இது தான் இவ்வருட உலக சிறுவர் தினத்துக்கான தொனிப் பொருள். உலக சிறுவர் தினம் இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்ரோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. எல்லோரும் சிறுவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது பாதுகாப்பாக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார்கள். சிறுவர்களின் பாதுகாப்பு எனக் கூறும் போது. அனைவராலும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் சிறுவர் தொழிலாளிகள் பற்றியும் அவற்றைத் தடுக்க வேண்டிய வழிகள் பற்றியும் பேசப்படுகிறது. அவற்றுக்கு மேலாக, எமது வீட்டிலேயே எம் சூழலிலேயே எம் குழந்தைகளையும் சிறார்களையும் சிறு சிறு விடயங்களில் பாதுகாக்க தவறிவிடுகின்றோம். அந்தச் சின்னச் சின்ன தவறுகள் சில சமயங்களில் அவர்களைப் பெரியளவிலும் பாதிக்கக் கூடும்.
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போதே அதை பாதுகாப்பாக வளர்க்க பல வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிலும் மிகமுக்கியமானது, தாயினுடைய போசாக்கு பெண்களின் போசாக்கு அவள் கர்ப்பமாவதற்கு முன்னரே அவளது போசாக்கு நிலை திருப்திகரமானதாக இருந்தால் தான், அவளால் ஒரு சுகதேகியான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அதே போல் குழந்தை உருவாகும் முன்னரே போலிக் அசிட் எனப்படும் விற்றமின்களை கர்ப்பமடைய முன்னரிலிருந்து கர்ப்பகாலம் முழுவதும் உட்கொள்ள வேண்டும். அதனை எமது சமூகத்தில் எத்தனைபேர் சரிவர கடைப்பிடிக்கிறார்கள். கருவில் வளரும் குழந்தையை பாதுகாக்க ஒழுங்காக சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று தகுந்த வைத்திய ஆலோசனைகளைப் பெற்று சுகமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும். ஆனால் இவற்றை பின்பற்றாமல் எமது சமூகத்தில் சிலர் கவனயீனமாக குழந்தையை வீட்டிலோ அல்லது தெருவிலோ பெற்று அதனை வீசும் நிகழ்வுகளும் நிகழ்கின்றன.
ஒரு குழந்தை பிறந்தபின் அக்குழந்தையை நோய் நொடிகளின்றி வளர்ப்பதற்கு எல்லோருக்கும் விருப்பம் தான். ஆனால் எம்மில் எவ்வளவு பேர் தகுந்த சுகாதார முறைகளைப் பின்பற்றுகிறார்கள்? புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு நோய்கள் தொற்றாமல் இருக்க சுகாதார முறைப்படி பராமரிக்க வேண்டும். குறிப்பாக குழந்தை பராமரிப்பின் போது கைகழுவுதல் போன்ற நல்ல பழக்கங்களை எத்தனைபேர் பின்பற்றுகிறார்கள்? அதுமட்டுமல்லாமல் அளவுக்கதிகமானோர் பச்சிளம் பாலகர்களை தூக்கும் போது அரவணைக்கும் போது நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளின் போசாக்கில் மிக முக்கியமானது தாய்ப்பாலூட்டலாகும். தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் பற்றி பலரும் அறிந்திருந்தும் தமது குழந்தைகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு தவறிவிடுகிறார்கள். பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தனித் தாய்பாலே குழந்தையின் ஆகாரம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. தனித்தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்க பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. எனினும் சிலர் குழந்தைக்கு தாய்பாலைத் தவிர சுடுநீர், சீரகத் தண்ணீர், கற்கண்டுத் தண்ணீர் என பலதையும் பருக்கி குழந்தைக்கு ஆபத்துக்களை உண்டாக்குகின்றனர்.
ஒரு குழந்தைக்கு ஆறு மாதங்களின் பின்னர் முறையாக மேலதிக (மிகை நிரப்பு) ஆகாரங்களை வழங்க வேண்டும். அதற்காக எமது சூழலில் கிடைக்கும் இயற்கையான உணவுகளை எமது கலாசார பழக்க வழங்கங்களின் படி வழங்குவதற்கான தகுந்த முறைகளை சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றார்கள். ஆனால் பலர் அதனைப் பின்பற்றுவதில்லை மாறாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கிறனர். இவாவாறான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது குழந்தைகளைச் சரியாக பாதுகாக்கின்றோமா எனச் சிந்திக்க வேண்டும்.
எமது குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க நல்ல சுகாதாரப்பழக்கங்களை பின்பற்றுதலும், உரிய வேளைகளில் நோய்த் தடுப்பு ஊசிகளை வழங்குவதும் முக்கியமானதாகும். எமது நாட்டில் அனேகமான குழந்தைகள் சரியாக நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றாலும் ஒரு சில பெற்றோர் முறைப்படி நோய்த்தடுப்பு ஊசி வழங்க தவறிவிடுகின்றனர். அதே போல் பொதுவான தொற்று நோய்களான வயிற்றோட்டம், சளிக்காய்ச்சல் என்பவற்றிலிருந்து எமது குழந்தைகளைக் காப்பாற்ற முறைப்படி கைகழுவுதல், சுத்தமான கொதித்தாறிய நீரருந்துதல் சுகாதாரமான உணவுகளை வழங்குதல் போன்ற சுகாதார முறைகளை பின்பற்றத் தவறுகிறார்கள்.
எமது குழந்தைகளையும் சிறுவர்களையும் பிற்காலத்தில் ஏற்படக் கூடிய நீரிழிவு, குருதியழுத்தம், அதிக எடை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் தேகப் பயிற்சிகளையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஆனால் பெரும்பாலான சிறுவர்கள், வர்த்தக ரீதியான உடன் தயாரிப்பு உணவுகளையும் நொறுக்குத் தீன் பண்டங்களையும் உட்கொள்வதுடன் உடலுறுதியை வழங்கக் கூடிய விளையாட்டுகளில் நாட்டமின்றி காணொலி விளையாட்டிலும் கணினி முன்னாலும் தொலைக்காட்சி முன்னாலும் நேரத்தை செலவழிக்கின்றனர். எனவே பெற்றோராகிய எமக்கு எமது இளம் பிள்ளைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை உண்டல்லவா?
இவ்வாறே சிறுவர்களையும் குழந்தைகளையும் விபத்துகளிலிருந்து பாதுகாத்தல் பெரியவர்களுடைய கடமையாகும். குழந்தைகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துக்கள் பெரியவர்களின் அலட்சியத்தினால் வீட்டினுள்ளேயே ஏற்படுகின்றன. உதாரணமாக மண்ணெண்ணெய் போன்ற நச்சுப் பதார்த்தங்களை அருந்துதல், நீரில் மூழ்குதல், தீக்காயங்கள் போன்றனவாகும். பெற்றோர் தகுந்த முன் அவதானங்களை கையாளுவதன் மூலம் இவ்வாறான விபத்துக்களைத் தடுத்து சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
குழந்தைகளதும் சிறுவர்களதும் உடல் உள வளர்ச்சிக்கு முக்கியமானவற்றில் ஒன்றுதான் பெரியோர் செலுத்தும் அன்பும் பாசமும், இன்றைய அவசர உலகில், அனேகமான பெற்றோர் தமது குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் அன்போடும் பாசத்தோடும் கதைத்துப்பேசி அவர்கள் மனநிலைக்கேற்ப அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நேரமில்லாதுள்ளது. மேலும் சிறுவர்களுக்கும் மேலதிக வகுப்புக்கள் போன்றவற்றாலும் தமது பெற்றோருடன் குடும்பமாக மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியாதுள்ளது. இதன் விளைவாக பல சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள்.
இறுதியாக பலாராலும் இன்று பேசப்படும் சிறுவர் துஷ்பிரயோகங்களும், சிறுவர் உரிமை மீறல்களும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு மிக அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறுவர் வாழும் வீட்டினுள்ளேயே அல்லது அயலில் தான் நடக்கின்றன. பெற்றோர், பாதுகாவலர் சரியான அவதானத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் போது சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் குறைவடையும். சில சந்தர்ப்பங்களில் வேலியே பயிரை மேய்வதுபோல் சிறுவர்களின் பாதுகாவலர்களாலேயே இவை நடந்துவிடுகின்றன. இவை பற்றி செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம்.
அவற்றைத்தடுக்க கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனினும் அன்பும் கருணையும், குழந்தை வளர்ப்பு, சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை பற்றிய அறிவும் எல்லாப் பெற்றோருக்கும் வளர்ந்தோருக்கும் உண்மையில் உருவாகினால் வருங்காலச் சந்ததியினரான குழந்தைகளும் சிறுவர்களும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படுவார்கள்.
மருத்துவர்.
ந.ஸ்ரீசரணபவானந்தன்.
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.