“எனக்கு இரவில் தூண்டா நித்திரையில்லை, படுத்து அங்காலையும் இஞ்சாலையும் உருண்டு கொண்டிருப்பன் உடன் விடிஞ்சிடும் பேந்தென்ன பகலெல்லாம் ஒரே சோர்வாய்க் கிடக்கும் என்னென்டு வேலை செய்யிறது..”
“எனக்குச் சும்மா ஐந்து வருஷமாக நித்திரையில்லை கண்ணிமை மூடுறதேயில்லை வாழ்க்கை வெறுத்துப் போச்சு நித்திரையில்லாமல் என்ணெண்டு இருக்கிறது.”
நிம்மதியாய் நித்திரை கொள்ளுமவம் எண்டு படுத்தா அது வந்தாத்தானே படுத்து நீட்டி நிமிர்ந்து கிடக்கிறது தான் ஒருகண் நித்திரையில்லை.”
இப்படி பல கூற்றுக்களை எங்கள் செவிகளில் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருக்கும்… கேட்டிருப்போம் அல்லது நாங்களே இப்படியான கூற்றுக்களைக் கூறும் நபராக இருப்போம்…. என்ன… எங்களுடைய பிரச்சினையை இவர் என்னெண்டு தெரிஞ்சு சொல்லுறார் எண்டு யோசிக்கிறீங்களா? அது ஒண்டும் பெரிய விஷயமல்ல உலகத்தில பெருமளவான ஆட்களுக்கு நித்திரைக்குழப்பம் இருக்கு எண்டு ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கு. இது ஒரு பொதுவான பிரச்சினை எனவே இப்பிரச்சினைக்கு உட்பட்டு வெளிவந்தவர்களாகவோ அல்லது உட்பட்டு உள்ளவர்களாகவோ நாங்கள் இருப்பது இயல்பானது. இந்தப் பொதுவான பிரச்சினையைத் தங்களுடைய எதிர்மறையான எண்ணங்களால் – நினைப்புகளால் தங்களுக்குரிய சிறப்பான பிரச்சினையாக மாற்றுபவர்களும் இருக்கின்றார்கள். தாங்களே பின்னும் வலைக்குள் தாங்களே சிக்கிக் கொள்ளும் அப்பாவிகள் அவர்கள்.
உறக்கம் – தூக்கம் எமக்கு அவசியமான ஒன்று. அது எமது உடலுக்கும் உளத்திற்கும் ஓய்வு கொடுக்கிறது. இந்த ஓய்வின் மூலம் உடல் தன்னைப் புத்துயிர்ப்புச் செய்து கொள்ளுகின்றது. எனவே எமது வாழ்க்கையில் தூக்கம் முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்கிறது. எமது ஆயுள் 100 வருடங்கள் என வைத்துக் கொண்டால் நாம் 25 வருடங்கள் தூக்கத்தில் கழிக்கின்றோம். பகலெல்லாம் பாடுபட்டு வேலை செய்யும் எமக்கு ஒய்வு கொள்ளுவதற்காக உறக்கம் கிடைக்கின்றது. அது எமது அதிஷ்டம் ஆனால் அந்த அதிஷ்டத்தை நாம் பல இரவுகள் தவற விட்டிருப்போம் தற்பொழுதும் தவறவிட்டுக் கொண்டிருப்போம் கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லையே என்று. ஏன் இந்த நிலை?
மனிதர்களாகப் பிறந்த எல்லோரும் தம் வாழ்நாளில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ இந்த அதிஷ்டத்தை தூக்கத்தை தவற விடுகின்றனர். ஆனால் சிலர் தவறவிட்ட நாளை எண்ணியபடி இன்றைக்கும் தவறவிட்டு விடுவோமோ அல்லது நாளைக்கும் இப்படித்தான், இது அகப்படாமல் போகப் போகிறதோ என்ற கவலையால், வெறுப்பால் இன்றைக்கு எப்படியாவது அதிஷ்டத்தை தூக்கத்தை அடைந்தே தீர்வது என்ற நினைப்போடு முனைப்போடு படுக்கைக்குப் போகின்றனர். அது தவறிவிடுகின்றது. ஏன் … உறக்கம் மனத்தோடு சம்பந்தப்பட்டது. நீங்கள் எதைத் தேடுகின்றீர்களோ அதற்கு எதிரானதையை மனது உங்களுக்கு வழங்குகின்றது. நீங்கள் சந்தோஷத்தை தேடினால் அது உங்களுக்கு எட்டாமல் போய்க் கொண்டேயிருக்கும் அது போல் நீங்கள் தூக்கத்தை தேடினால் இது தூக்கமின்மையைப்பரிசாகத் தரும். ஒரு உதாரணம் மூலம் இதை விளங்கிக் கொள்வோம். சிவராத்திரி விரதத்தை எடுத்துக் கொள்ளுவோம் அன்றையநாள் நித்திரை முழித்திருக்க வேண்டும் என்பது விதி நித்திரை முழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நித்திரை முழிப்பதற்குரிய முயற்சிகள் பலவற்றை நாங்கள் செய்வொம். ஆனால் அன்றைய இரவு எங்களுக்கு நித்திரைத் தூக்கம் மிகுதியாக உண்டாகும். நித்திரை கொள்ளவேண்டும் என்ற, நித்திரையை நோக்கிய தேடல் எமக்கு அதனைத் தருவதில்லை. அதற்கு எதிரான நித்திரை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற தேடலும் – எண்ணமும் அதற்கான முயற்சியும் எமக்கு நித்திரையை உருவாக்கின்றது. எனவே நித்திரை கொள்ளவேண்டும்? அதைத் தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்.
இதனை விடத் தூக்கத்தைத் தடுக்கும் காரணைிகள் பல இருக்கின்றன. அவற்றை உடலியல்சார்ந்த காரணிகள் உளவியல்சார் காரணிகள் என இருவகைக்குள் அடக்கலாம். மேலே சொல்லப்பட்ட காரணம் உளவியற்காரணிக்குள் அடங்கும். எமது சூழலில் ஏற்படும் நெருக்கீடுகள் எமது மனத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான எண்ணங்களால், உணர்வுகளால் எமது தூக்கம் தொலைந்து விடுகின்றது. குறிப்பிட்ட அந்த நெருக்கீடுகளில் இருந்து விடுபடும் போது தூக்கம் இயல்பாகிவிடுகின்றது.
முசுகுந்ததச் சக்கரவர்த்தி என்ற அரசர் (இவர் கதை புராணங்களில், இதிகாசங்களில் வருகின்றது) அவர் தனது நாட்டைச் சிறப்பாக ஆட்சிபுரிந்து வந்தார். அவர் முகம் குரங்கின் முகமாக இருந்ததால் அவர் முசுகுந்தச்சக்கரவர்த்தி (முசு – குரங்கு) என அழைக்கப்பட்டார். (முகம் ஏன் குரங்கினுடையதாக இருக்கின்றது என்பதற்கும் கதையிருக்கிறது புராணங்களில் கண்டு கொள்க) அவர் மிகுந்த பலவான், ஒரு சமயம் இந்திரன் தனக்கு அசுரர்கள் ஏற்படுத்தும் துன்பத்தை பொறுக்க மாட்டாமல் அதனை வெல்வதற்கு முசுகுந்தச் சக்கரவர்த்தியின் உதவியை நாடுகின்றான். இவரும் அதனை மறுக்காமல் இந்துரனுடன் சென்று அவனுக்கு உதவியா நின்று பல நாட்கள் அசுரர்களோடு யுத்தம் செய்கின்றார். யுத்தம் முடிந்தது. இவர் தனது நாட்டுக்குப் புறப்படுகின்றார். இந்திரன் இவருக்குப் பல சன்மானங்களைக் கொடுத்து வரம் ஏதும் கேட்கும் படி கேட்டுக்கொள்கின்றான். அதற்கு இவர் இங்கு வந்ததில் இருந்து நான் உறங்கவில்லை அதனால் கொஞ்சம் அமைதியாக உறங்க வேண்டும். அதை ஒருவரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வரம் தரவேண்டும் என்று கேட்க இந்திரன் அந்த வரத்தைக் கொடுத்து தங்கள் நித்திரையை யாராவது குழப்பினால் நீங்கள் விழித்து அவனைப்பார்த்த கணமே அவன் எரியுண்டு போவான் என்றும் சொல்லுகின்றான். அவர் விடை பெற்றுக் கொண்டே வந்து ஒரு அமைதியான ஆட்கள் ஆரவாரமற்ற இடத்தில் உள்ள மலைக்குகையில் ஒன்றில் படுத்து நித்திரை கொள்கின்றார்.
கிருஷ்ணனுக்கு ஒரு பகைவன் அவன் பலவருடகாலமாக அவருக்குத் தொல்லை கொடுத்து வந்தான் அவனைக் கொல்ல அவரால் முடியவில்லை காலம் பார்த்துக் கொண்டிருந்தார். இம்முறையும் அவன் பெரும் படையோடு வந்து தாக்குகின்றான். கிருஷ்ணர் அவனிடம் தோற்றுத் தப்பி ஒடுபவர் போல ஒடுகிறார் ஒடி முசுகுந்தச் சக்கரவர்த்தி படுத்திருக்கும் இடத்துக்கு வருகின்றார் வந்து அந்தக் குகைக்குள் புகுந்து ஒளித்துக் கொள்ளுகின்றார். பின் தொடர்ந்து வந்த பகையரசன் குகைக்குள் நுழைகின்றான் அங்கு ஒருவர் படுத்திருப்பதைப் பார்க்கிறான். கிருஷ்ணர் தான் மாறுவேடத்தில் படுத்திருப்பதாக எண்ணிக்காலால் உதைகின்றான். முசுகுந்தச் சக்கரவர்த்தி திடுக்கிட்டு எழும்பி அவனைப்பார்க்கிறார் அவர் எரிந்து போகின்றான். பின்னர் கிருஷ்ணர் அவர் முன்வந்து நடந்ததைச் சொல்கின்றார். அதிககாலம் தான் உறங்கி விட்டதாக அவர் உணர்கின்றார். கிருஷ்ணரை வணங்குகின்றார். இப்படி அந்தக்கதை செல்லுகின்றது.
இதையேன் இங்கு சொன்னேன். புராணத்தின் அம்சங்களை, அற்புதங்களை எல்லாம் விட்டு ஒரு கதையாகப் பார்த்தால் நாம் மேலே சொன்ன விடயங்கள் இங்கு பொருந்தியிருப்பதை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள். எப்படி? முசு குந்தச் சக்கரவத்தி இந்திரனுக்காகச் சென்று ஒரு போர்ச்சூழலில் நெருகீட்டுக்கு மத்தியில் வாழவேண்டி நேர்ந்தது. அவர் கூறகின்றார் போர்வேளையில் என்னால் உறங்கமுடியவில்லை ஆனால் அவர் உறங்கியிருப்பார். இப்போரை வென்று எப்படியாவது இந்திரனை காப்பாற்ற வேண்டும், தனது கடமையை நன்கு முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது உறக்கத்தைப் பார்த்திருக்கும். கருமமே கண்ணாயினார் நிலை. இதனால் உறங்கினாலும் உறங்கியதாக அவரால் உணரமுடியவில்லை. எங்கள் வாழ்க்கையில் இதனை நாம் அனுபவித்திருப்போம். போர் முடிந்தது நெருக்கீடு தீர்ந்தது. உறக்கம் வந்தது வரம் கேட்ட போது என்னை நிம்மதியாக உறங்க விடுங்கள் என்ற தொனியில் உறக்கத்தைக் குழப்பாமல் இருப்பதற்கு வரம் கேட்கின்றார். நெருக்கீடுகளுக்குள் சிக்கியிருந்து அது விடுபட்டதும் வரும் ஆனந்தமான உறக்கத்திற்கு இணையாக உலகத்தில் வேறு என்ன இருக்கின்றது. அமைதியான இடத்தை தெரிந்து எடுத்து உறங்குகின்றார். நிம்மதியாய் ஒருவர் உறங்கும் போது அதைக் கெடுப்பவர் தெய்வமாக இருந்தாலும் கோபம் பொத்துக் கொண்டு வரும் இதை அறிந்த கிருஷ்ணர் தானே அவரை எழுப்பித் தரிசனம் கொடுக்காமல் தன் பகைவனை விட்டு எழுப்பி அவனையும் அழித்து அவருக்குத் தரிசனம் கொடுக்கிறார். இன்னொரு வழியில் சிந்தித்தால் முசுகுந்தச் சக்கரவைர்த்தியின் மனத்தில் இருந்த நெருக்கீடுகள் அவர் நிம்மதியாக உறங்கி விழிக்கின்றபோது அசுரன் எரிந்தது போல எரிந்தழிய மனம் அமைதி பெறுகின்றது அமைதி பெற்ற மனம் சந்திக்கும் ஒவ்வொருவரும் தெய்வமே என்பதை உணர்த்த அடுத்து அவர் கிருஷ்ணரைச் சந்திக்கின்றார் எனவும் எனக்கொள்ளலாம்.
இப்படி ஒருவருடைய வாழ்கை நெருக்கீட்டுக்கு உட்பட்டிருக்குமானால் அவர் உறக்கத்திஙல் நித்திரை பிரச்சினை ஏற்ப்பட்டு விடுகின்றது. அவர் துண்டாக உறக்கம் கொள்வதில்லை என்பதைவிட தான் கொள்ளும் உறக்கத்தால் திருப்தி அடைவதில்லை இதனால் தொடக்கத்தில் சொல்லியது போல் எனக்கு 5 வருடங்களாக நித்திரையில்லை போன்ற கூற்றுக்கள் வெளிவருகின்றன.
இவற்றை வெல்ல என்ன செய்வது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பே அதற்கு ஒரு எளிமையான வழி ஒன்று இருக்கின்றது. அது என்ன? அது தான் சாந்தியாசனப் பயிற்சி இதனை சவாசனம். தளர்வுப்பயிற்சி என்றும் அழைப்பர். யோகாசனம் செய்தபின் இறுதியில் செய்யப்படும் பயிற்சியாக இது விளங்குகின்றது. இப்பயிற்சி எமது மனத்தினையும் உடலினையும் எப்போதும் விழிப்பு நிலையில் (உசார்) வைத்திருக்க உதவுகின்றது. இதனை நல்ல முறையில் பயில்வதன் மூலம் எமக்கு ஏற்படும் நெருக்கீடுகளில் இருந்தும் பதகளிப்பில் இருந்தும் எம்மைப் பாதுகாப்பதுடன், நிம்மதியான உறக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நா.நவராஜ்
உளநலப்பிரிவு
யாழ் போதனா வைத்தியசாலை