“எத்தனை இறப்புக்களை வைத்தியசாலைகள் கண்டிருக்கும். உயிர் பிரியும் தறுவாயிலும் அதன் பின்னரும் சுற்றி நின்று கதறும் சுற்றத்தினதும் உறவுகளினதும் வேதனையை ஜீரணித்துக் கொள்ள எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதனைச் சொல்கின்றன? இவற்றிலே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இறப்புக்கள் எத்தனை?”
சாவுகள் மலிந்து மனங்கள் மரத்துப் போன பூமியிது. ஓர் உயிரின் முடிவிலே எவ்வளவு துயரங்கள்? எத்தனை கனவுகளின் சிதைவுகள்?
ஏக்கம், கவலை, கோபம், வெறுப்பு விரக்தி என எத்தனை உணர்வுகளின் கொந்தளிப்புக்கள், பெருகிச் செல்லும் இந்த இழப்புக்களை தடுத்திருக்கக் கூடிய இறப்புக்களை தாங்கிக் கொள்வது, சகித்துக் கொள்வது மிகவும் துயரமானதும் கஷ்டமானதுமான அனுபவம் என்பது எவருக்கும் புரியும். இந்த இறப்புக்களை மறைக்கவோ நியாயப்படுத்தவோ முயல்வது மனிதத்துவத்துக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது.
எத்தனை இறப்புக்களை வைத்தியசாலைகள் கண்டிருக்கும். உயிர் பிரியும் தறுவாயிலம் அதன் பின்னரும் சுற்றி நின்று கதறும் சுற்றத்தினதும் உறவுகளினதும் வேதனையை ஜீரணித்துக் கொள்ள எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதனைச் சொல்கின்றன? இவற்றிலே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இறப்புக்கள் எத்தனை?
இளம் மனைவியையும் பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்கவிட்டு மாரடைப்பால் மரணித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? ஈரல் நோய் காரணமாக இரத்தவாந்தியுடன் அனுமதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் எத்தனை பேர்? திடீரென ஏற்பட்ட பாரிசவாதத்தால் நம்மை விட்டு மறைந்துபோனவர்கள் எத்தனைபேர்?
தொழிலுக்கு போகும் பாதையிலே வாகனத்தால் மோதுண்டு மடிந்துபோனவர்கள் எத்தனை பேர்? நஞ்சுண்ட நிலையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் எத்தனை பேர்? சமூக விரோத கும்பல்களினால் சட்டத்துக்குப் புறம்பான விதத்திலே கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? உடல் பருத்து நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் ஏற்பட்டு மரணிப்பவர்கள் எத்தனை பேர்? கலாசார சீர்கேடுகள் காரணமாக சிக்கல்களுக்கு ஆட்பட்டு மனவேதனையுடன் மரணிப்பர்கள் எத்தனை பேர்? சுற்றாடல் மாசடைவதால் தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோய் என்பன ஏற்பட்ட இறந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உறவினர்களின் ஆதரவோ அரவணைப்போ இன்றி அன்புக்கு ஏங்கி மரணித்துப் போகும் முதியவர்கள் எத்தனைபேர்? முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இறப்புக்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு?
இங்கு சாவுகள் மலிந்து போனமை உண்மையிலே யார் செய்த குற்றத்தினால்?
சோறு தீத்துவதை ஒரு சம்பிரதாய சடங்காகவே கொண்டாடி எம்மை சோற்றிற்கும் மாப்பொருளுக்கும் அடிமையாக்கி நோயாளியாக்கிய எமது சமுதாயத்தின் குற்றமா? மக்களுக்கு போதுமான மருத்துவ சுகாதார அறிவை புகட்டத் தவறிய மருத்துவத்துறையினரின் குற்றமா? ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களையும் பானங்களையும் அருமருந்து போல போலியாக விளம்பரம் செய்ய இடமளித்த ஊடகத்துறையினரின் குற்றமா?
உடற்பயிற்சி ஓர் உயிர்காப்பு பயிற்சி என்பதை சிறுவர்கள் மனதிலே பதிப்பிக்கத் தவறிய பெற்றோர்களின் குற்றமா? நோயுற்று வைத்தியசாலைக்கு வரும் பொழுது அதி உச்சக் கவனிப்பு வசதிகளையும் கவனிப்பையும் உறுதிப்படுத்தாக சுகாதாரத் துறையினரின் குற்றமா? உயிர் கொல்லிகளான சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை கடைகளிலே விற்பனை செய்வதற்கு அனுமதித்தவர்களின் குற்றமா? போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாது போன காவல்துறையினரின் குற்றமா?
தீய பழக்கங்களையும் சமுதாய சீரழிப்பு நடவடிக்கைகளையும் எம்மிடையே பரப்ப அனுமதித்துக் கொண்டிருக்கும் எமது சமுதாயக் கட்டமைப்பின் குற்றமா? ஒருவரை பசியாத பொழுதும் உண்ணுமாறு வற்புறுத்துவதை ஓர் உபசரிப்பு முறையாகக் கருதும் எமது கலாச்சாரத்தின் குற்றமா?
எமது மக்களிடையே அன்பு, அமைதி, ஆதரவு, மன்னிக்கும் மனோபாவம், துயர் துடைப்பு, தியானம் போன்ற நல்ல விடயங்களை வேரூன்ற வைக்கத் தவறிய எமது மதங்களின் குற்றமா? பொன் கொழிக்கும் விளைநிலத்திலே உயிர்கொல்லிகளான புகையிலையை பயிரிட்டும் நஞ்சு தெளிக்க்பபட்ட மரக்கறி, பழ வகைகளை சந்தையிலே விற்பனை செய்தும் வருகின்ற விவசாயிகளின் குற்றமா? சந்து பொந்துகள் எங்கும் சாராயக் கடைகள் திறக்க அனுமதித்தவர்களின் குற்றமா?
சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிய கற்றறிந்தவர்களின் குற்றமா? சமுதாய சீர்கேடுகளுக்கு வழிகோலும் ரி.வி தொடர் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி இளம் சமுதாயத்தினரையும் அதற்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களின் குற்றமா? தெருவிலே வாகனம் செலுத்துவதற்கு தகுதி அற்றவர்களையும் தகுதி அற்ற வாகனங்களையும் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்கும் வீதி ஒழுங்குக்குப் பொறுப்பானவர்களின் குற்றமா?
தவிர்க்கப்படக் கூடிய சாவுகளின் அடிப்படைக் காரணங்களை ஆராய முற்படும் பொழுது குழப்பமே மிஞ்சுகிறது. இவற்றை நிவர்த்தி செய்ய எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கே முடிப்பது? என்று தடுமாற நேர்கிறது. இவ்வாறான மரணங்கள் தொடரத்தான் பேரின்றனவா?
மனிதனது மூளையில் சிந்தனை ஓட்டமும் தொழிற்பாடும் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் உண்மையிலேயே விசித்திரமானது. மனித மனமானது பிறர் விடும் தவறுகளை துல்லியமாக அடையாளப்படுத்துவதில் நிபுணத்துவம் மிக்கதாகவும், தான் விடும் தவறுகளை புரிந்து கொள்ளும் அல்லது ஏற்றுக் கொள்ளும் வல்லமையில் பின் தங்கியதாகவுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இயற்கை பூமியில் தன்னை நிலை நிறுத்துவதற்கும், நல்ல முறையில் தப்பிப் பிழைப்பதற்கும் தான் செய்வது சரி என்று நிறுவ வேண்டிய தேவை இருக்கிறது. இதனை உயிர்களின் கூர்ப்பின் தக்கன பிழைத்தல் என்ற கோட்பாட்டின் மூலம் உறுதி செய்ய முடியும்.
இதனை மனித வாழ்க்கைக்கான போராட்ட யுத்தி என்றும் சொல்லலாம். மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்ட இந்த தான் விடும் தவறுகளை தானே புரிந்து கொள்ளத் தெரியாத தன்மையே சுகாதார மேம்பாட்டுக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.
மதக்கோட்பாடுகளும் மனித நாகரிக வளர்ச்சியும் மனிதனை சரியான நீதியான முறையிலே சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன. நாம் விடும் தவறுகளையே நாமே அடையாளப்படுத்தி எம்மை நாமே திருத்திக் கொள்ள முயலும் பயிற்சியானது உண்மையிலேயே மிகவும் கடினமானது. ஆனால் இதுதான் மனிதனை மனிதத்துவம் மிக்கவனாக மாற்றும் ஒரு முக்கியமான இயல்பாக அமையும். இந்த மனிததத்துவ இயல்பு எம்மிலே வளர்ச்சி காணும் பொழுது பல முடிச்சுக்கள் தாமாகவே அவிழ்ந்துவிடும்.
அந்த வகையிலே நாம் சிந்திக்கும் பொழுது தவிர்க்கப்படக் கூடிய மரணங்களை தவிர்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் எம்மை மாற்றிக் கொள்வதற்கு நிறைய இடம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. நாம் மற்றவர்களை திருத்த முயல்வது போலவே எம்மையும் சற்று மாற்றிக்கொள்ள முயல்வோம். அதன் மூலம் பல அநியாய மரணங்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ந்து தவிர்கக் முடியும்.
120 வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் 120 வருடங்களின் பின் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்கப்போவதுமில்லை. இது சர்வ நிச்சயமானது. இருந்த போதும் மனிதன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் காலத்தை கூட்டுவதற்காகவே நாம் போராட வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக நாம் அனைவரும் சிந்திப்பதற்கும் செய்வதற்கும் நிறையவே இருக்கின்றன.
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்திய சாலை.