விசர்நாய்க்கடியினால் உலகளாவிய ரீதியாக ஒவ்வொரு வருடமும் 55000 மக்கள் இறக்கின்றார்கள். 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் 55 மரணங்கள் விசர்நாய்க்கடியினால் ஏற்ப்பட்டுள்ளது. விசர்நாய்க்கடியினால் ஏற்படும் மரணம் 100வீதம் தடுக்கப்படக்கூடியதே.
விசர்நாய்க்கடி நோயானது ரேபீஸ் (Rabies) எனும் வைரசின் மூலம் ஏற்படுகின்றது. இவ் வைரசானது மனிதனின் நரம்புத்தொகுதியை செயலிழக்கச் செய்வதன் மூலமே மரணத்தை விளைவிக்கின்றது. இது விலங்குகளின் மூலம் பரவப்படும் ஒருநோயாகும். இவ்வைரசானது முலையூட்டிகளில் இந்நோயை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் மனிதன் மற்றய முலையூட்டிகளிடமிருந்து இவ்வைரசினை விபத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றான். அதாவது ரேபிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான விலங்கு கடிப்பதாலோ அல்லது அதன் உமிழ்நீர் நனைந்த நகங்களினால் கீறுவதாலோ, மென்சவ்வுகளில் அல்லது திறந்த காயங்களில் நக்குவதனாலோ தொற்றுக்குள்ளான விலங்கின் காய்ச்சப்படாத பாலை குடிப்பதனாலோ மனிதன் அவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றான்.
விசர்நாய்க்கடி நோய்க்கான குணங்குறிகள் தோன்றியபின் மரணம் அண்ணளவாக 100வீதம் நிச்சயமாகிவிடுகிறது. இக்குணங்குறிகள் தோன்றுவதற்கு 1- 3 மாதங்கள் எடுக்கும். சிலசந்தர்ப்பங்களில் சில கிழமைகளிலோ அல்லது சில வருடங்கள் கழித்தோ ஏற்படலாம்.
நீர்வெறுப்பு நோய் தொற்றுக்குள்ளான விலங்குகளை இனங்கண்டுகொள்வதன்மூலமும், விலங்குக்கடியிலிருந்து விலகியிருப்பதன் மூலமும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கு வருடந்தோறும் நீர்வெறுப்புநோய் தடுப்பூசி போடுவதன் மூலமும் நாம் இந்நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து விலகியிருக்கலாம். 95 வீதம் நோய் நாய்கள் மூலமே தொற்றுகின்றன.
தொற்றுக்குள்ளான விலங்குகளை அவற்றின் வழமைக்கு மாறிய நடவடிக்கை வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வடிதல், குரல் மாற்றம் என்பன மூலம் அறிந்து கொள்ளலாம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும், உறங்கிக்கொண்டிருக்கும் மற்றும் குட்டிகளுடன் இருக்கும் நாயை தொந்தரவு செய்யாதிருப்பதன் மூலமும் நாய் மீது எதையும் எறியாதிருப்பதன் மூலமும் அதன் கண்களை நேருக்கு நேராக பார்க்காதிருப்பதன் மூலமும் நாய்க்கு அருகில் ஒடிச்செல்லாதிருப்பதன் மூலமும் நாய்க்கடியை தவிர்த்துக்கொள்ளலாம்.
உங்களிற்கு ஒரு விலங்கு கடித்துவிட்டால் அக்காயத்தினை சவர்க்காரமிட்டு ஒடும் நீரினால் கழுவவும். பின்னர் 70 வீதம் அல்ககோல் அல்லது கிருமித்தொற்றுநீக்கியால் துப்பரவு செய்யவும் சிறிய புண்ணாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். மருத்துவக்குழுவானது ஏற்பட்டிருக்கும் புண் மற்றும் கடித்த விலங்கு பற்றிய தகவல்களின் படி விசர்நாய்க்கடி தடுப்பூசி அல்லது நேபீஸ் பிறபொருளெதிரி (Antirabies serum) அல்லது அவதானிப்பில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விசர்நாய்க்கடி நோயிலிருந்து பாதுகாப்பார்.
சகிலா சிற்றம்பலம்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனாவைத்தியசாலை