உலகை அச்சுறுத்திவரும் இபோலா எனப்படும் வைரஸ் தொற்று மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஏனைய நாடுகளிற்கு பரவி வருகின்றது. இந்நிலையில் 2014 பங்குனி மாதத்திலிருந்து தற்போது வரை 1000இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டும் அதில் 700இற்கும் மேற்ப்பட்ட இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு. இரத்தம், வியர்வை, போன்ற உடற்திரவங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் புழுங்கிய இடங்கள் மற்றும் பொருட்களின் வழியாகவும் இக்கிருமி பரவுகின்றது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தோன்றும் இவ்வைரசு தொற்றானது ஈற்றில் உடலுக்குள்ளேயே இரத்தக்கசிவு ஏற்பட்டு உடல் உறுப்பை செயலிழக்கச் செய்யும் நிலையை ஏற்படுத்தும். இக்கிருமி தொற்றியவர்களில் 90 வீதமானோர் உயிரிழக்க நேரிடும்.
எமது அண்டை நாடான இந்தியாவில் புதுடில்லியிலும் இந்நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.