள்ளைகளை அவதானிப்பதன் மூலம் இனங்கண்டு கொள்ளலாம். ஆக மொத்தத்தில் பிள்ளையின் பெற்றோரினதும் வகுப்பறை ஆசிரியர்களினதும் கூட்டு ஒத்துழைப்பு இன்றியமையாததாகிறது. வாசிப்பு திறனில் மந்தமாக உள்ள இவ்வாறான பிள்ளைகளை எவ்வாறு இனங்கண்டு கொள்ளலாம் என்பதைப் பற்றி சற்று நோக்குவோம்.
அதி புத்திசாலியாக, பிரகாசமாக தம்மை வெளிக்காட்டினும் தெளிவான இலகுவான வசனங்களை உடை ஒரு பந்தியை கொடுத்தால் வாசிக்கவோ எழுதவோ சிரமப்படுவார்கள். இதனால் இவ்வாறான பிள்ளைகள்தம் வகுப்பறையில் சோம்பேறி, ஊமை, கவனயீனம் உடையவன் நடத்தைப் பிறள்வு உடையவன் என பெயர் எடுத்து விடுகின்றனர். இதனால் இப்பிள்ளைகள் வகுப்பறையில் சக நண்பர்களிடையே மனத்தாழ்வு சிக்கலை உணர ஆரம்பிக்கின்றனர். இதன் விளைவு அவர்கள் தம் கல்விச் செயற்பாடுகளில் பிரதானமாக வாசிப்பு பாடவேளை மற்றும் வாசிப்பு பரீட்சைகளை உதாசீனம் செய்ய முனைவர் மாறாக இவ்வாறான பிள்ளைகள் சித்திரம், கீறுதல், நாடகம் நடித்தல் சங்கீதம் பாடுதல் விளையாட்டு இயந்திரங்களை கையாளல், கட்டிட வேலைப்பாடுகள் போன்ற துறைகளில் தம் கவனத்தை செலுத்தி தம்மைப் பலப்படுத்திக்கொள்ள எத்தனிப்பர். தமக்குரிய கல்விச் செயற்பாட்டை தம்மைச் சுற்றி நடப்பவற்றை அவதானிப்பதன் மூலமும், ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் உதவியுடனும் செயன்முறையாக செய்து பார்த்து மேற்கொள் முயல்வர்.
மேலும் இவ்வாறான பிள்ளைகளின் கையில் வாசிக்கும்படி ஒரு பயிற்சிப் புத்தகத்தைக் கொடுத்தால் “எனக்கு தலை சுற்றுகிறது” , எனக்கு வயிற்று வலியாய் இருக்கிறது என்பர் ஆனால் உண்மை அதுவல்ல ஒரிரு வசனங்களையே திரும்பத்திரும்ப வாசித்துக் கொண்டிருப்பர். பகற் கனவு காண்பர், விளையாட்டுகளில் பந்து பரிமாற்றம் மற்றும் குழுவிளையாட்டுகளை தவிர்ப்பார். உங்கள் இடது கையை உயர்த்துங்கள் என கூறினால் தம் இருகைகளையும் சேர்த்து உயர்த்தவே முனைவர். ஏனேனில் அவர்களால் வலது கை, இடது கை எது என்பதில் குழப்பத்துடன் காணப்படுவர்.
வாசிப்பில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கு பிள்ளைகள் கல்வியில் பயன்படுத்தும் மற்றும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் பாவிக்கப்படும் சாதனங்களில் முன்னேற்றமான மாற்றத்தை எற்படுத்த வேண்டும். அதாவது ஒலி அமைப்பு வசதியை ஏற்படுத்தல், படங்கள் மற்றும் குறியீடுகள் மூலம் விளங்கப்படுத்த முனைதல், ( உதாரணமாக அடுத்த பயிற்சிக்கு செல்க என்பதை தெரிவிப்பதற்கு → என்னும் குறியீட்டைப் பாவிக்கலாம்) பந்தியொன்றை தனியெ வாசித்துக் கொண்டு போகும் போது பாதை எதுவென உணர்வதற்கு பிள்ளையின் கையில் அளவுமட்டம் / சிறுநாடா / கலர் பேனாக்களை கொடுத்து அடையாளமிடும் படி கூறலாம். பிள்ளைகள் வாசிக்கவேண்டிய பாடவிதானத்தை ஆசிரியர்கள் வாய் மொழி மூலமாகவும் கரும்பலகையில் எழுதிக் காட்டியும் விளங்கப்படுத்திய பின் வாசிப்பதற்கு ஊக்குவிப்பது சிறந்தது. மேலும் சிறு சிறு குழுக்களாக மாணவர்களை பிரித்து அவர்களின் வாசிப்புத் திறனை தினந்தோறும் மதிப்பீடு செய்யவேண்டும்.
மேலும் இவ்வாறான பிள்ளைகளிற்குரிய பயிற்சி வினாக்களின் மாதிரியை மாற்றியமைக்கலாம். உதாரணமாக ஒரு கேள்விக்குரிய பதிலை வாய்மொழி மூலம் அளிக்கும் படி சொல்லுதல், விடை எழுதுவதற்குரிய வெற்றிடத்தை பெரியளவில் விடல், வினாவிற்குரிய விடையை வெற்றிடத்தில் எழுதாமல் சரியான விடையைச் சுற்றி வட்டமிட சொல்லுதல் போன்றன சிலவாகும். அத்துடன் வாய்மொழி மூலமான செய்திகள் ஒலி மற்றும் ஒளி அமைப்பு மூலமாக சொல்லப்படும் தகவல்கள், சுவரொட்டிகளினூடான தகவல்களை விளங்கிக் கொள்ள அனுமதித்தலும் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் செயற்பாடகா இருத்தல் வேண்டும்.
இவ்வாறான முன்னேற்பாடான வழிகளிலெல்லாம் தம்மை ஈடுபடுத்தி முன்னேற்றம் கொள்ளும் பிள்ளைகள் தம்பங்கிற்கும் முயற்சிக்கலாமே! உதாரணமாக தன் சக நண்பனை ஒரு பயிற்சிப் பாடத்தை கதைக்க சொல்லவிட்டு தன் பாடக்கொப்பியில் எழுதலாம் மற்றும் கணினி அல்லது வேறு இலத்தரனியல் சாதனங்களின் உதவியுடன் தான் வாசிக்கவேண்டிய சொல்லை ஒலியெழுப்பி தன் முயற்சியாலேயே வாசிப்புத்திறனை முன்னேற்றலாம். சாதாரண மாணவர்களை விட மேலதிக நேரத்தை தம் படிப்பில் செலவழிப்பதன் மூலம் தம் முன்னேற்றத்தைப் பெறலாம்.
பிள்ளையின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இந்நிலைமையை நாம் திருத்திடவேண்டும். இல்லையேல் அவர்களின் இளவயது பராயத்திலும் வாசிப்பு பிறழ்வு நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாக அ,ஆ,இ … அல்லது A, B, C … என்பதை வாசித்தறிவதில் சிரமப்படும் சிறுபிள்ளை தன் பள்ளிப் பருவத்தில் எதிர்பாடனா எழுத்துகளை ( d, b) வாசிப்பதில் திணறும் அதேவேளை. இளம்வயதில் பழமொழிகள், சிலேடைகள் மற்றும் கடிஜோக்ககள் வாசிப்பதில் சிரமப்படுவர்.
ஆகவே வாசிப்பு பிறழ்வு நிலையை சிறுவயதிலேயே மேற்கூறியவாறு கண்டுபிடித்து திருத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகளை சிறந்த மாணக்கர்களாக மாற்றியமையுங்கள்.
“வாசிப்புத்திறன் பிறக்கும் போதே சேர்ந்து வருவதில்லை… ஆனால் எப்படி வாசிப்புதிறனை ஏற்படுத்துவது என்பதை அறிய முயல வேண்டும்.”
சி.சஸ்ரூபி
B.Sc.Nursing