எவ்வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மலச்சிக்கல் காணப்படுகின்றது. ஒருவர் தனது வழமைக்கு அதிகமான நாட்கள் மலங்கழிக்கமுடியாமல் இருக்கும் போதோ அல்லது மிகக் கடினமான மலத்தை கழிக்கும்போதோ அல்லது முழுமையாக மலங்கழிக்க முடியாமல் இருக்கும் போதும் மலச்சிக்கல் எனக் கருதப்படுகின்றது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையே அதாவது போதியளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, போதியளவு நீர் குடிக்காமை, போதியளவு உடற்பயிற்சியின்மை மற்றும் மலங்கழிக்க வேண்டிய தேவை ஏற்படுமிடத்து அதனை பிற்போடுதல் போன்றவையே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்களாகும்.
உளவியல் பிரச்சினைகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம் நீண்டகால மலச்சிக்கல் சில நோய்களிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உதாரணமாக பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவுநோய், பார்கின்சன் நோய் தைரொட்சின் குறைபாடு, மன அழுத்தம், போன்றவை, சில மருந்து குழிகைகளின் பக்கவிளைவாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம்.
நீண்டகாலமாக மலச்சிக்கல் காணப்படுமிடத்து அதனால் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மல அடைப்பு திரவ மலக் கசிவு, மூலநோய் போன்றன அவற்றுள் சிலவாகும்.
இடைக்கிடையே குறுகிய கால மலச்சிக்கல் ஏற்படுமாயின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். அவையாவன அதிக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை (பழங்கள், மரக்கறி, கீரைவகை) சேர்த்தல், போதியளவு நீர் (நாளொன்றுக்கு 1.5 லீற்றர் தொடக்கம் 2 லீற்றர் வரை) அருந்துதல், தினம்தோறும் உடற்பயிற்சி மற்றும் மலங்கழிக்க வேண்டிய உந்துதல் ஏற்படும் நேரத்தில் தாமதிக்காமல் மலங்கழித்தல் என்பவையாகும்.
நீண்டகால மலச்சிக்கல் காணப்படுமிடத்து அல்லது காய்ச்சல் மற்றும் வயிற்றுவலியுடன் ஏற்படுமிடத்து அல்லது மலத்துடன் குருதி கலந்து வெளியேறமிடத்து வைத்திய ஆலோசனையை நாடுவது அவசியமாகும்.
Dr.சி.சகிலா
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை.