( தேசிய புகையிலை எதிர்ப்புத்தினத்தையோட்டி (2014) நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை)
நெருப்பில்லாது புகையாதென்பது பழமொழி
புகையில்லாது வாழ்வேதென்பது சிலர் வழி
கருவறை தொடங்கி கல்லறை வரையுமே
வாழ்க்கை வழி
சிகரேட் புகையுண்டு சீக்கிரம் செல்வதே
சிலரின் வழி
உறவுக்குப் பகை இங்கு கடனென்பார்கள்
இது உலக வழக்கு
உயிருக்கு பகையிந்தப் புகையென்கிறார்கள்
இது நோய் நிலை கணக்கு
உயிர் நீத்த உடலத்தை சிதையேற்றி
தீ முட்டல் மரபு
உயிர் உள்ள உடலுள்ளே புகையேற்றி
எரிந்தழிதல் நிகழ்வு
காற்றறையில் புகையேற
போதை மெல்லத் தலையேற
நுரையீரல் நிறம்மாற
நுண்கலங்கள் செயல்மாற
உடல் மெல்ல மெலிவாக
உள்மனமும் தடம்மாற
கல்லான காயது
கனியாகும் வகைதனில்
பொல்லாத நோய் வந்து
சொல்லாமல் கொண்டு போகும்
விதையது மண்புகுந்தால்
முளை கொண்டு மேலெழும்
புகையது உடல் புகுந்தால்
மூளை மாய்த்து உயிர் கொல்லும்
தடை செய்ய வேண்டும் என்ற
விடை சொல்லாப் பலர் இருந்தும்
வருமானம் தரும் வழியில்
பெறுமானம் கொண்டதனால்
அபாயக் குறியிட்டு
அச்சுறுத்தல் பல இட்டு
வயதுக்கு வந்தவர்க்கு
வசதியாய் விற்பதனால்
பிழை எம்மில் இல்லை என்று
பிழைக்கத் தெரிந்தோர் எண்ணினாலும்
புகையிலைக்கு அடிமையாகி
பகையாகி உயிருடன்
விடைபெறுவோர் எம்மினமே
ஆறறிவு எமக்கிருந்தும்
ஆற்றல்கள் பல இருந்தும்
அடிமையான பழக்கத்தால்
அழிவு என்று அறிந்திருந்தும்
விலை கொடுத்து வாங்கி இதை
விலையில்லா உயிர்மாய்க்க
தினம் புகைக்கும் பழக்கத்தால்
தற் கொலையைத் தவணைமுறையில்
தவறாது செய்வோராவோம்
எனவே……. …… …..
பகையாகும் புகைவிலத்தி
வகையாக வாழ்வுயர்த்தி
வளமுடன் வாழ்ந்து மண்ணில்
வாழ்வோர்க்குப் பாடமாவோம்
ஆக்கம் அ.எ.பீரிஸ்
தாதியர் பயிற்சிக் கல்லூரி
யாழ்ப்பாணம்