நோயுற்று அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நிற்கும் மனிதர்களின் உரிமைகளை் மதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எம் அனைவரது மனங்களிலும் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகிலே மனித உரிமை மீறல்கள் பற்றி அடிக்கடி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே மேலைத்தேச நாடுகளிலே விலங்குரிமை பற்றிக்கூட கரிசனை காட்டப்பட்டு வருகின்ற நிலையில் எமது நோய் வாய்ப்பட்ட மக்களின் உரிமை மீறல்கள் பற்றி நாம் சிந்திக்கத்தவறுவது நியாயமாகாது.
பொது மக்களுக்கு மட்டுமல்ல மருத்துவத்துறையினருக்கும், பத்திரிகைத்துறையினருக்கும், அரசு தரப்பு அதிகாரிகளுக்கும், ஏன் காவல்துறையினருக்கும் கூட நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் சம்பந்தமாக இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் போதாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
ஒருநோயாளியினுடைய நோய் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஒரு பொதுவிடயம் அல்ல. பலரும் பேசி ஆராய்வதற்கு இது ஒரு செய்தி அல்ல, பத்திரிகைகளில் பிரசுரித்து அம்பலப்படுத்துவதற்கும் ஒருவர் நோய்வாய்படுவது மற்றவர்கள் “விசா” எடுப்பதற்கும் இடமாற்றம் பெறுவதற்கும் நிவாரணம் பெறுவதற்குமான ஒரு துருப்புச் சீட்டு அல்ல. ஒருவர் நோயுற்றிருப்பது பலரும் போய் விசாரிப்பத்கான விடுப்புச் செய்தி அல்ல. இது அந்த நோயாளியும் அவர்தம் உறவுகளும் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான, அந்தரங்கமாக விடயம். இதனை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது.
நோயுற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பலதரப்பட்டவர்களாலும் அப்பட்டமாக மீறப்படுவதற்கான காரணம் என்ன? ஒருவர் நோயுற்று இருக்கும் காலத்திலே அவர் மதிக்கபடுவதிலும் வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் அவருடைய நோய்நிலைமை சம்பந்தமான இரகசியத் தன்மை பேணப்படுவதிலும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதிலும், சமவாய்ப்புக்களையும் கவனிப்புகளையும் பெற்றுக்கொள்வதிலும் சுயாதீனமாக தனது சிகிச்சை சம்பந்தமான விடயங்களைத் தீர்மானிப்பதிலும் தனக்கு இருக்கும் குறை நிறைகளை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வதிலும் அவர் எவ்வாறான உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. வைத்தியசாலைகளில் நோயுற்றவரின் உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன? இயலாத சூழ்நிலையில்தான் முன்பு தேடிவைத்த சொத்துக்களைத் தனது மருத்துவத் தேவைகளுக்காகவும் அன்றாட தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதிக்கொள்வதில் அவர் எதிர்கொள்ளும் சிரமங்களும் தலையீடுகளும் என்ன? என்பது பற்றி எல்லாம் பரந்துபட்ட விதத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
பொதுமக்கள் சுகாதாரத்துறையினர், ஊடகத்துறையினர் அரச அதிகாரிகள், காவல்துறையினர் என அனைத்துதரப்பினரிடையேயும் நோய் வாய்ப்பட்டிருக்கும் ஒருவருக்கு இருக்கின்ற அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஒரு விழிப்புணர்வு ஏற்படும் பொழுது அந்தப் பிரதேசத்தின் சுகாதார நிலை பல வழிகளிலும் முன்னேற்றம் அடையும்.
வைத்தியசாலைகளில் தாம் அவமதிப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாவதாகக் கருதி வைத்தியசாலைகளுக்குச் செல்லாது ஆபத்துக்களை தேடிக்கொள்பவர்கள் எத்தனை பேர்? வைத்தியருக்கு சொல்லும் தனது நோய் நிலை சம்பந்தமான இரகசியத்தன்மை பேணப்படுமா? என்ற சந்தேகத்தில் இக்கட்டான சில உண்மைகளை மறைப்பதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் தாக்கங்கள் எத்தனை? இரகசியம் பேணப்படவேண்டிய மருத்துவத் தகவல்களைப் பத்திரிகையில் பிரசுரித்து அம்பலப்படுத்தப்படுவதால் ஏற்படும் அவமானத்தால் நிகழ்ந்துவரும் சுகாதாரத் தாக்கங்கள் எத்தனை? தராதரம் குறைந்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் ஏற்பட்டுவரும் பாதிப்புக்கள் எத்தனை? இவ்வாறாக பற்பல விதங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களால் நோயுற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பரந்துபட்ட அளவில் மீறப்பட்டு வருகின்றன.
தொடரும்….
Dr.சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.