ஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனிற்கு இருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது மனிதத்துவம் ஆகாது. அந்தவகையிலே நோயுற்றவர் தனது சொந்த விருப்பப்படி நடந்துகொள்ளும் உரிமையும் மதிக்கப்படவேண்டும்.
நோயுற்ற ஒருவர் மருந்தை பாவிக்காமல் இருப்பதற்கு விருப்பப்படலாம், சத்திரசிகிச்சை செய்யாமல் இருக்க விரும்பலாம், தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விருப்பப்படலாம் உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய சோதனைகளை செய்யாமல் விடுவோம் என்று நினைக்கலாம், தொடர்ந்து குடிவகைகள் பாவிக்க ஆசைப்படலாம், வேறோரு மருத்துவரின் இரண்டாவது அபிப்பிராயத்தை கேட்க விரும்பலாம், கோயிலுக்குச் சென்று சில சமயப்பெரியவர்களின் ஆசியும் அறிவுரையும் பெற்றுவர விருப்பப்படலாம், வேறு ஒரு மருத்துவ முறைக்கு மாறுவதற்கு விருப்பப்படலாம், சொந்த விருப்பத்தின் பெயரில் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல நினைக்கலாம், உணவுக்கட்டுப்பாட்டை தவிர்த்துக்கொள்ள விருப்பப்படலாம். இது போன்ற பல விருப்பங்கள் நோய்வாய்பட்ட ஒருவருக்கு இருக்க முடியும். மருத்துவத்துறையிலே ஒருவர் வாழும் காலத்தை நீடிக்கவேண்டும் எவ்வளவு முக்கியமோனதோ அதே அளவு முக்கியத்துவம் அவர் வாழும் காலத்திலே மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழவேண்டும், வாழவைக்கவேண்டும் என்பதிலும் இருக்கின்றது. எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் தமது மனநிறைவுக்காக சுகாதாரம் சம்பந்தமான தமது சொந்த விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு தயங்காமல் தெரியப்படுத்த முடியும். அந்த விருப்பங்களை நிறைவுசெய்ய உதவுவது மத்துவக் குழுவின் கடமையாகும்.
ஒவ்வொருவரும் தமது உண்மையான நிலைப்பாட்டை அல்லது விருப்பங்களை மருத்துவக்குழுவிற்கு சொல்வதனால் அவர்களின் மருத்துவக் கவனிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிவிடமுடியாது. மருத்துவக்குழு நோய்வாய்ப்பட்டவருக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த இது உதவியாக இருக்கும். அத்துடன் ஒருவர் சத்திரசிகிச்சை செய்ய விரும்பாவிடின் வேறு என்ன சிகிச்சைகள் செய்ய முடியும் எனச் சிந்திக்கலாம். சிலவகையான மருந்துகளை ஒருவர் பாவிக்க விரும்பாவிடின் வேறு எந்த மருந்துகள் மூலம் அல்லது நடைமுறைகள் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் எனச் சிந்திக்க முடியும். ஒருவர் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வீடுசெல்ல விருப்பப்படின் வீட்டுச் சூழ்நிலையிலும் கிளினிக் மட்டத்திலும் அவரின் மருத்துவக் கவனிப்பை எவ்வாறு தொடரமுடியும் எனச் சிந்திக்க முடியும். வேறு ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனையையும் பெறவிருப்பப்பட்டால் அதனையும் ஒழுங்குசெய்து கொடுக்க முடியும். புகைக்கவோ குடிக்கவோ விருப்பப்பட்டால் அதற்கு அடிப்படைக்காரணங்கள் என்ன என்பதை ஆராயமுடியும்.
மருத்துவர் கோபப்படுவார் என்று கருதி நோயுற்றவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தமது உண்மையான விருப்பங்களை மறைத்து தவறான கருத்துக்களை வெளியிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
பல சந்தர்ப்பங்களில் நோயுற்றவர்கள் தமது உண்மையான விருப்பு வெறுப்புக்களை மருத்துவக்குழுவிற்கு மறைத்து பொய்யான தகவல்களை சொல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. காரணம் சில தகவல்களையும் விருப்பங்களையும் சொன்னால் அது மருத்துவக்குழுவினுடனான உறவு நிலையை பாதிக்கும் என்ற அபிப்பிராயம் ஆகும். மருத்துவக் குழுவின் கடமையானது ஆலோசனையும் அனுசரனையும் வழங்கி சிகிச்சை அளிப்பதாக இருக்கிறதே அன்றி யாரையும் கண்டித்து தண்டித்து திருத்தமுயல்வது அதன் நோக்கமாக இருக்கமுடியாது.
சரியான ஆலோசனைகளை நோயுற்றவர் கடைப்பிடிக்காதுவிட்டால் அவருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற மனிதாபிமான அடிப்படையிலே நோயுற்றவர்களை கண்டிக்கும் நிகழ்வு பல நடைபெற்றவண்ணம்தான் இருக்கின்றன. கண்ணுக்கு முன்னால் ஒருவர் ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது அவரை தடுத்தும் கேட்காமல் அதே திசையில் அவர் சென்றுகொண்டிருக்கும்பொழுது அதனை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது யாருக்கும் மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த நிலையே பல சமயங்களில் மருத்துவனுக்கும் ஏற்படுகிறது. எது எவ்வாறாக இருப்பினும் நோயுற்றவருடன் கோபப்படுவது சரியான செயலாகாது.
தொடரும்……
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனாவைத்தியசாலை.