சிறுபிள்ளைகளில் ஏற்படும் உடற்பருமனடைதலானது உலக அளவிலேயே பாரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. தொற்றாத நோய்களில் ஒன்றாக கருதப்படும் உடற்பருமனடைதல் கடந்த சில தசாப்தங்களாக பெருமளவில் அதிகரித்து வருகின்றது.
பிள்ளையின் உடற்திணிவுச் சுட்டியானது (பிள்ளையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேட்டிலுள்ள வரைபுக்கமைய) 98வது சென்ரலை(98th centile) விட அதிகமாக உள்ள போது உடற்பருமனடைதல் நோயாகவும் 85வது சென்ரைலை(85th centile) விட அதிகமாக உள்ள போது அதிக எடையுள்ள பிள்ளையாகவும் கருதப்படும்.
உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவுக்கும், செலவிடப்படும் கலோரியின் அளவிற்கும் இடையில் உள்ள சமமின்மை காரணமாகவே உடற்பருமனடைதல் என்னும் நோய் ஏற்படுகின்றது.
பெரும்பாலான பிள்ளைகள் உடற்பருமன் அதிகரிப்பதற்கு அதிக கலோரி அடங்கிய உணவு வகைகளை உள்ளெடுப்பதும், உடற்பயிற்சி செய்யும் வீதம் குறைவடைந்துள்ளமையுமே பிரதான காரணிகள் ஆகும். அதிக கலோரி அடங்கிய உணவு வகைகளாக துரித உணவுகள் (Fast foods), சோடா வகைகள், சொக்லேட், இறைச்சி வகைகள், மாப்பொருள் கூடிய சீனிச்சத்துள்ள உணவுவகைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையான உணவுவகைகளின் கலோரிப் பெறுமானம் எமக்கு நாளாந்தம் தேவையான கலோரிப் பெறுமானத்திலும் பல மடங்கு அதிகமாகும். மேலதிகமாக உள்ளெடுக்கப்படும் கலோரி எமது உடலில் கொழுப்பிழையமாக சேமிக்கப்பட்டு உடல் நிறை அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது.
தற்போது பிள்ளைகளின் பொழுதுபோக்குகளாக தொலைக்காட்சி பார்த்தல், கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல், கைத்தொலைபேசி பாவனை போன்றனவே காணப்படுகின்றன. இதனால் பெரும்பாலான நேரத்தை ஒரிடத்தில் இருந்தவாறே செலவழிக்கின்றனர். இதன் போது அவர்களது உடலில் இருந்து இழக்கப்படும் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது.
உடற் பருமனடைதல் நோயினால் பிள்ளைகள் உடல், உள பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். உடற் பாதிப்புகளாக நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம், இதய நோய்கள், ஈரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள், என்புக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், கூனல் ஏற்படல், தூக்கத்தில் மூச்சுத் திணறல், பித்தப்பையில் கல் உருவாதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். உளப் பாதிப்புகளாக மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவடைதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
உடற்பருமனடைதல் நோயானது தடுக்கப்படக் கூடிய ஒன்றாகும் இதற்கான நடவடிக்கைகளை வீடு, பாடசாலை, சமூகமட்டம் என்பவற்றிலிருந்தே ஆரம்பிக்கலாம். பிள்ளையின் உடற்பருமனடைதல் தாயின் கர்ப்பத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. இதனால் கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சலரோக நோயை தகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், அநாவசியமாக தாய்ப்பால் தவிர வேறு பால்மா வகைகளை கொடுப்பதை தவிர்த்தல், இனிப்பான உணவுகளை அதிகளவில் கொடுப்பதை தவிர்த்தல் என்பவை ஆரம்பத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் ஆகும். வீட்டில் உணவு வேளையில் மாத்திரம் உணவுண்ணல், உணவு உண்ணாது இருப்பதை தவிர்த்தல், முக்கியமாக காலை உணவு, உணவுண்ணும் போது தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்தல், அளவுக்கதிகமாக இனிப்பு வகைகளையோ, குளிர்பானங்களையோ வழங்குவதை தவிர்த்தல். குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தையும், கணினி தொலைபேசி போன்றவற்றில் விளையாட்டுக்களில் ஈடுபடும் நேரத்தையும் மட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பாடசாலைகளில் இனிப்பு வகைகள், குளிர்பான வகைகள் என்பன விற்கப்படுவதை தவிர்த்தல், பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை என்பவற்றை பற்றி அறிவூட்டல், பிள்ளைகளை விளையாட்டுக்களில் ஆர்வமூட்டல்( முக்கியமாக பருமனான பிள்ளைகளை) என்பவற்றை மேற்கொள்ளலாம்.
சமூக மட்டத்தில் பொதுவான விளையாட்டுத் திடல்களை உருவாக்கி விளையாட்டுக்களில் ஆர்வமூட்டல், ஆரோக்கியமான உணவுகளையும் பழவகைகளையும் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை ஊக்குவித்தல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பருமனான பிள்ளைகள் அழகாக இருக்கின்ற போதிலும் அவர்கள் வளர்ந்த பின்னும் அதிக உடற்பருமனை கொண்டவர்களாக காணப்படுவதுடன், சிறு வயதிலிருந்து உடலில் ஏற்படும் மாற்றங்கள் நீண்டகால நோய்களையும் பல்வேறான உடல் சம்பந்தமான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது. இதனால் சிறு பிள்ளைகளில் ஏற்படும் உடற் பருமனடைதல் எனும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வைத்திய ஆலோசனைப்படி நிவர்த்தி செய்தல் வேண்டும்
கிந்துஷா ஸ்ரீசெல்வசதீஸ்குமார்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை.