ஓர் புதிய குடும்பமானது திருமண பந்தத்தின் மூலம் உருவாகின்றது. அந்த வகையில் அழகான குடும்பமொன்றை உருவாக்குவதற்கு தகுந்த வயதில் திருணம் செய்து கொள்வது அவசியமாகும். அத்துடன் குடும்பமொன்றை நிர்வகிப்பதற்கு தேவையான கல்வியறிவையும் பொருளாதார வசதியினையும் ஈட்டிக்கொள்ளவும் வேண்டும் பெண்ணின் கருத்தரிக்க சிறந்த வயது எல்லை 18 தொடக்கம் 35 வயது வரையாகும் அதற்கேற்ற வகையில் திருமண வாழ்க்கையினை ஆரம்பித்தல் சிறந்ததாகும்.
திருமணத்தின் பின்னான முக்கிய தீர்மானம் முதற் குழந்தைபற்றியதாகும். குழந்தையின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அக்குடும்பத்தின் உடல் உள ஆரோக்கியம் இன்றியமையாததாகும். அப் பெண் கருத்தரிக்க முன்பிருந்தே அதாவது திருமணபந்தத்தில் இணைந்த காலம் தொடக்கம் போலிக்கமிலம் ( Folic Acid) உட்கொள்ளுதல், கருத்தரிக்கும் குழந்தையின் மூளை முண்ணான் விருத்திக்கு அவசியமாகும். வேறு ஏதேனும் உடல் உள நலக்குறைவுடைய பெண்கள் கருத்தரிக்க மன் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். திருமணமாகி இரண்டு வருடங்களிற்கு மேல் உங்களின் உங்களின் முதற் குழந்தை கருத்தரிக்கவில்லையாயின் அதற்கு மருத்துவ ஆலோசனையை பெற்று உங்களை பரீட்சித்துக் கொள்வது சிறந்ததாகும். பிள்ளை பெற இயலாதவர்கள் தத்தெடுத்தல் பற்றியும் கருத்திற்கொள்ளலாம்.
தாமதமாகி திருமணம் செய்துகொள்பவர்கள் முதற்குழந்தையை கூடிய விரைவில் பெற்றுக்கொள்வதன் மூலமும் இருகுழந்தைகளுக்கிடையிலான இடைவெளியை இரு வருடங்களாக குறைத்துக்கொள்வதன் மூலமும் நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான ( உதாரணம் 4 குழந்தைகள்) குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்காவிடின் வைத்திய ஆலோசனையை நாடவேண்டும்.
அடுத்தடுத்த இரு குழந்தைகளுக்கிடையிலான சிறந்த இடைவெளி 2 – 5 வருடங்களாகும். இவ் இடைவெளிக்குள் அடுத்த குழந்தையினை பெற்றுக்கொள்ளத் தயாராகவேண்டும். இவ் இடைவெளியை பேணுவதற்கு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை (Family Planning Methods) பயன்படுத்தலாம். அவை பற்றி பின்னர் வரும் பாகமொன்றில் விரிவாக பார்க்கலாம்.
தொடரும்….