தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றி விஞ்ஞானிகள் கவலைகொண்டுள்ள நிலையில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்ற தேனீ இனத்தை பாதிக்காமலேயே தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டுபிடித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ‘புனல்‘ வடிவத்தில் வலைபின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்ஸின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய இரசாயன மூலக்கூற்றை இந்த பூச்சிக்கொல்லி மருந்து கொண்டிருக்கிறது.
செயற்கை இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பான மாற்றாக இந்த இயற்கை வழி பூச்சிக்கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம் என்று கருதப்படுகிறது.
நாம் உணவுத் தாவரங்கள் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Proceedings of the Royal Society என்ற அறிவியல் சஞ்சிகையில் இது பற்றிய ஆராய்ச்சியின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.