நீரிழிவுக்கு வாய்மூலம் மருந்துகள் உள்ளெடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் யாவை?
- நீரிழிவுக்கான உங்களது மருந்துகள் ஒரு வைத்தியர் மூலம் உறுதிப்படுத்தி பரிந்துரை செய்த மருந்துகளாக இருக்க வேண்டும்.
- ஒரே அளவு மருந்து பலருக்கு பல வித்தியாசமான விளைவுகளைக் கொடுக்க கூடியது. மருந்து உட்கொண்ட பின்பு உங்கள் உடலிலோ, நடத்தையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்.
- வைத்தியர் உங்களுக்கு மருந்தைப் பரிந்துரை செய்யும் போது உங்களது தற்போதைய உடல் நிலை வாழ்க்கை முறை உங்களது தனிப்பட்ட தேவைகள் உங்களுக்கு இருதய, சிறு நீரக கல்லிரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றனவா? தனிமையில் இருப்பவரா? கர்ப்பம் தரித்தவரா? கர்ப்பம் தரிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளவரா? மது அருந்துபவரா? வயதானவரா போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டே மருந்தை பருந்துரை செய்வார். எனவே இவை சம்பந்தமான தகவல்கள் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை வைத்தியருக்கு வழங்கி உதவலாம்.
- உங்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளைத் தனித்தனி சிறிய காற்றுப்புகாத உலர்ந்த போத்தல்களில் போட்டு அவற்றின் பெயர், மில்லி கிராம் அளவு, போடும் நேரங்கள், திகதி போன்றவற்றைக் குறித்து வைப்பதன் மூலம் பாவனைக்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
- நீரிழிவுக்காக மருந்து போடும் நீங்கள் ஒர் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை கைக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்பாராத வகையில் வரும் சிக்கல்களையும் குறைப்பதற்கான வழிகளிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
உதாரணம்
குறைந்த குளுக்கோஸ் நிலை hypoglycaemia
கூடிய குளுக்கோஸ் நிலை Hypeglycaemia - நீரிழிவுக்காக உங்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையில் பணிபுரிகின்றன. சில மருந்துகள் சதையில் பீட்டா கலங்களைத் தாண்டி இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்வதாலும் சில மருந்துகள் தசைகளில் இன்சுலின் எதிர்ப்பு நிலைகளைச் சரி செய்வதாலும் சில மருந்துகள் சிறு குடலில் உணவு செரிமாணம் அடைவதைத் தாமதப்படுத்துவதாலும், வேறு சில மருந்துகள் கல்லீரலில் குளுக்கோஸ் வெளியாகி குருதியில் கலப்பதைத் தாமதப்படுத்துவதாலும், குருதியின் வெல்ல மட்டத்தைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. எனவே உங்களுக்குப் பரிந்துரை செய்யும் மருந்தைப் பொறுத்து அவற்றை எவ்வாறு உள்ளெடுக்க வேண்டும் என்பதை வைத்தியர் அறிவுறுத்துவார்.
- கிளிபென்கிளமைட் Glibenccamide போன்ற மருந்துகள் நீண்ட நேரத்துக்குக் குருதியில் கலந்து செயற்படும்திறன் உடையவையாதலால், இவை குருதியில் வெல்லமட்டத்தை அளவுக்கு அதிகமாகக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மருந்துகளை எடுக்கும் முதியவர்கள், மருந்துகள் உணவு உள்ளெடுப்பதில் ஒழுங்கு அற்றவர்களைக் கண்காணிப்பது அவசியம்.
- (Glipizide) கிளிபிசைட் மருந்தை உள்ளெடுப்பவர்கள் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக எடுப்பது நல்லது. இதன் மூலம் குருதியில் வெல்ல மட்டம் அதிகரிப்பை தடுக்கலாம்.
- கிளைற்றசோன் வகை மருந்துகள் (Glitazones) றொசி கிளித்தரசோன் (Rosigliazone) பொயாக்கிளிதரசோன் (Poigilitazone) ஆகிய மருந்துகளை உணவு உண்ட பின்பு எடுப்பது நல்லது.
- ACARBOSF அகர்போஸ் போன்ற மருந்துகள் மாப்பொருள் உணவுகள் உணவுக் கால்வாயில் முழுமையாகச் செரிமானம் அடைவதைத் தாமதப்படுத்துவதால் குருதியில் வெல்ல மட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவ்வகை மருந்துகளை உணவுக்கு முன்பு எடுக்க வேண்டும்.
- நீரிழிவுக்கு வழங்கப்படும் மருந்துகளில் நீண்ட நேரத்துக்கு தொழிற்படும் மருந்துகளை SR, MR, XR எனக்குறிப்பிட்ட மருந்துகளை தூள்கள் ஆக்கவோ, பற்களால் கடிக்கவோ, உமியவோ கூடாது. அத்துடன் இவ்வகை மருந்துகளை ஒரு கிளாஸ் நீருடன் உள்ளெடுப்பது சிறப்பானது.
- ஒரு சில மருந்துகளைத் தவிர பொதுவாக நீரிழிக்கான மருந்துகளை உணவு உண்பதற்கு முன்பு எடுப்பது ஏற்புடையதாகும். பின்பு உணவு உண்பதைத் தாமதிக்காதீர்கள்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்.
யாழ். போதனா வைத்தியசாலை.
Posted in கட்டுரைகள்